

இந்தியாவின் முதல் இயன்முறை மருத்துவ அமைப்பை 1972-ல் இந்தியன் அசோசியேஷன் ஆஃப் ஃபிசிகல் மெடிசின் அண்டு ரீஹேபிலிட்டேஷன் (Indian Association of Physical Medicine and Rehabilitation) என்ற பெயரில் உருவாக்கி, நாடெங்கும் இயன்முறை மருத்துவம் போய்ச்சேர வழி செய்தார் டாக்டர் மேரி வர்கீஸ்.
அடுத்த பத்து ஆண்டுகளில், இந்தியாவில் இயன்முறை மருத்துவத்தில் பெருமளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் அதன் மூலம் பயன்பெற மூலக்காரணமாக விளங்கினார்.
மேரி வர்கீஸின் அளப்பரிய பணிகளை சிறப்பிக்கும் விதமாக, 1972-ம் ஆண்டு பத்ம விருதை இந்திய அரசு அவருக்கு வழங்கியது. அதேசமயம் உலக மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்று ஐசிஎம்ஆர், உலக இயன்முறை இயக்கங்கள் அவரது ஆராய்ச்சிகள் அனைத்தையும் பிரசுரித்து அவரது ஆய்வுகள் உலகம் முழுவதும் போய்ச்சேர வேண்டும் என்று விரும்பியது என்றால் அவரது ஆய்வின் தரத்தை நாம் எளிதே அறியலாம்.
வர்கீஸ் பெருமை பேசும் நூல்கள்: உடல்நலக் குறைவின் காரணமாக 1976-ல்தற்காலிக பணிஓய்வு பெற்ற டாக்டர் மேரி, ஓரிரு வருடங்கள் தனது சொந்த ஊரில் தங்கி, மீண்டும் 1980-ல் வேலூர் திரும்பினார். 1981-ல் ‘மேரி வர்கீஸ் அறக்கட்டளையை' நிறுவினார். இதன்மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு பல்வேறு உதவிகளைப் புரிந்து வந்தார்.
அத்துடன் தன்னைப் போலவே மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் இயன்முறை மருத்துவத்தை கற்றுக் கொள்ளவும், அதன்மூலம் மக்கள் பயன்பெறவும் வழிவகுத்தார். 1985-ல், எட்வர்ட் பியர்ஸ் விருது மூலம் தனக்கு மொத்தம் கிடைத்த 10,000 டாலர் பணத்தையும் அதற்காகவே செலவிட்டதுடன், தந்தை வழி வந்த தனது மொத்த சொத்தையும் புனர்வாழ்வு மையத்துக்கே எழுதி வைத்தார்.
‘ஷீ பெர்சிஸ்டட்’, ‘வீல்சேர் சர்ஜன்’, ‘வீல்சேர் டாக்டர்’, போன்ற பல நூல்கள் மேரியின் கதையை இன்றளவும் உலகளவில் சொல்லிக் கொண்டிருந்தாலும், அமெரிக்க எழுத்தாளர் டோரதி க்ளார்க் என்பவர், மேரி வர்கீஸின் வாழ்க்கையை எழுதி வெளியிட்ட, "டேக் மை ஹேண்ட்ஸ்" எனும் புத்தகமும், கிளிண்டனின் மகள் செல்சியா கிளிண்டன் எழுதிய 'உலகை மாற்றிய 13 பெண்கள்' புத்தகமும் இந்த வீல் சேர் வர்கீஸின் பெருமையை உலகெங்கும் எடுத்துரைக்கின்றன.
எனக்கு கிடைத்த சிறகுகள்: முன்பு விபத்தின் போது "என்னை ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று ஆண்டவரிடம் முறையிட்ட அதே மேரி வர்கீஸ் பிற்பாடு அதை பல்வேறு மக்களுக்கு உதவும் காரணத்துக்காகவே அப்படிச் செய்திருக்கிறார் என்று பலமுறை கூறியதுண்டு. "மனிதர்கள் அனைவருக்கும் கால்களைத் தந்த கடவுள், எனக்கு மட்டும் சிறகுகளைத் தந்துவிட்டார்..." என்று கடவுளுக்கு நன்றியையும் கூறினார் என்றால் அவரது மேன்மையான உள்ளம் நமக்கு விளங்கும்.
"இறைவனை முழுமையாக நம்புபவர்களுக்கு, எல்லாமே கிடைக்கும்..." என்று எப்போதும் புன்னகையுடன் சொன்னபடி வீல் சேரில் அமர்ந்திருந்த மேரி வர்கீஸ், 1986, டிசம்பர் 17-ம் தேதியன்று இயற்கை ஏய்தினார். இன்பச் சுற்றுலா ஒரு மருத்துவரின் வாழ்வையே துன்பச் சுற்றுலாவாக மாற்றியதும், மனோதிடம் மிக்க அந்தப் பெண் மருத்துவர் அந்தத் துன்பத்தை வென்றெடுத்து தன் வாழ்வையே இந்த உலகிற்கு உதாரணமாக மாற்றியதுமான இந்த வீல் சேர் வர்கீஸின் வரலாறு நம் அனைவருக்கும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய வரலாறல்லவா!
‘ குறைபாடு என்பது குறையே அல்ல..!' என்பதை உலகிற்கு உணர்த்திய வீல் சேர் மருத்துவரின் பெயரால், இன்றும் பலரது குறைபாடுகளை புன்னகையுடன் தொடர்ந்து நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறது, சிஎம்சி வேலூரில் முழுமையாக இயங்கி வரும் மேரி வர்கீஸ் ரீஹேப் இன்ஸ்டிடியூட்.
(மகிமை தொடரும்).
- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com