முத்துக்கள் 10 - வயலின் வாசிப்பில் ஞானப்பார்வை பெற்றவர்

முத்துக்கள் 10 - வயலின் வாசிப்பில் ஞானப்பார்வை பெற்றவர்
Updated on
2 min read

பிரபல வயலின் கலைஞர் துவாரம் வெங்கடசாமி (Dwaram Venkataswamy) பிறந்த தினம் இன்று (நவம்பர் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:

# கர்நாடக மாநிலம் பெங்களூருவில் (1893) ஒரு தீபாவளி நன்னாளில் பிறந்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வளர்ந்தார். தந்தை இசைஞானம் உள்ளவர். வயலின் வாசிப்பார். அண்ணன் வெங்கடகிருஷ்ணய்யா, வயலின் வித்வான். வீட்டில் அடிக்கடி நடக்கும் பஜனையில் வெங்கடசாமி பாடுவார்.

# பார்வைத் திறன் குறைந்த இவரை மாணவர்கள் கேலி செய்ததால், இவரது பள்ளிப் படிப்பை தந்தை நிறுத்திவிட்டார். சிறுவனுக்கு வயலின் வாசிப்பதில் இருந்த ஆர்வத்தை அறிந்த அண்ணன், தானே முதல் குருவாகி தம்பிக்கு கற்றுக்கொடுத்தார்.

# வயலினை இவர் அனாயாசமாக கையாள்வதைக் கண்ட அண்ணன், இவரது இசை ஞானத்தை வளர்க்க வீணை சேஷண்ணா, சங்கமேஸ்வர சாஸ்திரி, கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர் உள்ளிட்ட பிரபல வித்வான்களின் கச்சேரிகளுக்கு அழைத்துச் சென்றார். அவற்றைக் கேட்டும், பயிற்சி செய்தும் தன் இசை ஞானத்தை பட்டை தீட்டிக்கொண்டார் வெங்கடசாமி.

# விஜயநகரம் மஹாராஜா இசைக் கல்லூரியில் இசைப்படிப்பில் சேர 1919-ல்விண்ணப்பித்தார். நேர்முகத் தேர்வில் இவரது வயலின் வாசிப்பைக் கேட்ட கல்லூரி நிர்வாகம் இவரை கல்லூரிப் பேராசிரியராகவே நியமித்தது.

# சென்னையில் 1927-ல் காங்கிரஸ் மாநாட்டையொட்டி நடந்த இசை மாநாட்டில் வாசித்தார். காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளை, அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், பல்லடம் சஞ்சீவிராவ், முசிறி சுப்பிரமணிய ஐயர் ஆகியோருக்கு பக்கவாத்தியம் வாசித்தார். பார்வையற்றோர் நல நிதிக்காக பல கச்சேரிகள் நடத்தியுள்ளார்.

# அகில இந்திய வானொலியிலும் பல நிகழ்ச்சிகளில் வாசித்துள்ளார். ஏராளமான இசைத்தட்டுகள் வெளியானதால் பிரபலமடைந்தார். கர்னாடக இசையை அதன் பாரம்பரியத் தன்மை மாறாமல் கையாண்டவர். தனக்கென தனி பாணியை வகுத்துக்கொண்டவர். தனிவயலின் கச்சேரி நடத்திய முதல் கலைஞர்இவர்தான். இவரது முதல் தனிக் கச்சேரி 1938-ல் வேலூரில் நடந்தது.

# விஜயநகரம் மஹாராஜா கல்லூரி முதல்வராக 1936-ல் பொறுப்பேற்றார். இசை குறித்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார். தனது மாணவர்களுக்கு நண்பனாக, வழிகாட்டியாக, தத்துவ ஆசானாகவும் திகழ்ந்தார்.

# மாணவர்கள் தினமும் பயிற்சி செய்யவேண்டும் என்று வலியுறுத்துவார். ‘பயிற்சியை ஒருநாள் விட்டால், உங்கள்தவறுகளை நீங்களே கண்டுபிடித்துவிடலாம். 2 நாட்கள் விட்டால், உங்கள்தவறுகளை ரசிகர்கள் கண்டுபிடிப்பார்கள்’ என்பார்.

# சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, பத்மபூஷண் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். ஆந்திர பல்கலைக்கழகம் ‘கலா ப்ரபூர்ண’ என்ற கவுரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. இப்பட்டம் பெற்ற முதல் இசைக் கலைஞர் இவர். ‘‘இந்திய மக்களுக்கு சரஸ்வதியின் கொடையாக கிடைத்தவர் இவர்” என்றார் ராஜாஜி.

# இசைக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட துவாரம் வெங்கடசாமி 1964-ல் ஆந்திர சங்கீத நாடக அகாடமி விழாவுக்காக ஹைதராபாத் சென்றபோது மாரடைப்பால் காலமானார். அப்போது அவருக்கு வயது 71. இவரது பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு 1993-ல் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in