

மூக்கு மேலே எனக்கு ஒரு பெரிய மச்சம் இருக்கறதால மத்தவங்க என்னை அடையாளம் சொல்றதே ‘மூக்கு மச்சக்காரின்னு' தான் டாக்டர். நயன்தாரா போல மத்த எல்லாருக்கும் கன்னத்தில இல்ல உதட்டுல அழகா மச்சம் இருக்கும்போது, எனக்கு மட்டும் மூக்கு மேலே, அதுவும் பெரிசா... பிடிக்கவேயில்லை டாக்டர்.
இந்த மச்சம் எல்லாம் ஏன் வருது? இது தன்னால போக வழி ஏதாவது இருக்கா? இதுக்கு ஆபரேஷன் பண்ணிட்டா தழும்பு தெரியாம இருக்குமா? அப்படியே அதை விட்டா பின்னால பிரச்சினை எதுவும் வருமா? என்று மச்சம் குறித்த தனது பல சந்தேகங்களை, கேள்விகளாக எழுப்பியுள்ளாள் ஒன்பதாம் வகுப்பு மாணவி தாரா.
பொதுவாக உடலில் மச்சம் என்றாலே அது அதிர்ஷ்டத்தின் குறி என்று தானே பார்க்கப்படுகிறது? வெற்றி பெறும் நண்பனை, “அவனுக்கு உடம்பெல்லாம் மச்சம்டா!” என்றுதானே நாமும் பலமுறை குறிப்பிடுகிறோம். இதில், மூக்கின் மேல் மச்சம் இருந்தால் நினைத்தெல்லாம் நடக்கும், ஆடம்பர வாழ்வும் பேரதிர்ஷடமும் நிறைந்திருக்கும் என மச்சங்களின் பலன்களைக் குறித்த மச்ச சாஸ்திரங்களும் ஜோதிடங்களும் நம்மிடையே மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏராளமாக இருக்கவே செய்கிறது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டகரமான ஒன்றை நீக்கும் வழிகளைக் கேட்கிறாளே தாரா என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா.
ஆனால், உண்மையில் மச்சம் என்பது நமது தோலில் உள்ள ஒரு செல்லின் தேவையற்ற அதிகப்படியான வளர்ச்சி அன்றி வேறொன்றுமில்லை. இந்த மச்சங்கள் எப்படி உருவாகின்றன, இவற்றால் பாதிப்பு ஏற்படுமா, நீக்கும் வழிகள் என்ன என்ற தாராவின் கேள்விகளுக்கான பதில்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
இணை பிரியா மச்சங்கள்: நமது உடல் உறுப்புகளைக் காக்கும் நமது சருமமானது மூன்றடுக்குகளால் ஆனது. அதிலுள்ள இரண்டாம் அடுக்கின் (dermis) மெலனோசைட்ஸ் எனும் செல்களின் மெலானின் நிறமி தான் நமது சருமத்தின், முடியின், கண்களின் நிறத்தைத் தீர்மானிக்கிறது.
இதில், பொதுவாக சருமம் முழுதும் நிறத்தை ஒரே சீராக வழங்குவதற்கென பக்கவாட்டில் மட்டுமே வளரும் தன்மை கொண்ட மெலனோசைட்ஸ் செல்கள், தமது இயல்புக்கு மாறாக கீழிருந்து மேலாக வளரும்போது, மெலானின் நிறமியுடன் கூடிய இவை முதல் அடுக்கான எபிடெர்மிஸை (epidermis) துளைத்துக் கொண்டு, மச்சங்களாக வெளிப்படுகின்றன.
பிறப்புக்குறி (Nevus or birth mark) என அழைக்கப்படும் இந்த மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு, அல்லது சற்று பெரிதாகக்கூட இருக்கக்கூடும். அதேபோல, எண்ணிக்கையில் குறைவாகவோ அல்லது நிறைந்தோ (10-40 மச்சங்கள் வரை) சருமத்துடன் ஒட்டியபடியோ அல்லது நீட்டிக்கொண்டோ, முகம் முதல் பாதம் வரை இவை உடலெங்கும் வெளிப்படக்கூடும். நிறங்களிலும் கருமை நிறம் மட்டுமன்றி பழுப்பு, சாம்பல், சிவப்பு நிறங்களிலும் இவை காணப்படலாம். மச்சங்கள் பொதுவாக மறைவதில்லை என்பதால் அங்க அடையாளமாகவும் இவை குறிப்பிடப்படுகின்றன.
ஆயினும் பிறக்கும்போது சிலரில் காணப்படும் மச்சங்கள் வளரும்போது மறைவதுண்டு. அதேபோல வளரும் பருவத்தில் தோன்றும் சில மச்சங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்வதும் உண்டு என்றுகூறும் தோல் நோய் நிபுணர்கள், பொதுவாக மச்சங்களின் தோற்றத்திற்கும் அளவிற்கும் காரணமாக இருப்பது மெலனோசைட்ஸ் செல்களின் வளர்ச்சியின் வேகம் தான் என்கின்றனர்.
(மச்ச ஆலோசனை தொடரும்)
- கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com