

அழுதல், புலம்புதல், நம்பிக்கைக்கு உரியவரிடம் பேசுதல் ஆகியவை தவிர கவலையைக் கையாள வேறு வழிகள் இல்லையா? என்று வினவினாள் கயல்விழி. இருக்கின்றன என்றார் எழில். என்ன வழி? என வினவினாள் நன்மொழி. செல்வி நன்கு படிப்பாள். முதற்பருவ இடைத்தேர்வில் கணிதத்தில் 100 மதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாள்.
ஆனால், 63 மதிப்பெண்களே கிடைத்தன. காலாண்டுத் தேர்விலாவது 100 மதிப்பெண் பெற்றுவிட வேண்டுமென எல்லாக் கணக்குகளையும் செய்துபார்த்து, தேர்வு எழுதினாள். ஆனாலும் 78 மதிப்பெண்களே பெற்றாள். அது அவளுக்குக் கவலையளித்தது. கவலையிலிருந்து விடுபட இப்போது அவள் என்ன செய்ய வேண்டும்? என்று வினவினார்.
எதனால் மதிப்பெண் குறைந்தது? - முதலில், தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்திற்கும் சரியான விடைகள், தனக்குத் தெரியுமா எனப் பார்க்க வேண்டும் என்றான் முகில். அவளுக்கு எல்லா கணக்குகளுக்கும் விடைதெரியும் என்றால், அவள் என்ன செய்ய வேண்டும்? என்று வினவினாள் தங்கம். அந்த விடைகளை எல்லாம் உரிய நேரத்திற்குள் எழுத முடிந்ததா எனப் பார்க்க வேண்டும் என்றான் சுடர். முடியவில்லை என்றால்..? என்று வினவினாள் இளவேனில்.
அவளால் விரைவாகக் கணக்குகளைப் போட முடியவில்லை என்று பொருள் என்றான் சாமுவேல். எனவே, விடைகளை விரைந்தும் பிழையின்றியும் உரிய நேரத்திற்குள் எழுதப் பயிற்சி செய்ய வேண்டும் என்றாள் மதி. அதைவிடுத்து கவலைப்படுவதால் ஒரு பயனும் இல்லை என்றான் கண்மணி. அதாவது செல்வியின் மதிப்பெண் எதனால் குறைகிறது என ஆராய்ந்து, அதனைக் களைந்தால், அடுத்த முறை அவள் எதிர்நோக்கும் மதிப்பெண்ணைப் பெற்றுக் கவலை இல்லாமல் இருப்பாள் என்கிறீர்கள் என்றான் அருளினியன்.
ஆம் என்றனர் அனைவரும். ஒருவேளை ஒருவர் நோய்வாய்படுவதால் கவலை வந்தால்? என்றாள் மணிமேகலை. உரிய நேரத்தில் மருத்துவரின் உதவியை நாட வேண்டும் என்றான் தேவநேயன். கல்வி, நோய் ஆகியவற்றுக்கு மட்டுமல்ல, கவலை தருகிற எந்த ஒன்றையும் கையாள, அதற்காக காரணத்தை ஆராய்ந்து அறிந்து அதனைக் களைதல் வேண்டும். தேவைப்பட்டால் உரியவர்களின், நம்பிக்கையானவரின் உதவியை உரிய நேரத்தில் பெற வேண்டும் என்றார் எழில்.
பாட்டி சொன்ன வழி: என் பாட்டி இன்னொரு வழியைக் கூறுவார் என்றாள் பாத்திமா. என்ன வழி? என்று வினவினான் சுடர். கடந்த காலத்தில் நிகழ்ந்து முடிந்தவற்றுக்காக இப்பொழுது கவலைப்படுவதால் ஒரு பயனும் இல்லை. ஏனெனில் அவற்றை இப்பொழுது நம்மால் சரிசெய்ய முடியாது. எதிர்காலத்தில் ஒன்று நிகழப்போவதாகக் கருதி, அதற்காக இப்பொழுதே கவலைப்படுவதிலும் ஒரு பயனும் இல்லை என்று பாத்திமா சொல்லிக் கொண்டு இருக்கும்போழுதே, அப்படியானால் என்னதான் செய்ய வேண்டுமாம்? என்றாள் அருட்செல்வி எரிச்சலோடு.
‘கொஞ்சம் பொறு!’ என்பதைப் போல கையைக்காட்டியவாறே, கடந்த காலத்தவறுகளிலிருந்து படிப்பினைப் பெற்று, எதிர்காலத்தில் அத்தவறு நிகழாதவாறு, நிகழ்காலத்தில் கவனமாகச் செயலாற்றுவதே கவலையைக் களைய வழி என்பார்என் பாட்டி என்றாள் பாத்திமா.
எதிர்காலத்தில் அத்தவறு நிகழ்ந்தால்? என்றான் முகில். அதனை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையைப் பெற்றிருப்போம் என்றாள் பாத்திமா. எழில் அனைவரையும் பாராட்டினார். பின்னர், ஒருவர் தனக்கும் பிறருக்கும் ஏற்படும் உணர்வுகளை அடையாளங்கண்டு, அவை அவர்களது நடத்தையில் எவ்வாறு வெளிப்படுகின்றன என்னும் விழிப்புணர்வைப் பெறும்பொழுது அந்த உணர்வுகளுக்கு ஏற்றவாறு ஈடுகொடுத்து எதிர்வினையாற்ற இயலும்.
அதனைப்பற்றிய இதுவரை கலந்துரையாடினோம் என்று விளக்கினார் எழில். உணர்வுகளுக்கு ஈடுகொடுக்காவிட்டால் என்ன நிகழும்? என்று வினவினான் தேவநேயன். மனவழுத்தம் ஏற்படும். அதற்கு எப்படி ஈடுகொடுப்பது என்பதை அடுத்த வகுப்பில் பார்க்கலாம் என்றார் ஆசிரியர் எழில்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர். தொடர்புக்கு: ariaravelan@gmail.com