

அன்று பிரான்ஸில் ஆங்காங்கே மதத் துவேஷ சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. மதவெறி தாக்குதலுக்கு எதிராக, வோல்டேர் களமிறங்கினார். “உனக்குத் தேவையான தோட்டத்தை, நீயே பயிர் செய்” என்ற வோல்டேரின் எழுத்துக்கள் பிரெஞ்சு புரட்சிக்கு உரமாக அமைந்தது.
தேவாலயத்திற்கு எதிராகவும் அதன் அநீதிக்கு எதிராகவும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்தார். 1760களில் புரட்டஸ்தாந்து பிரிவைச் சார்ந்த, ஜீன் கலாஸ் என்பவர் தன் சொந்த மகனைக் கொலை செய்ததாகச் சொல்லி பொய்யாக ஜோடித்துத் துன்புறுத்தப்பட்ட போது, நீண்ட போராட்டத்தின் பயனால் வோல்டேர் அவருக்கு விடுதலை பெற்றுத் தந்தார். இதன்மூலம் பிரெஞ்சு நீதித்துறையின் அவலங்கள் அம்பலமானது.
பன்முகப் புரட்சியாளர்: வோல்டேர் விஞ்ஞானி இல்லை, ஆனால் விஞ்ஞான எழுத்துக்களில் ஆர்வம் செலுத்தினார். வரலாற்று ஆய்வாளர் இல்லை, ஆனால் வரலாற்றுப் புத்தகங்கள் எழுதினார். உண்மையில் அவர் ஓர் அசல் தத்துவஅறிஞர்கூட இல்லை. தன் காலத்து அறிஞர்களான ஜான் லாக், பிரான்சிஸ் பேக்கன் போன்றோரின் கருத்துக்களைப் பரவலாக்கம் செய்யும் வேலையில்தான் ஈடுபட்டார்.
‘ஐரோப்பா ஒன்றே உலகம் இல்லை, உலகில் ஓர் அங்கமே ஐரோப்பா’ என்று மேற்கத்திய அபிப்பிராயத்தில் மண்ணைவாரிப் போட்டார். ஜனநாயகம், மதச் சகிப்புத்தன்மை, தாராளவாத சிந்தனை குறித்து பிறரின் எழுத்தைக்காட்டிலும் இவரின் எழுத்துக்களில் தீப்பொறி பறந்தன. ஐரோப்பா அறிவொளி இயக்கத்தின் தோற்றத்திலிருந்து ஏற்றம்வரை இவர் தத்துவங்கள் துணை நின்றன.
அதிகாரத்தோடு கடமைகளும் வருகின்றன: தன் உலகப் புகழ்பெற்ற நாவலில் வரும் ‘கேண்டீட்’ கதாப்பாத்திரத்தின் மூலம் உலகின் நடப்பியல் சார்ந்த பல அநீதிகளைக் கேலிக்கு உள்ளாக்கினார். உலகை மேம்படுத்துவதற்கான வழியைச் சொல்வதனால், நூற்றாண்டுகள் கழித்தும் மக்கள் இப்புத்தகத்தை நேசிக்கின்றனர். பெரும் அதிகாரம் வாய்க்கும்போது, அதைக் கையாளும் பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றவர், இறுதிவரை தன் எழுத்துக்கு நேர்மையாக வாழ்ந்தார்.
“வாசிப்போம், நடனமாடுவோம்; இந்த இரண்டு கேளிக்கைகளும் உலகை ஒண்ணும் செய்யப்போவதில்லை” எனும் ஒற்றை வாசகம், வோல்டேர் வாழ விரும்பிய வாழ்க்கையைக் கண்முன் நிறுத்தப் போதுமானது. பிரெஞ்சு புரட்சியைக் காண அவர் உயிரோடு இல்லை என்றாலும், அவர் எழுத்துக்கள் உயிரோடு இருந்தன.
வோல்டேரின் மரணம்: தேவாலயங்கள் வெளிப்படுத்தும் துவேஷங்களுக்கு எதிராக, தன் வாழ்நாள் முழுக்க அவர் குரல் கொடுத்திருந்தார். அதை மனத்தில் வைத்திருந்த தேவாலய நிர்வாகம், அவர் இறந்த பிற்பாடு இறுதிச் சடங்கு செய்ய அனுமதிக்கவில்லை. சுலபமாக மண்ணைப் போட்டு மூடிவிட்டனர். சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, வெற்றிப் பெற்ற புரட்சியாளர்கள் மீண்டும் அவர் உடலைத் தோண்டியெடுத்து பாரிஸில் உள்ள பான்தியோனில் முறைப்படி அடக்கம் செய்தனர்.
வோல்டேர் பிரெஞ்சு மக்களுக்கு மட்டும் வெளிச்சம் பாய்ச்சியவர் அல்லர். பெஞ்சமின் பிராங்க்ளின், தாமஸ் ஜெபர்சன், ஜேம்ஸ் மேடிசன் போன்ற பல முன்னோடிகள் அவரின் சித்தாந்தத்தை ஏற்று நடந்தார்கள். “எல்லாவித அநீதிகளும் விடுதலையில் முடிகின்றன” என்ற பொன்னான வாசகத்தின் நினைவு வரும்போதெல்லாம், வோல்டேர் பற்ற வைத்த நெருப்பின் தகிப்பையும் சேர்த்தே நினைத்துக் கொள்ள வேண்டும்!
- கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர்; தொடர்புக்கு: iskrathewriter@gmail.com