கனியும் கணிதம் 41: கிரிகோரியன் நாட்காட்டியின் - குட்டி வரலாறு

கனியும் கணிதம் 41: கிரிகோரியன் நாட்காட்டியின் - குட்டி வரலாறு
Updated on
2 min read

நாட்காட்டிகளை மாத ஆரம்பத்தில் பார்க்கும் பழக்கம் பல குழந்தைகளுக்கு உண்டு. வீட்டில் அம்மா அல்லது அப்பா நடப்பு மாதத்திற்கு மாற்றச் சொன்னதும், அந்த மாதத்தில் எத்தனை விடுமுறை நாட்கள், எத்தனை வேலை நாட்கள் என பார்த்து சந்தோஷம் அடைவோம்.

நாம் பயன்படுத்தும் நாட்காட்டியின் பெயர் தெரியுமா? என்னது அப்படி என்றால் பல நாட்காட்டிகள் இருக்கின்றனவா?

மனிதன் எப்படி நாட்காட்டியை வடிவமைத்து இருப்பான்? எதுவுமே தெரியாமல் காட்டில் இருந்து நிலபரப்பிற்கு வந்து, ஆற்றங்கரைகளில் வளர்ந்து எப்படி? இன்று நாம் பயன்படுத்தும் நொடி, நிமிடம், மணி நேரம், நாள், வாரம், மாதம், வருடம் என எப்படி கணக்கிட்டு இருப்பார்கள். பார்க்க கிடைத்தவை எல்லாமே சூரியன், சந்திரனின் நடவடிக்கைகள் மட்டுமே. வானத்தின் போக்கை வைத்தே எல்லாமே கணக்கிட்டு இருக்க வேண்டும். நட்சத்திரங்களின் நிலைகளை வைத்து வருடத்தினை கணக்கிட்டு இருக்க வேண்டும். நாம் பயன்படுத்தும் நாட்காட்டியின் பெயர் கிரிகோரியன் நாட்காட்டி.

இது 1582-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

அப்படி என்றால் அதற்கு முன்னர்? பல்வேறு நிலப்பகுதிகளில் பல வகையான நாட்காட்டிகள் புழக்கத்தில் இருந்தன. கிரிகோரியன் நாட்காட்டி முன்னர் ஜூனியன் நாட்காட்டியே பரவலாக பின்பற்றப்பட்டது. ஜூனியன் நாட்காட்டியும் சரியாகவே இருந்தது. ஆனால் பூமியின் சுழற்சி நேரத்தினை மிக துல்லியமாக கணக்கிடவில்லை.

ஜூலியன் நாட்காட்டிபடி வருடத்திற்கு : 365.25 நாட்கள் கிரிகோரியன் நாட்காட்டிபடி வருடத்திற்கு : 365.2422 நாட்கள்.

அதாவது 365 நாள் 5 மணி, 48 நிமிடம், 46 நொடிகள். ஜூலியன் நாட்காட்டி இதனை தோராயமாக 365 நாள், 6 மணி நேரமாக எடுத்துக்கொண்டது. 6 X 4 = 24 மணி நேரம், இதனை ஈடு செய்யவே லீப் வருடம் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு வருகிறது (பிப்ரவரி 29). ஆனால் நாம் தோராயமாக எடுத்துக்கொண்டதால் ஒவ்வொரு ஆண்டும் 11 நிமிடங்கள் 14 நொடிகள் கணக்கில் வரா ததால் சில நூறு ஆண்டுகளில் அது பெரிய எண்ணாக மாறியது.

இதை சரி செய்யும் வகையிலேயே கிரிகோரியன் நாட்காட்டி உருவாகியது. கிரிகோரியன் என்பவர் இதை உருவாக்கியவர் அல்ல. அலோசியஸ் லிலியஸ் (Aloysius Lilius) என்ற மருத்துவர் இதை முன்வைத்தார். இவர் மருத்துவர் மட்டுமல்ல வானியலாளரும்கூட (astronomer). 1545-ல் இதற்கான பணி தொடங்கினாலும் பல்வேறு அறிஞர்களிடம் வரைவுகளை கோரி இருந்தது சர்ச் நிர்வாகம். அலோசியஸ் லிலியஸ்சின் முன்வரைவே இதில் தேர்வானது.

1577-ல் அலோசியஸ் அடுத்த 40 ஆண்டுகளுக்கு எந்த வருடத்தையும் லீப் வருடமாக மாற்றக்கூடாது என அறிவுறுத்தினார், இது நாட்காட்டியை சமநிலைக்கு கொண்டுவர ஒரு ஏற்பாடு. மேலும் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை லீப் வருடம் வருவதில்லை. அதாவது ஒரு வருடம் 100 ஆல் வகுபடும் எனில்அந்த ஆண்டு அது லீப் வருடமாக மாற்றப்படமாட்டாது. அப்படியும் மிச்ச சொச்ச மணி நேரம்இருப்பதால், ஒரு ஆண்டு 400-ல் வகுபட்டால் அந்த ஆண்டு லீப் வருடமாக மாற்றப்படும்.

1600 – லீப் ஆண்டு (ஏனில் 400 ஆல் வகுபடுகின்றது)

1700,1800,1900 – லீப் வருடங்கள் அல்ல

2000 – லீப் ஆண்டு (ஏனில் 400 ஆல் வகுபடுகிறது)

2100 – லீப் வருடமல்ல. (உலகம் முழுவதும் அப்போது நாட்காட்டியில் மாற்றம் வரும்)

ஜூலியன் நாட்காட்டியில் 128 வருடங்களுக்கு 1 நாள் பிழையாக இருந்தது, இதுவே கிரிகோரியன் நாட்காட்டியில் 3030 ஆண்டுகளுக்கு ஒரு நாள் பிழையாக வரும். இதைவிட சிறந்த நாட்காட்டிகள் பரிந்துரைக்கப்பட்டாலும் இதுவே இதுவரை வென்றுள்ளது. இந்த நாட்காட்டியை கொண்டு வரும்போது அகில உலக கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக இருந்தவர் கிரிகோரி (Gregory XIII), அவரது பெயரே நாட்காட்டியின் பெயராகவும் மாறியது.

- கட்டுரையாளர்: சிறார் எழுத்தாளர், ‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ உள்ளிட்டவை இவரது நூல்கள். தொடர்பு: umanaths@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in