நானும் கதாசிரியரே! - 23: பேச்சுத் தமிழா? உரைநடை தமிழா?

நானும் கதாசிரியரே! - 23: பேச்சுத் தமிழா? உரைநடை தமிழா?
Updated on
2 min read

கதை எழுதும் முறை, மொழிநடை, ரசனை உள்ளிட்ட பல விஷயங்களை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம். சிலர் நிறைய கதைகள் படிக்கவும் தொடங்கியிருப்பீர்கள்.

மொழிநடை பற்றி பார்க்கையில் முக்கியமான ஒரு கேள்வி பலருக்கும் எழும். கதையை உரைநடை தமிழில் மட்டும்தான் எழுத வேண்டுமா? பேச்சுத் தமிழிலும் எழுதலாமா என்பதுதான். இரண்டு விதமாக எழுதலாம் என்று பொதுவாகச் சொல்லிவிடலாம். ஆனாலும், இன்னும் தெளிவு பெற இது பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

3 விதங்களில் எழுதலாம்: பேச்சுத் தமிழிலா, உரைநடை தமிழிலா என்ற பின்னணியை வைத்து பார்க்கையில் மூன்று விதங்களில் இது கையாளப்படுகிறது. முதல் விதம், ஒரு கதை எழுதும்போது, காட்சியை விவரிக்கும் பகுதியை உரைநடை மொழியிலும், கதையின் கதாபாத்திரங்கள் பேசும் பகுதியை பேச்சுத் தமிழிலும் எழுதுவார்கள்.

இந்த வகையில், ஒரு கதாபாத்திரம் பேசுகிறது என்றால், அதன் பெயருக்கு அடுத்து ‘,’ போட்டு பேச்சுத் தொடங்குவதற்கு முன்” என்று போட்டு பேசுவது முடியும் இடத்தில் “என்று போடுவார்கள். அதாவது “குறி தொடங்கி “ என்று குறி முடியும் வரை உள்ள வார்த்தைகள் அந்தக் கதாபாத்திரம் பேசுகிறது என்று அர்த்தம். உதாரணமாக, செழியன், “எனக்குப் புது சட்டை போட்டுக்கனும்னு ஆசையா இருக்கு” என்றான்.

இதில், எனக்குப் புது சட்டை போட்டுக்கனும்னு ஆசையா இருக்கு என்பது செழியன் பேசும் பகுதி என்று அர்த்தம். மற்றவை எழுத்தாளர் குறிப்பிடுவது என்று அர்த்தம்.

இரண்டாம் விதம், எழுத்தாளர் கூறுவதுபோலவே கதையை எழுதுவது என்று முடிவு செய்துவிட்டால், முழுக்கதையையும் உரைநடைத் தமிழில் எழுதிவிடுவார். கதாபாத்திரங்கள் பேசும் பகுதியைக்கூட, அந்தக் கதாபாத்திரத்தின் பெயரைக் குறிப்பிட்டு ‘இப்படிச் சொன்னார்’ என்று உரைநடை தமிழிலிலேயே எழுதிவிடுவார்.

மூன்றாம் விதம் தனித்துவமானது. அந்த எழுத்தாளரோ அல்லது அந்தக் கதையின் ஒரு கதாபாத்திரமோ கதையை நேரடியாகச் சொல்வது போல கதையின் வடிவம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அது முழுக்க முழுக்க பேச்சுத் தமிழில்தான் எழுதப்படும். அதாவது, கதையின் முதல் வார்த்தை தொடங்கி இறுதி வார்த்தை வரை அனைத்தும் பேச்சுத் தமிழில்தான் எழுதப்படும்.

இதில் எது சரி? - ஒரு கதையை இந்த மூன்று விதங்களில் எந்த விதத்தில் எழுதலாம் என்பதை கதையின் கருப்பொருள்தான் முடிவு செய்யும். ஏனென்றால், ஒரு ஊருக்குச் சென்று வந்த அனுபவத்தை அப்படியே சொல்லப் போகிறார் என்றால், மூன்றாம் வகையைத் தேர்வு செய்வார். இப்படி கதையின் மையம் எது என்பதே எழுதும் வகையை முடிவு செய்யும்.

எழுத்தாளர்களால் மூன்றும் விதமாகவும் கதைகள் எழுதப்படுகின்றன. அதனால், இதுதான் சரி என்றும், இது தவறு என்றும் கருத வேண்டியது இல்லை. எந்த வகையில் எழுதினாலும் ஒரு விஷயத்தை மறக்கக்கூடாது. படிக்கும் வாசகருக்கு எளிதாக இருக்க வேண்டும். கதை குழப்பாமல் இருக்க வேண்டும் என்பதுதான் அது.

அதற்கு எந்த மொழிநடை சிறப்பாக இருக்கும் என்பதைத் தெளிவாக முடிவு செய்ய வேண்டும். இதைத் தவற விட்டால் ஒட்டுமொத்த கதையும் தோல்வியைத் தழுவி விடும் என்பதை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.

பேச்சுத் தமிழா, உரை நடைத் தமிழா என்ற கேள்விக்கு பதில் கிடைத்ததா? இந்தக் கேள்வியோடு இன்னொரு கேள்வியும் எழுமே…“கதைகளை வட்டார மொழி நடையில் எழுதலாமா… கூடாதா?” என்பதுதான் அது. அது பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

- கட்டுரையாளர்: எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in