கற்றது தமிழ் - 20: ஔவை வாழ்ந்தால் தமிழ் வாழும்

கற்றது தமிழ் - 20: ஔவை வாழ்ந்தால் தமிழ் வாழும்
Updated on
2 min read

பழம் நீ அப்பா! ஞானப் பழம் நீ அப்பா! தமிழ் ஞானப் பழம் நீ அப்பா! என்று ஔவையார் முருகனைப் பாடிக்கொண்டிருந்தார் தொலைக்காட்சித் திரையில். முதியவராக நெற்றி நிறைந்த திருநீர்ப் பட்டையோடு, கையில் ஊன்று தடியோடு இருந்தது, ஔவையின் தோற்றம்.

அப்பா: என்ன கம்பீரமான குரல்...

அம்மா: ஔவைன்னு சொன்னாலே கே.பி.சுந்தராம்பாள் முகம் தான் நினைவுக்கு வருது. பாட்டும் தோற்றமும் அவருக்கு அவ்வளவு பொருத்தம்.

குழலி: அம்மா, நானும் பாத்திருக்கேன். பாடப் புத்தகங்கள்லகூட ஔவையார்னா, இவங்க படத்தைத் தான் போட்ருக்காங்க.

சுடர்: பாரி மகளிரைப் பாதுகாத்ததாச் சொன்ன அந்த ஔவையும் முருகனோடு பேசுற இந்த ஔவையும் ஒருத்தரா...

குழலி: சரியான கேள்வி சுடர். ஔவையார் ஒருத்தரா இருக்க முடியாது. நம்ம இலக்கிய வரலாற்றுல ஆறு ஔவைகள் இருந்ததாச் சொல்றாங்க. தாயம்மாள் அறவாணன் மகடூஉ முன்னிலைன்னு ஒரு நூல் எழுதியிருக்காங்க. அவங்களே ஒளவையார் அன்று முதல் இன்று வரைன்னு ஒரு நூலையும் எழுதியிருக்காங்க. இந்த நூல்கள்ல ஔவை ஒருத்தர் இல்ல, பலர்னு சொல்லியிருக்காங்க.

சுடர்: ஆறு ஔவைகளா...

குழலி: ஆமா சுடர். இன்னொரு ஆய்வாளர் ஏழு ஔவையார்கள் இருந்ததாச் சொல்றாங்க.

சுடர்: ஓ... ஆனா இவங்க எல்லாரையுமே நாம இந்தப் பாட்டி வடிவத்துலதான் பார்க்குறோம்.

குழலி: சங்க கால ஒளவை, இடைக்கால ஒளவை, சோழர் கால ஒளவை, சமயப் புலவர்ஒளவை, பிற்கால ஒளவையார்கள் ரெண்டு பேர்னு ஆறு ஒளவையார்களச் சொல்றாங்க. உனக்கு அதியமான் நெல்லிக்கனி கொடுத்த ஔவையப் பத்திச் சொல்லட்டுமா... புறநானூற்றுல 91வது பாட்டு. ஔவை அதியமானைப் பாடின பாட்டு. பாடாண் திணையில, வாழ்த்தியல் துறையில அமைஞ்ச பாட்டு.

சுடர்: வாழ்த்துறதுக்குன்னே ஒரு தனித் துறையா...

குழலி: ஆமா. இப்ப நம்மளப் பெரியவங்கள்லாம் வாழ்த்துறாங்களே... பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்கன்னு. அதைப் போல, இயற்கைப் பொருள்களோட, குறிப்பா என்னைக்கும் நிலைச்சிருக்கிற பொருள்களோட, பண்புகளோட ஒப்பிட்டு, அதை உவமைகளாக வச்சி வாழ்த்திப் பாடுவாங்க புலவர்கள். சூரியனைப் போல, சந்திரனைப் போல, மழையைப் போல நிலைத்து வாழணும்னு மன்னனை வாழ்த்தியிருக்காங்க.

.... நீல மணிமிடற்று ஒருவன் போல

மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்

பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட

சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,

ஆதல் நின்னகத்து அடக்கிச்,

சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே. (புறநானூறு : 91)

இந்தப் பாட்டுல அதியமானோட புகழ், நீல நிறமுடைய கழுத்தினைக் கொண்ட சிவபெருமானின் இருப்பும் அருளும் எப்படி எல்லாக் காலத்துலயும் மக்களால உணரப்படுதோ, போற்றப்படுதோ அதைப் போல அதியமானின் புகழும் நிலைச்சிருக்கட்டும்னு வாழ்த்திப் பாடியிருக்காங்க.

சுடர்: அதியமான் கொடுத்தது அதிசயமான நெல்லிக்கனி தான.

குழலி: இளமை குறையாம, நோய் நொடி அண்டாம, எப்போதும் மூப்பே இல்லாத வாழ்வ அந்த நெல்லிக்கனி தருமாம். அதியமான் தன்னைப் பத்தி நினைக்காம, தமிழையே தன் வாழ்வா நினைக்கிற ஔவைக்கு அந்த நெல்லிக்கனியைக் கொடுத்தானாம். ஔவையும் ஔவையால தமிழும் வாழ்ந்தா இந்தத் தமிழ் நிலத்துக்கே பெரும் கொடைன்னு நினைச்சானாம்.

சுடர்: அதிசயமான நெல்லிக்கனியோ இல்லயோ. ஆனா இன்னைக்கும் நெல்லிக்கனி இளமையைப் பராமரிக்கவும், நோய் எதிர்ப்பு ஆற்றலக் கொடுக்கவும், உயிர்ச் சத்துகளப் பாதுகாக்கவும் கூடிய அற்புதமான கனியாத்தான் இருக்கு.

குழலி: நீ சொல்றது ரொம்பவே சரி சுடர். அதியமான் கொடுத்த நெல்லிக்கனியால ஔவை நீண்ட காலம் வாழ்ந்தாங்களோ இல்லையோ, அவங்களோட இணையில்லாத் தமிழால ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல நம்மோட வாழ்ந்துக்கிட்டுத்தான இருக்காங்க.

சுடர்: அந்த நெல்லிக்கனிய ஔவை சாப்பிட்டதுனால தான் நீண்ட காலம் வாழ்ந்திருப்பாங்க; எல்லாக் காலத்துலயும் ஔவைங்கிற பேர்ல பாடின பாட்டையெல்லாம் இந்த ஒரு ஔவையே பாடியிருப்பாங்கன்னு நினைச்சிட்டோமோ...

குழலி: அதுமட்டுமில்ல சுடர். ஔவைன்னா பாட்டியாத்தான் இருப்பாங்கன்னும் நினைச்சிட்டோம். ஆனா அதிய நெல்லிக்கனியச் சாப்பிட்ட ஔவை இளமையாத்தான இருக்கணும்... ஔவைன்னாஎன்ன பொருள்னு தெரியுமா.. அடுத்து பேசுவோம்.

- கட்டுரையாளர்: தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in