

தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் கேப்டவுனில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. ஆனால், நாட்டின் கிழக்குப் பகுதிகளில் நீர் வளம் சிறப்பாக இருக்கிறது. வடமேற்குப் பகுதியில் ‘கலஹரி’ பாலைவனம் இருக்கிறது. வட கிழக்கில் உள்ள க்ருகர் தேசியப் பூங்கா, சுமார் 20000 கி.மீ. பரப்பளவுக்கு விரிந்து கிடக்கிறது. நீண்ட கடற்கரைக்கு இணையாக கேப் ஃபோல்ட் மலைத் தொடர் இருக்கிறது.
இதனை ஒட்டியுள்ள நிலம், பாலை போன்று வறண்டு உள்ளது. கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், ஆண்டு முழுவதும் நல்ல மழைப் பொழிவு கிடைக்கிறது. இங்கு, ‘தோட்டப் பாதை’ (‘கார்டன் ரூட்’) என்று அழைக்கப்படும் வனப்பகுதி அமைந்துள்ளது. தென்மேற்கு எல்லையில், அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டி, கேப் தீபகற்பம், வளமாக இருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நான்கு மாதங்களுக்கு குளிர் காலம் ஆகும். சமீப காலமாக கோடையில் அதீத வெப்பக்காற்று வீசுகிறது. பல்லுயிரிப் பெருக்கத்தில் தென் ஆப்பிரிக்கா சிறந்து விளங்குகிறது. தென் ஆப்பிரிக்க சிறுத்தை, காண்டாமிருகம், ஒட்டகச் சிவிங்கிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் அதிக எண்ணிக்கையில் உள்ள நாடுகளில் தென் ஆப்பிரிக்கா முதன்மையானது. சுமார் 5000 வகைப் பாசிகள், 20,000க்கும் மேற்பட்ட பூச்சிவகைகள், 2,200க்கும் அதிக தாவரங்கள் உள்ளன. உலகில் உள்ள அரியவகைப் பூச்சிகளில் மூன்றில் ஒன்று, தென் ஆப்பிரிக்காவில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
விதவிதமான புற்களும் பரவலாகக் காணப்படுகின்றன. ‘கிராஸ்லேண்ட்’ எனப்படும் புல் நிலம் பிரபலமானது. குறிப்பாக, கேப் ஃப்லொரிஸ்டிக் மண்டலத்தில் அமேசான் காடுகளை விடவும் அதிகமான பல்வகைப் பூச்சிகள் கொண்ட இடமாகக் கருதப் படுகிறது. ஊசிமுனை போன்ற இலைகள் கொண்ட மரங்கள், வண்ண வண்ணப் பூக்கள், ஆண்டு முழுவதும் பசுமையுடன் திகழும் ஸ்கெலெரோபிலஸ் மரங்கள், சதுப்புநில காடுகள் என்று, இயற்கையோடு பிணைந்த அழகிய பகுதியாக இருப்பதால், உலக சுற்றுலாப் பயணிகள் விரும்பும் இடமாகத் திகழ்கிறது தென் ஆப்பிரிக்கா.
இந்த வாரக் கேள்வி:
‘நன்னம்பிக்கை முனை’ – குறிப்பு வரைக.
(பயணிப்போம்)
- கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி. தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com