

நான் 10-ம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு மேத்ஸ் நன்றாக வரும். அதில் பெரிய பட்டம் வாங்க ஆசை. எங்கு மேத்ஸ் பெரிய அளவில் படிக்கலாம்? - தனலட்சுமி, அரசுர்.
கணிதம் படிக்க வேண்டுமென்கிற உங்களுக்கு வாழ்த்துகள். கணிதம் இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமான பாடமாகும். அறிவியலின் அடிப்படை அங்கம் கணிதமாகும். இதனை நீங்கள் 5 வருட ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. கணிதமாகவோ அல்லது மூன்று வருட பி.எஸ்சி கணிதமாகவோ முதற்கட்டமாக படிக்கலாம். பி.எஸ்சி கணிதத்தை ஏராளமான அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் வழங்குகின்றன.
இருப்பினும் கணித படிப்பிற்கென சிறப்பு கல்வி நிறுவனமான சி.எம்.ஐ. எனப்படும் சென்னை மேத்தமாடிக்கல் இன்ஸ்டிடியூட்டில் பி.எஸ்சி கணிதம் படிப்பது மிகவும் சிறந்தது. இது கணிதத்திற்கென உள்ள சிறப்பு கல்விநிறுவனமாகும். அது போலவே இந்தியன் ஸ்டாடிஸ்டிக்கல் இன்ஸ்டிடியூட், பெங்களூரு மற்றும் கொல்கெத்தாவில் உள்ளது. இங்கும் படிக்கலாம். இங்கு கணிதம் மற்றும் புள்ளயியல் அதாவது பி.மேக்ஸ், பி.ஸ்ட்டாட் வழங்கப்படுகிறது. இதற்குமாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு படித்து வெளிவரும் மாணவர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கின்றன.
அல்லது பிற கல்லூரிகளில் பி.எஸ்சி கணிதம் பயின்று நல்ல மதிப்பெண் பெற்றால் சென்னையிலுள்ள சி.எம்.ஐ.-யில் இன்டகேரட்டட் பி.எச்டி படிப்பினில் நேரிடையாக சேரலாம்.
ஐந்து வருட ஒருங்கிணைந்த படிப்பினை திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்திலும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் ஏஜூகேஷன் அண்ட் ரிசர்ச் மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் ஏஜூகேஷன் அண்ட் ரிசர்ச் ஆகிய கல்வி நிறுவனங்களில் படிக்கலாம். அதுமட்டுமன்றி சமீபத்தில் பெங்களூருவிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனமும் பட்டபடிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
உயர்கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான உங்களது சந்தேகங்களை ‘வேலைக்கு நான் தயார்’ பகுதிக்கு vetrikodi@hindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நிபுணரின் வழிகாட்டுதல் பெறுங்கள்.
- கட்டுரையாளர்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை முன்னாள் இணை இயக்குநர்.