கழுகுக் கோட்டை - 18: ஆட்டுமந்தைக் கூட்டமாய் ஆட்டம் போட்ட மனிதர்கள்

கழுகுக் கோட்டை - 18: ஆட்டுமந்தைக் கூட்டமாய் ஆட்டம் போட்ட மனிதர்கள்
Updated on
2 min read

குணபாலனின் பிடியிலிருந்த செப்படி வித்தைக்காரன், ’ஒவ்வொருவரிடமும் ஒரு நியாயம் உள்ளது. அதைக் கேட்டுவிட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டும்’ என்றதும் குணபாலன் செப்படி வித்தைக்காரனைத் தன் பிடியிலிருந்து விடுவித்து அவன் சொல்லப்போகும் கதையைக் கேட்க ஆயத்தமானான். பிடியிலிருந்து விடுபட்ட செப்படி வித்தைக்காரனும் தனது தலையை இருபுறமும் சாய்த்து தனது உடலை தளர்த்திக்கொண்டான். பிறகு திரும்பி நின்று குணபாலனை மேலும் கீழுமாக ஒருமுறை பார்த்தான். அவன் பார்வையில் இருந்த பயம் விலகி, இப்போது ஓர் அலட்சியம் குடிகொண்டிருந்தது. அவன் தனது கதையை சொல்லத் தொடங்கினான்.

எனது பெயர் தத்தன். நான் மாட மாளிகைகளையும் கோபுரங்களையும் உருவாக்கிக் கொடுக்கும் கட்டிடக்கலை நிபுணன் ஆவேன். எனது தந்தை தேவதத்தன்தான் தேவலோகங்களையும் நிர்மாணித்தார். எனது தாத்தா…என்று அவன் சொல்லத் தொடங்கும் முன் இடைமறித்த குணபாலன், போதும் தத்தா, நீ உன்னைப் பற்றி மட்டும் சொல் என்றான்.

உடனே தத்தனும், நான் வடக்கே இமயம் முதல், தெற்கே குமரி வரை பலப்பல மாளிகைகளைக் கட்டி எழுப்பி உள்ளேன். அவ்வப்போது ஏழை மக்களுக்கும் அவர்களுக்கு ஏற்ற வீட்டைக் கட்டிக்கொடுத்து வந்துள்ளேன். ஒருமுறை காவிரி ஆற்றுக்குத் தெற்கே ஒருவருக்கு வீடு கட்டிக் கொடுக்கச் சென்றிருந்தேன்.

அப்போது எனது திறமையைப் பார்த்த இன்னும் சிலர் தங்களுக்கும் எனது கைவண்ணத்தாலேயே வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்று வேண்டி நின்றார்கள். சொல்லப் போனால் கெஞ்சினார்கள். நானும் போனால் போகட்டும் என்று ஆகட்டும் பார்க்கலாம் என்று அதற்கு ஒப்புக்கொண்டேன். அவ்விதமாக நான் ஒவ்வொருவருக்கும் வீட்டைக் கட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தேன்.

எனது புகழ் அக்கம் பக்கம் உள்ள கிராமங்களிலும் பரவத் தொடங்கியிருந்தது. அதனால் எனது வருமானமும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே சென்றது. அந்த நேரத்தில்தான் நான் தங்கியிருந்த கிராமத்தில் குடிசை வீடுகளிலும் ஓட்டு வீடுகளிலும் மர்மமாகத் தீப்பிடித்து எரியத் தொடங்கியிருந்தது.

அதன் மர்மத்தை ஒருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை தனக்கு வேண்டாதவர்களை எதிரியாக நினைத்த சிலர் பொறாமைத் தீயால் செய்த வேலை இது என்றே நினைத்திருந்தேன். ஊரிலும் அதுபற்றி பலவாறான கட்டுக்கதைகள் பற்றி எரிந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு குடிசை வீடாகக் கொளுத்தப்பட்டதினால் ஏழு வீடுகளே எஞ்சி இருந்தன. அப்போது என்னைத் தேடி ஒருவர் வந்தார். அவருக்கும் நான் வீடு கட்டிக் கொடுத்திருந்தேன். அதில் எனக்கு சேரவேண்டிய சம்பள பாக்கி கொஞ்சம் நிலுவையில் இருந்தது.

அந்தத் தொகையை என்னிடம் நேரில் கொடுத்துச் செல்லவே அவர் வந்திருந்தார். நானும், அடடா… இந்தக் காலத்திலும் பணத்தைத் தேடிவந்து கொடுத்துச் செல்கிறாரே, இவரல்லவோ மனிதருள் மாணிக்கம் என்று மனதிற்குள் பாராட்டு மடலை வாசித்துக் கொண்டிருந்தேன். என்னிடம் பணத்தை ஒப்படைத்த அவர் சில நிமிடங்கள் பேசி இருந்துவிட்டு உடனே புறப்பட வேண்டும் என்றார். நானும் அவரை காவிரி ஆற்றங்கரை வரை சென்று வழியனுப்பினேன்.

ஆற்றில் படகுப் போக்குவரத்து செவ்வனே நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அவரும் ஒரு படகில் ஏறிச்செல்ல ஆரம்பித்தார். படகு சிறிது தூரம் சென்றதும் ஏதோ நினைத்துக் கொண்டவராய், ‘எனது மச்சானுக்கும் ஒரு வீடு கட்ட வேண்டும். செய்து கொடுப்பீர்களா….?’ என்று கத்தினார். நானும், ‘செய்து கொடுக்கிறேன். சென்று வாருங்கள்’ என்று பதிலுக்குக் கத்தினேன். ‘இங்கே இன்னும் எத்தனை வீடுகள் பாக்கி இருக்கிறது?’ என்று அவர் கத்த, அது எனக்கு ஓரளவுதான் கேட்டது. ஏனென்றால், படகு சற்றுத் தொலைவுக்குச் சென்றுவிட்டது. எனவே, நான் ‘இன்னும் ஏழு வீடுகள் இருக்கின்றன.

அனைத்தையும் முடித்து விட்டுத்தான் வருவேன்’ என்று கத்தினேன். எந்த நேரத்தில் நான் அப்படிக் கத்தினேன் என்று தெரியாது. ஆனால், அதன் பலனை இந்த ஜென்மத்தில் என்னால் மறக்க முடியாமல் செய்து விட்டார்கள். ‘ஏன், என்ன ஆச்சு?’ என்றான் குணபாலன்.

‘நான் இன்னும் ஏழு வீடுதான் பாக்கி இருக்கிறது என்று சொன்னதை, இன்னும் ஏழு வீடுதான் கொளுத்தாமல் பாக்கி இருக்கிறது என்றும் அவை அனைத்தையும் கொளுத்தி விட்டு வருகிறேன் என்று சொன்னதாகவும் நினைத்து ஊர் முழுவதும் வதந்தி தீயாய்ப் பரவிவிட்டது. அதற்குள் நான்கைந்து பேர்கள் வந்து என்னைப் பிடித்து இழுத்துச் சென்றார்கள். அந்த கிராமத்தில் பஞ்சாயத்து பேசும் ஆலமரத்தில் என்னைக் கட்டி வைத்து அடி பின்னி எடுத்துவிட்டார்கள். விதி யாரை விட்டது? என்று நினைத்துக்கொண்டேன்.

ஏதோ ஒரு நல்ல சீர்திருத்தவாதி வந்து அந்தக் காட்டுமிராண்டிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றினார். முன்பின் ஆராயாமல் ஓர் அப்பாவியைக் கட்டி வைத்துத் தோலை உரித்தவர்களும் அப்பாவிகள்தானா? அவர்களுக்குத் தண்டனையே கிடையாதா? இப்படிப்பட்ட திமிர் பிடித்த மக்களை ஏமாற்ற முடிவெடுத்தே இந்தத் தொழில் செய்ய முடிவெடுத்தேன். நான் பரம்பரையாகச் செய்துவந்த தொழிலையும் கைவிட்டேன். தத்தன் அப்படி சொன்னதைக் கேட்டதும் குணபாலனுக்கு அவன் மேல் ஒரு பரிவு வந்தது. இருந்தாலும் தத்தன் செய்வது தவறு என்று எப்படி அவனுக்குப் புரியவைப்பது?

(தொடரும்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in