இவரை தெரியுமா? - 18: உடன்பாடில்லை என்றாலும், பிறர் கருத்துரிமை பாதுகாத்த வோல்டேர்

இவரை தெரியுமா? - 18: உடன்பாடில்லை என்றாலும், பிறர் கருத்துரிமை பாதுகாத்த வோல்டேர்
Updated on
2 min read

கி.பி. 1778இல் தான் எழுதிய ‘ஐரீன்’ எனும் புகழ்பெற்ற நாடகத்தின் திரையிடலுக்காக, பாரிஸ் நகரில் அடியெடுத்து வைத்தார் அந்த முதியவர். பிரெஞ்சு அறிவொளி இயக்கத்தின் “முதுபெரும் கிழவனே” என்று அரங்கம் அதிர பலர் ஆர்ப்பரிக்க, வோல்டேர் பவ்வியமாக நடந்து வந்தார். வோல்டேருக்கு அப்போது வயது 83.

தன் இளமைப் பருவத்தில் இருந்தே முற்போக்கு விதைகளை விதைத்து, சிறை சென்று, ஓடாய்த் தேய்ந்து, நவீன உலகிற்கு அணையா வெளிச்சத்தைப் பாய்ச்சிய மிக முக்கியச் சிந்தனையாளர், வோல்டேர். உலகம் தழுவிய சிந்தனையாளரின் பூதவுடலை, நல்லடக்கம் செய்யவே அனுமதி மறுத்த சோகம் தெரியுமா உங்களுக்கு?

அங்கத மன்னரின் சிறைவாசம்: கி.பி. 1694ஆம் ஆண்டு, பாரிஸில் உள்ள செல்வந்தக் குடும்பத்தில் வோல்டேர் பிறந்தார். இவரின் இயற்பெயர் பிராங்கோவிஸ் மாரீ அரூவேட். தொடக்கக் கல்வியை பாரிஸில் முடித்துவிட்டு, சட்டப் படிப்பைப் பாதியில் கைவிட்டார். இவரின் அறிவாளுமைக்கும் புத்திக்கூர்மையான அங்கதக் கவிதைகளுக்கும் அந்நகரில் மயங்காதவர் எவரும் இல்லை.

ஆனால், அதுவே பிரச்சினையும் உண்டாக்கியது. இவர் எழுதிய அரசியல் கவிதைகளின் நெடிதாங்க முடியாத ஆளும் அரசு, பஸ்டீல் எனும் கோட்டையில் சிறை வைத்தது. சுமார் ஓராண்டுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலை ஆனவர், முன்பைக் காட்டிலும் மிகத் தீவிரமாக எழுதத் தொடங்கினார்.

இங்கிலாந்து பயணமும் இங்கிலீஷ் படிப்பும்: வோல்டேரின் பலமும் பலவீனமும் அவர் புத்திக்கூர்மைதான். கி.பி.1726இல் பிரெஞ்சு அரசின் முக்கிய அங்கத்தில் இருந்த செவாலியர் டே ரோஹன் என்பவரோடு வார்த்தைப் போரில் ஈடுபட்டு வெற்றிப் பெற்றதால், ரோஹன் அடியாட்களை ஏவி வோல்டேரை சரமாரியாகத் தாக்கினார்.

மீண்டும் பஸ்டீல் கோட்டையில் சிறைவாசம்! இம்முறை பிரெஞ்சு நாட்டை விட்டு வெளியேறும் நிர்பந்தத்தோடு வோல்டேர் விடுதலை செய்யப்பட்டார். அங்கிருந்து இங்கிலாந்து சென்றவர், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் தாய்நாடு திரும்பவில்லை.

ஆங்கிலம் கற்றுக் கொண்டதோடு ஜான் லாக், பிரான்சிஸ் பேக்கன், ஐசக் நியூட்டன், வில்லியம் ஷேக்ஸ்பியர் போன்றோரின் எழுத்துக்களை வாசிக்கத் தொடங்கினார். இந்நாட்டில் எழுத்தாளர் அனுபவிக்கும் சௌகரியங்கள், வோல்டேரை ஈர்த்தன. அரசுக்கு எதிராக எழுதுபவர்களை ‘பிடிவாரண்ட்’ பிறப்பித்து சிறையில் அடைக்காமல், ஆட்கொணர்வு மனுவின் மூலம்விடுதலை செய்வதை எண்ணி ஆச்சரியப்பட்டார். ஊர் திரும்பியதும் ‘ஆங்கிலேயர் பற்றிய கடிதங்கள்’ எனும் புத்தகத்தில் இவற்றைப்‌ பற்றி விவரமாக எழுதி பிரசுரித்தார். பிரெஞ்சு அறிவொளி இயக்கம் அங்கிருத்துதான் தொடங்கியது.

தத்துவ நூல்கள் உபயம்: “நீங்கள் சொல்லும் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும், எனது இறுதி மூச்சுவரை உங்கள் கருத்துரிமையைப் பாதுகாக்க முயல்வேன்,” என்று வோல்டேர் சொன்னதாக நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரம் இல்லையென்றாலும், இவ்வார்த்தைகளுக்கு ஆதாரமாக அவர் வாழ்ந்தார்.

வோல்டேரின் எழுத்துக்கள் எல்லாம் தாராளவாதத் தத்துவத்தை முன்னிறுத்தின. அதீத கோபம் கொண்ட பிரெஞ்சு நாட்டு அரசாங்கம், பாரிஸ் நகரைவிட்டு துரத்தியடித்தது. அடுத்த பல ஆண்டுகளை பிரெஞ்சு நாட்டின் கிழக்குப் பகுதியிலும், ஜெர்மனியிலும் செலவு செய்தார்.

தப்பிச் செல்லும் நாட்டிலெல்லாம், தன் தீவிரமான எழுத்துக்களால் வோல்டேர் விரட்டியடிக்கப்பட்டார். அவர்தன் வாழ்க்கையில் 30,000 பக்கங்கள் எழுதியதாகப் சொல்லப்படுகிறது. அதில் காப்பியம், கவிதை, கடிதம், துண்டறிக்கை, நாவல், சிறுகதை, நாடகம், தத்துவம், வரலாறு முதலான பல்துறை எழுத்துக்கள் அடக்கம்.

(வோல்டேர் புகழ் தொடரும்)

- கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர்; தொடர்புக்கு: iskrathewriter@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in