திறன் 365: 18 - கண்ணாடி முன் ஆடி கற்கலாம்!

திறன் 365: 18 - கண்ணாடி முன் ஆடி கற்கலாம்!
Updated on
2 min read

குழந்தைகள் மகிழ்ச்சியானவர்கள். குழந்தைகள் ஆடி, பாடி கற்கவே விரும்புகின்றனர். அதற்கு தகுந்தவாறு கற்பித்தல் உத்திகளை அமைத்து கொள்வது வகுப்பறையை உயிரோட்டமாக வைத்திருக்கும்.

மொழி மற்றும் தொடர்புத் திறன்களை வளர்த்தெடுக்க ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு வாய்ப்புகள் வழங்கவேண்டும். அதனால், குழந்தைகளின் சொல் அதிகாரத்தை வளர்த்தெடுக்க இயலும். மேலும், சமூக தொடர்பை மேம்படுத்தவும் இயலும்.

அப்படியான ஒரு செயல் தான்‘கண்ணாடி' செயல்பாடு. வகுப்பறையை இரு குழுக்களாகப் பிரிக்க வேண்டும். ஒரு குழுவிலுள்ள குழந்தைகளை ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு இரண்டு இரண்டு நபர்களாக ஒரு அடி இடைவெளியில் நிற்க செய்ய வேண்டும்.

ஒருவர் கண்ணாடியாகச் செயல்பட வேண்டும் என்று கூற வேண்டும். கண்ணாடி முன் நிற்கும் நபர் இடது கையைத் தூக்கினால், கண்ணாடியாக உள்ள நபர் தனது வலது கையைத் தூக்க வேண்டும். இச்செயல்பாட்டைக் குழந்தைகள் விரும்பிச் செய்வார்கள்.

அதன்பின், கண்ணாடி முன் நின்றுள்ள மாணவர்களை மகிழ்ச்சி, சோகம், கோபம், ஆச்சரியம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூறவும். கண்ணாடியாக உள்ளவர் எதிரில் உள்ள நபர் வெளிப்படுத்தும் உணர்ச்சியை அப்பபடியே வெளிப்படுத்த வேண்டும். கண்ணாடிச் செயலில் ஈடுபடுபவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசக்கூடாது என்ற விதியை அவசியம் கூற வேண்டும்.

இப்படி ஒரு குழு செயல்படும் போது மற்றொரு குழுவில் உள்ளவர்கள் இருவர் இருவராக இணைந்து ஒரு கண்ணாடியை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அம்மாணவர்களின் உணர்ச்சிக்குத் தகுந்த நிகழ்காலம், இறந்த காலம் கொண்ட வாக்கியங்களை பாடக்குறிப்பேட்டில் எழுத வேண்டும். உ.ம். கோபம் என்ற உணர்ச்சியை காட்டினால், அவன் கோபமாக இருக்கிறான். அவன் கோபமாக இருந்தான் என எழுத வேண்டும். ஆங்கில இலக்கண வகுப்பிற்கும் இந்தச் செயல்பாட்டை பயன்படுத்தலாம். Ex. He is angry. He was angry.

ஆசிரியர்கள் எந்த Tense கற்றுத்தருகிறார்களோ அதற்கு தகுந்த இலக்கண வாக்கியத்தை உருவாக்கச் செய்யலாம். கண்ணாடி செயல்பாட்டில் உள்ள நபர் செய்யும் செயலை மற்றொரு குழுவில் உள்ள ஒருவர் present tense ல் எழுதினால், அவருடன் இணைந்து செயல்படும் மற்றொருவர் அதே வாக்கியத்தை present continuous tense ல் எழுத வேண்டும். உ.ம். ஒருவர் ரயில் போன்று நடிக்கிறார்.

The train arrives at the railway station. The train is arriving at the railway station என எழுத வேண்டும்.

இதேபோல் மற்றொரு குழு கண்ணாடி செயல்பாட்டை செய்ய, இவர்கள் வாக்கியங்களை உருவாக்க வேண்டும். பின்பு, மாணவர்கள் கரும்பலகையில் தாங்கள் எழுதிய வாக்கியங்களை எழுதச் செய்ய வேண்டும். அதிகமான சரியான வாக்கியத்தை உருவாக்கிய குழு வெற்றி பெற்ற குழு ஆகும்.

மேலும், கண்ணாடி செயல்பாட்டில் ஒரு கதையை நடித்துக் கூறவும் செய்யமுடியும். குழந்தைகள் படித்த கதைகளை உணர்ச்சிகள் கலந்து வாய்திறக்காமல் கூறச் செய்வது வேடிக்கையாக இருக்கும். அதனை எழுத்தால் எழுதி வாசிக்கும் போது அதைவிட சுவராஸ்யமானதாக இருக்கும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உரைநடை பகுதியிலுள்ள கதையை கண்ணாடி முன் வாய்திறந்து நடித்துக் கூறவும் செய்யலாம்.

கண்ணாடி செயல்பாட்டில் வெளிப் படுத்தப்படும் உணர்ச்சிகளுக்கு காரணங்களை கூறச் செய்யலாம். இதனால், உணர்ச்சி சார்ந்த நுண்ணறிவு மற்றும் சுய ஒழுங்குமுறை திறன்களை மேம்படுத்தலாம்.

சுய கவனிப்பு மற்றும் தனிப்பட்ட சுகாதாரத் திறன்களை மேம்படுத்த முன்பருவக் குழந்தைகளுக்கு இச்செயல்பாட்டை கொடுக்கலாம். உ.ம். பல் துலக்குதல், தலை ஒழுங்குபடுத்தல், கைகளைக் கழுவுதல் etc.,

கண்ணாடி செயல்பாட்டில் குழந் தைகள் ஈடுபடும்போது தங்கள் சொந்த திறன்களின் பலம் அறிந்து கொள்கின்றனர். இதனால்,நேர்மறை சுயபிம்பம் உருவாகிறது. அதனால், அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையை அதிகரிக்கிறது. நீங்களும் குழந்தைகளின் நம்பிக்கைகுரிய ஆசிரியராக மாறிடலாம்.

- எழுத்தாளர், தலைமையாசிரியர்,டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in