

கெட்ட கடனிலே மிகவும் மோசமான கடன் எது என்றால், 'கிரெடிட் கார்டு' என சொல்லலாம். மிக எளிதாக கிடைப்பதாலே மிகமிக அதிக வட்டி விதிக்கிறார்கள். ஆசையை தூண்டுவதே இதன் முதல் வேலையாக இருக்கிறது. தேவைக்கு பயன்படுத்துவதைக் காட்டிலும் ஆசைக்கே அதிகம் பயன்படுகிறது. இந்த கடனுக்கான வட்டி உயர்ந்துக் கொண்டே போகும் அதேவேளையில், அதன்மூலம் வாங்கிய பொருளின் மதிப்பு குறைந்துக் கொண்டே போகிறது.
வருமானம், பணியாற்றும் நிறுவனம், கடன் மதிப்பீடு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து வங்கிகள் கிரெடிட் கார்டு வழங்க, வாடிக்கையாளர்களை தேர்வு செய்கின்றன. அந்த வாடிக்கையாளருக்கு நேரிலும், போனிலும், மெயிலிலும் ஓயாமல் தொடர்பு கொள்கிறார்கள். வாடிக்கையாளர், வேண்டாம் என்றாலும், விட மாட்டார்கள்.
“நீங்கள் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள இலவசகிரெடிட் கார்டு பெறுவதற்கு தேர்வாகியுள்ளீர்கள்'' என இனிமையாக பேசுவார்கள். போனஸ் பாயிண்ட்ஸ், கேஷ் பேக் ஆஃபர்ஸ், தள்ளுபடி விலை, குறைந்த வட்டி என வகைவகையாக வசதிகளைக்கூறி ஆசைக்காட்டுவார்கள். இதில் மயங்கி அதனை வாங்குவோர், அதற்கு கட்டப்போகும் பெரிய வட்டியை அறிவதில்லை.
சின்ன ஆசை பெரிய நஷ்டம்: கிரெடிட் கார்டு மூலம் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்குகிறார்கள். இதனை 20 முதல் 50 நாட்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த தவறினால் 36 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படும். ஆனால், அதனை வாங்கும்போது 3 சதவீத வட்டி என சொல்வார்கள்.
கிரெடிட் கார்டில் பணம் எடுப்பது மிகவும்ஆபத்தானது. அவசரத்துக்கு பணம் எடுத்துவிட்டால், அடுத்த நிமிடமே 45 சதவீதம்முதல் 60 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படும். அதற்கான வங்கி கட்டணமும் கூடுதலாக விதிக்கப்படும். இந்த கடனை கெடு விதிக்கப்பட்ட நாளுக்குள் கண்டிப்பாக செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிடில் நாளுக்கு நாள் வட்டி ஏறும். கடுகளவு வாங்கிய கடன் மலையளவு மாறிவிடும்.
கந்து வட்டி பாணி: மீட்டர் வட்டி, கந்து வட்டி போல கிரெடிட் கார்டு கடன் மிகவும் மோசமானது. அந்த கடனை செலுத்தாவிடில் பல கட்டங்களில் நெருக்குவார்கள். போனில் ஓயாமல் தொந்தரவு கொடுப்பது, சத்தமான குரலில்மிரட்டுவது, வீட்டுக்கு ஆட்களை அனுப்புவது, பணியிடங்களுக்கு வருவது, வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்புவது என எல்லா வகையான வழிகளையும் கையாள்வார்கள்.
இதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடும். இந்த கடன் காரணமாக ஊரை விட்டு ஓடியவர்களும், தற்கொலைக்கு தள்ளப்பட்டவர்களும்கூட உண்டு. கிரெடிட் கார்டு மூலம் வீட்டுக்கு பெரிய டிவி வாங்கியவர்கள், வீட்டை விற்று அந்த கடனைக் கட்டிய உதாரணங்களும் இருக்கின்றன. இந்த கடனை முழுமையாக அடைப்பது ஏழு மலை ஏழு கடலை தாண்டுவது போல சவாலானது.
ஒளிந்திருக்கும் ஆபத்து: கிரெடிட் கார்டில் கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் ஆபத்துகளும் இருக்கின்றன. அதாவது ரூ.5000க்கு ஏதேனும் வாங்கிவிட்டால் உடனே, ''தவணை முறையில் செலுத்துங்கள்'' என குறுஞ்செய்தி வருகிறது. அதனை தேர்ந்ததும் ஃப்ரீ கிரெடிட் ரத்தாகி விடுகிறது. கிரெடிட் ஸ்கோரும் குறைந்துவிடுகிறது.
கிரெடிட் கார்டு வரம்பில் 30 சதவீதத்துக்கு அதிகமாக செலவழித்தால் வாடிக்கையாளரிடம் போதிய பண வரவு இல்லை எனவும் கிரெடிட் ஸ்கோரைக் குறைக்கிறார்கள். இதனால் வீட்டுக்கடன், வாகனக்கடன் ஆகியவை வாங்குவதற்கு தடையாக மாறிவிடுகின்றன.
நல்ல கடனாக மாற்றுவது எப்படி? - கிரெடிட் கார்டில் கெடுதல் மட்டுமே இல்லை. அதனை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால் சில நன்மைகளையும் அடையலாம். சிறிய தொகையை வட்டிக்கு வாங்காமல் கிரெடிட் கார்டு மூலம் வட்டியின்றி பயன்படுத்த முடியும். கெடு தேதிக்குள் அந்த கடனை செலுத்தினால் ஜீரோ வட்டியில் நன்மையை பெறலாம்.
கிரெடிட் கார்டு வாங்கும்போது, நமது மாத வருமானத்தில் 50 சதவீதத்துக்கும் குறைவான அளவிலே கிரெடிட் லிமிட்டை வரையறுத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற பொருட்களை வாங்கவே கூடாது.
ஒரு குடும்பத்துக்கு ஒரு கிரெடிட் கார்டு போதுமானது. நிறைய கார்ட் வைத்திருந்தால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வொன்றுக்கும் பணம் செலுத்தும் தேதியும் வேறுபடும். அதனால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். இவ்வாறு பயன்படுத்தினால் கிரெடிட் கார்டு கடனை நல்ல கடனாக மாற்ற முடியும்.
(தொடரும்)
- கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in