

அம்மா காய்கறி நறுக்கிக்கொண்டிருக்கிறார். கத்தியைக் கீழே வைத்துவிட்டு நறுக்கிய காய்கறிகளை வாணலியில் கொட்டுவதற்காக எழுந்திருக்கிறார். அதற்குள் அங்கு தத்தித் தத்தி வந்த குழந்தை அந்தக் கத்தியை எடுக்க கையை நீட்டுகிறது.
அதைப் பார்த்த அம்மா, “ஐயோ பாப்பா, கத்தியை எடுக்காதே. வேண்டாம் வேண்டாம். கத்தி கையில் பட்டால் காயமாகிவிடும். கத்தியை எடுத்த இடத்திலேயே வை பாப்பா. நானொரு முட்டாள். குழந்தை வரும் என்று தெரிந்து கத்தியை மாற்றி வைத்திருக்க வேண்டாமா?” என்கிறார்.
குழந்தை ஒரு நிமிடம் அம்மாவைப் பார்க்கிறது. பிறகு “த்தி… த்தி…” என்று சொல்லி கைகொட்டிச் சிரிக்கிறது. அம்மாவும் சிரித்தபடி மெல்ல அந்தக் கத்தியைக் குழந்தையின் பார்வையிலிருந்து தள்ளி வைக்கிறார்.
வேறொரு சூழலைப் பார்ப்போம்: அம்மா தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார். குழந்தை தரையில் விளையாடுகிறது. அலைபேசி மணியொலிக்கிறது. அம்மா ரிமோட்டை ஸ்டூலின் மேல் வைத்துவிட்டு அலைபேசியை எடுக்கப்போகிறார். அதற்குள் குழந்தை ஸ்டூலைப் பிடித்து எழுந்து நின்று ரிமோட்டை எடுக்கிறது. அதைப் பார்த்த அம்மா “ரிமோட்டை எடுக்காதே பாப்பா. கீழே விழுந்திடும். கீழே விழந்தால் ரிமோட்டு உடைந்து விடும். அப்புறம் டீவி பார்க்க முடியாது. புது ரிமோட்டு வாங்கப் பணம் வேணும்...” குழந்தைகளுக்குச் சொற்கள் அறிமுகமாகும் அழகிய, இயல்பான தருணம் இது.
அன்னை மொழியின் பண்புகள்: அம்மா குழந்தைக்கு எதையாவது கற்றுத்தர வேண்டும் என்ற எண்ணத்தோடு பேசுவதில்லை என்பதுதான் அன்னைப் பேச்சின் முக்கிய அம்சம். எப்போதும் அன்னையின் குரலில் அன்பு கலந்திருக்கும். பேசுவதெல்லாம் நிஜமான சூழலில் குழந்தையின் தேவையோடு தொடர்புடையவையாக இருக்கும். பேசும் அத்தனை சொற்களையும் குழந்தைகளால் புரிந்துகொள்ள முடியுமா என்று யோசித்து அம்மா பேசுவதில்லை.
அன்னை மொழியின் பண்புகளை சற்றே ஆழமாகப் புரிந்துகொள்ள இவ்விரு சொற்களைக் குழந்தைக்குக் கற்பிக்கும் வகுப்பறைச் சூழலை நினைத்துப் பார்த்தால் போதும்.
சதுர செவ்வகக் கட்டங்களுக்குள் இருக்கும் படங்களைச் சுட்டிக்காட்டி “இதுதான் கத்தி, இதுதான் ரிமோட்” என்று திரும்பத் திரும்பச் சொல்லி குழந்தைகளையும் சொல்ல வைப்போம். காரணம் இச்சொற்களைக் கற்பித்தேயாக வேண்டும் என்று நாம் முடிவு செய்திருக்கிறோமே. அதனால் கற்றுக்கொண்டார்களா இல்லையா என்று நாம் அடிக்கடி பரிசோதிக்கவும் செய்வோம். எப்படித் தெரியுமா?
படத்தைத் தொட்டுக்காட்டி “இது என்ன?” என்று கேட்போம். ஒரு குழந்தை கத்தி என்று பதில் சொல்லும். “சரியான பதில்” என்று அக்குழந்தையை ஆசிரியர் பாராட்டுவார். அந்த பதிலைஎல்லாக் குழந்தைகளும் கேட்டிருப்பார்கள். இருந்தாலும் அதே கேள்வியை அடுத்த குழந்தையிடமும் கேட்பார். அப்படி நான்கைந்து பேரிடம் கேட்பார். யந்திரத்தனமான கற்பித்தலின் உச்சம்இது. வகுப்புக்கு வெளியே இப்படியொரு சூழலைக் குழந்தை எதிர்கொள்வதேயில்லை.
அதுபோல் கதை சொல்கிறேன் பேர்வழி என்று தொடங்கும் ஆசிரியர் காலையில் சேவல் கூவியது என்ற வரியைச் சொல்லிவிட்டு காலையில் எது கூவியது? காலையில் சேவல் என்ன செய்யும்? என்று கேள்வி கேட்கத் தொடங்கிவிடுவார்.
வரிசையாக அடுக்குவதல்ல மொழி: எழுத்து, சொல், தொடர், வாக்கியம் என்ற வரிசை மொழிவல்லுநர்களால் அமைக்கப்பட்டது. அது அவர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டது. அது மொழியைக் கற்றுக் கொள்வதற்காகவோ, மொழியைக் கற்பிக்கவோ அமைப்பட்ட வரிசையல்ல. இயல்பானகற்றலையும் கற்பித்தலையும் வெகுதூரத்திற்குத் துரத்திவிட்டோம். “உ”என்ற எழுத்தைக் கற்பிக்க உரலையும் உரியையும் இழுத்துக்கொண்டு வருகிறோம்.
அம்மா குழந்தையிடம் பேசும் சூழல்களில் ஒரு சொல் என்பது ஓர் அனுபவமாக மாறுகிறது. உணர்வோடு கலக்கிறது. கத்தி என்றவுடன் அந்தக் காட்சி குழந்தையின் மனத்தில் வருகிறது. ஆனால், வகுப்பறைகளில் ஒரு சொல்என்பது எவ்வித உணர்வையும் வெளிப்படுத்துவதில்லை. வெறும் ஒரு செய்தியாக, ஒரு தகவலாக நின்றுவிடுகிறது.
பள்ளிக்கூடங்கள் குழந்தையின் இரண்டாம் வீடு என்கிறோம். அப்படியானால் ஆசிரியர் பேச்சு அன்னையின் பேச்சுபோல் இயல்பாக இருக்க வேண்டாமா?
(தொடர்ந்து பேசுவோம்)
- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை. தொடர்புக்கு: rajendran@qrius.in