போவோமா ஊர்கோலம் - 20: குளத்துக்கு நடுவே ஜொலிக்கும் அமிர்தசரஸின் தங்கக் கோயில்

போவோமா ஊர்கோலம் - 20: குளத்துக்கு நடுவே ஜொலிக்கும் அமிர்தசரஸின் தங்கக் கோயில்
Updated on
2 min read

சண்டிகரில் இருந்து அடுத்து நாம் செல்லப்போவது அமிர்தசரஸ் நகருக்கு. அமிர்தசரஸில் இருக்கும் பொற்கோவிலுக்கு செல்ல வேண்டும், மிகப்பழமையான நகரத்தின் வீதிகளில் நடக்க வேண்டும் என்பது இந்த பயணத்தில் தவறவிடக் கூடாத ஒன்றாகத் தீர்மானித்து இருந்தோம். அதற்காகவே சண்டிகரிலிருந்து அதிகாலையிலேயே கிளம்பினோம்.

டெல்லியில் நடந்த பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நினைவிருக்கிறதா, லட்சக்கணக்கான பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் இரவு பகலாக போராடினார்களே, அந்த போராட்டத்தில் தமிழ் பேசும் ஒரு பஞ்சாப் விவசாயி, அப்போது தமிழ் ஊடகங்களுக்குத் தொடர்ச்சியாக அங்கு நடக்கும் விஷயங்களை செய்தியாகவும் நேர்காணலாகவும் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் பெயர் கோல்டன் சிங்.

பிறந்து வளர்ந்தது கோவையில், தற்போது பஞ்சாபில் வசித்து வருகிறார். செய்திக்காக தொடர்ச்சியாக அவரிடம் பேசி இருக்கிறேன். பஞ்சாப் செல்லும் திட்டம் இருந்ததும், கோல்டன் சிங்கை சந்திக்காமல் சென்றால் நன்றாக இருக்காது அல்லவா.. அதனால் சண்டிகரிலிருந்து அமிர்தசரஸ் செல்லும் வழியில் இருக்கும் அவர் ஊருக்கு சென்று, அங்கிருக்கும் குருத்வாராவில் அவரை சந்தித்துவிட்டு, அந்த குருத்வாராவின் தலைவரிடம் ஆசி வாங்கிவிட்டு அமிர்தசரஸ் நோக்கி மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம்.

அனைவருக்கும் அன்னமிடும் பொற்கோவில்: இந்த பயணத்துக்காக வீட்டில் இருந்து கிளம்பி ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. வீடியோ காலில் தான் மொத்த குடும்பத்திடமும் பேசுகிறோம். அன்று எங்கள் குடும்பத்தில் மிக முக்கியமான விழா, பஞ்சாப் மாநிலத்தின் ஏதோ ஒரு பகுதியில் இருந்தாலும், வண்டியை கொஞ்சம் ஓரமாக நிறுத்திவிட்டு, அந்த முழு விழாவையும் ஆன்லைன் வழியாக பார்த்து மகிழ்ந்தோம்.

மீண்டும் நண்பர்களையும் குடும்பத்தையும் ஒருசேர அந்த நிகழ்வில் வீடியோ காலில் பார்த்தது அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்தது. நிறைய ஓய்வெடுத்து வந்ததால், அமிர்தசரஸ் சென்றடைய இரவாகிவிட்டது. அமிர்தசரஸ் பொற்கோவிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலேயே அறை எடுத்து தங்கி இருந்தோம்.

மறுநாள் காலை பொற்கோவிலுக்கு சென்றோம். பாதுகாப்புக்கு நிறைய காவல்துறையும் மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் ஒரு சேர இருந்ததை பார்க்க முடிந்தது. மிக பிரம்மாண்டமான கோயில். வெளியே நூற்றுக்கணக்கான பேர் அமைதியாக உட்கார்ந்து இருந்தார்கள். யார் எந்த குருத்வாராவுக்கு சென்றாலும், தலையில் சின்ன துணியாவது கட்டி இருக்க வேண்டும். அதை மதித்து நாமும் அப்படியே பொற்கோவிலுக்கு சென்றோம். ஒரு பெரிய குளத்துக்கு நடுவில் ஜொலித்துக்கொண்டிருந்தது தங்கக் கோயில்.

குளத்துக்கு நடுவில் இருக்கும் கோயிலுக்கு செல்ல நடுவே ஒரு பாதை அமைத்திருந்தார்கள். ஆயிரக்கணக்கான பேர், வரிசையில் நின்று கோயிலுக்கு உள்ளே சென்று கொண்டிருந்தார்கள். தரிசனம் செய்துவிட்டு வந்தவர்கள் எல்லாம், அங்கிருக்கும் சுவர்களில் சாய்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

தரிசனம் முடித்துவிட்டு, அந்த குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தோம். எதைப்பற்றியும் சிந்திக்காமல், அந்த நிமிடம் கொடுத்த புத்துணர்ச்சியால் மனம் லேசாகிவிட்டது. மனம் முழுதும் ஒரு புது தெம்பு பாய்ந்தோடியது போல இருந்தது. அந்த குளத்திலிருந்த பெரிய பெரிய வண்ண மீன்கள் நம்மோடு கொஞ்ச நேரம் கண்ணாமூச்சி விளையாடியது.

சேவை என்பது மிகப்பெரிய தொண்டு. அதை சிறப்பாக செய்துவருகிறது பொற்கோவில் நிர்வாகம். அமிர்தசரஸ் நகரில் இருக்கும் யாரும் இதுவரை உணவின்றி தூங்கியது இல்லை என்கிறார்கள். இதற்கு ஒரே காரணம், சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலில் இருக்கும் சமூக சமையற்கூடம்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில்<br />தமிழ் பேசிய கோல்டன் சிங்குடன்
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில்
தமிழ் பேசிய கோல்டன் சிங்குடன்

ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இங்கு உணவருந்துகிறார்கள். உணவு சமைத்து பரிமாறுவது தாண்டி, தண்ணீர் கொடுப்பது, சாப்பிட்ட பாத்திரங்களை கழுவுவது, அதை மீண்டும் எடுத்து வந்து வைப்பது என அங்கிருந்த எல்லோருமே சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறார்கள்.

அன்று மதியம் நாமும் அங்குதான் உணவருந்தினோம். சப்பாத்தி, காய்கறிகள் அதோடு பால் சாதமும் அன்று எங்களுக்கு பிரசாதமாகக் கிடைத்தது. பசிக்கு மட்டும் உணவு வாங்குங்கள்.. சாப்பிடாமல் தட்டில் வைத்தால் எவ்வளவு நேரமானாலும் அதை சாப்பிட்டு முடித்தால் மட்டுமே வெளியே விடுகிறார்கள். 'உணவை வீணாக்காதீர்கள்' இதை தான் நமக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுத்தார்கள்.

- கட்டுரையாளர்: இதழியலாளர், பயணப் பிரியை; தொடர்புக்கு: bharaniilango@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in