

ஐநாவின் சுற்றுச்சுழல் அமைப்பு காலநிலை பாதிப்பை ஏற்படுத்தும் மனித செயல்பாடுகளைத் தொழிற்சாலைகள், போக்குவரத்து, மின்சாரம், வீட்டு வசதி, விவசாயம் என்று ஐந்தாகப் பிரித்துள்ளது.
அதிக அளவிலான பசுமைக்குடில் வாயுக்கள் உற்பத்தித் துறையில் இருந்தே வெளியாகின்றன. எல்லா தொழில்துறைகளுக்கும் இதில் பங்கு இருக்கின்றன. பெட்ரோல் தயாரிப்பு, வாகனதயாரிப்பு, உருக்குக் கம்பிகள், கான்கிரீட்கள், பிளாஸ்டிக் உற்பத்தி உள்ளிட்ட தொழிற்சாலைகளில் நடைபெறும் உற்பத்திச் செயல்பாடுகளால் மட்டும் உலக அளவில் 30% பசுமைக்குடில் வாயுக்கள் வெளியிடப்படுகின்றன.
அடுத்த 26% மின்சார உற்பத்தியால் ஏற்படுகிறது. மின் விளக்குகள், வீட்டு உபயோகச் சாதனங்கள், தொழிற்சாலை இயந்திரங்கள், இணையம் என அனைத்தும் இடைவிடா மின்சாரத்தை நம்பியே இருக்கின்றன. இந்தியாவில் 75% மின்சார உற்பத்தி நிலக்கரியை நம்பித்தான் இருப்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அடுத்ததாக 21% வெளியீடு விவசாயத்தால் ஏற்படுகிறது. நாம் சாப்பிடுவதற்காக வளர்க்கும் விலங்குகள், தாவரங்களுக்காக மட்டுமல்ல, துணி, காகிதம் போன்றவற்றைத் தயாரிக்க நாம் பயிர்களைப் பயிரிடுவதற்காக நிகழ்த்தும் காட்டழிப்பு, நில பராமரிப்பு, உரங்கள் பயன்பாடு, டிராக்டர் பயன்பாடு ஆகிய பலவும் பசுமைக்குடில் வாயு வெளியீடுக்குக் காரணமாக இருக்கின்றன.
இதற்கு அடுத்ததாக 16% நாம் பயன்படுத்தும் வாகனங்களால் வெளியிடப்படுகிறது. நம்முடைய தனிப்பட்ட பயணத்துக்கும், உற்பத்தி செய்யும் பண்டங்களை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கும் நாம் ரயில், விமானம், கப்பல் போக்குவரத்தை நம்பித்தான் இருக்கிறோம். இறுதியாக வீடுகள் மற்றும் நிறுவனங்களில் பயன்படுத்தும் குளிர்சாதனங்கள், வெப்ப சாதனங்களால் மட்டும் 7% வெளியீடு நிகழ்கிறது.
இப்படி அன்றாட வாழ்க்கையே சுற்றுச்சூழல் மாசுபாடுடன் இடியாப்ப சிக்கல்களாக பின்னிப் பிணைந்துள்ளபோது நாம் எரிவாயு பயன்பாட்டைத் தவிர்க்கமுடியுமா என்ன? உண்மையில், அதற்கான முயற்சிகளும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. உலக நாடுகள் கரிமநீக்கம் செய்யப்பட்ட ஆற்றலைப் பயன்படுத்த முயற்சி செய்துவருகின்றன.
கரிம நீக்கத் தொழில்நுட்பம் என்பது புதைப்படிம எரிபொருளுக்கு மாற்றாக சூரிய ஆற்றல், காற்றாலை, பூமிக்கு அடியில் உற்பத்தியாகும் வெப்பத்தை ஆற்றலாக மாற்றிப்பயன்படுத்துவது போன்ற செயல்முறைகளாகும். அதேபோல சுற்றுச்சூழலில் உமிழப்படும் கார்பனை பூமிக்கு அடியில் பிடித்துவைத்து வேறு தேவைக்குப் பயன்படுத்தும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.
இந்த கரிம நீக்கத் தொழில்நுட்பத்தைப் புதைப்படிம எரிபொருளுக்கு மாற்றாக முழுமையாக பயன்படுத்த முடியுமா? இத்தகைய மாற்று முறைகள் இருந்தும் உலக நாடுகள் ஏன் அவற்றைப் பயன்படுத்த தயங்குகின்றன?
(தொடரும்)
- கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர். தொடர்புக்கு: tnmaran25@gmail.com