

புது டெல்லியில் இருந்து சண்டிகர் வழியாக அமிர்தசரஸ் செல்வது தான் நம்முடைய அடுத்த சில நாட்களுக்கான திட்டம். நம்முடைய பயணம் குறித்து சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தோம், அதைப் பார்த்த நண்பர் ஒருவர், நம்மை சந்திக்க வேண்டும் என்று இன்ஸ்டாகிராமில் செய்தி அனுப்பி இருந்தார்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இதுதான் நம்முடைய குறிக்கோள். அதனால் அவர் அழைத்ததும் சந்திக்க சம்மதித்தோம். டெல்லியில் இருந்து சண்டிகர் செல்லும் வழியில் பாட்டியாலா பகுதியில் சந்திக்கத் திட்டம். நம் ஊர்களில் இருக்கும் தாபா போல இல்லாமல், பிரம்மாண்டமாகப் பெரிய பெரிய தாபாக்கள் அந்த பகுதியில் இருந்ததைப் பார்க்க முடிந்தது.
தாபா கலாச்சாரமே இங்கிருந்து தான் மொத்த இந்தியாவுக்கும் பரவியிருக்கும் என்று எண்ண வைத்தது. தாபாக்களுக்கு வருபவர்களை வியப்பில் ஆழ்த்த வேண்டும் என ரொம்பவே மெனக்கெட்டு வடிவமைக்கிறார்கள். நிஜ விமானத்தை விலைக்கு வாங்கி, அதற்குள் தாபாவை நடத்தி வந்தார்கள்.
இன்ஸ்டா மூலம் தேடி வந்த நண்பர்: நம்மை சந்திக்க வேண்டும் என்று சொன்னவர் பெயர் யாஷ் தீப் சிங் அண்டில். பாட்டியாலா பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். நம்மை ‘அம்ரித் சுகதேவ்’ என்ற தாபாவுக்கு அழைத்துச் சென்றார்.இந்த தாபாவின் உணவின் தரமும் ருசியும் மிக சிறப்பாக இருக்கும் என்றார். பராத்தாவும் லஸ்ஸியும் ஆர்டர் செய்தோம். பராத்தா சூடாக வந்தது, அதன்மேலே வெண்ணெய் உருகிக் கொண்டிருந்தது. சின்ன வெங்காயம், ஊறுகாய் தொட்டுக்கக் கொடுத்தார்கள். அப்படி ஒரு ருசியான பராத்தாவை வேறு எங்கும் ருசித்ததே இல்லை. அவ்வளவு ருசியாக இருந்தது.
அதை சாப்பிட்டு முடித்து லஸ்ஸி குடித்தோம். ராஜஸ்தானில் குடித்த லஸ்ஸியே அவ்வளவு பிடித்திருந்தது. இந்த லஸ்ஸி அதையெல்லாம் விட ரொம்ப ருசியாக இருந்தது. இவ்வளவு கெட்டியாக இதற்குமுன் லஸ்ஸியைப் பார்த்ததே இல்லை. தாபா உரிமையாளர்களே மாட்டுப் பண்ணைவைத்து, அதிலிருந்து வரும் பாலில் தான் இந்த லஸ்ஸியை தயாரிக்கிறார்களாம்.
உணவின் தரத்துக்கும் அந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். யாஷிடம் நிறையப் பேசினோம். உணவு, கலாச்சாரம் குறித்து வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். நீண்டகால நண்பரைச் சந்தித்த உணர்வு, எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சண்டிகர் நோக்கிக் கிளம்பினோம்.
எதிர்பாராத சம்பவம்: வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. ஓய்வெடுத்து ஓய்வெடுத்து மாலை தான் சண்டிகரை சென்றடைந்தோம். சண்டிகர் ரொம்ப வித்தியாசமான ஊர். பார்த்து பார்த்து ஆங்கிலேயர்கள் இந்த நகரத்தை நிர்மானித்து இருக்கிறார்கள். செக்டார்களாக இந்த நகரம் பிரிக்கப்பட்டு, முக்கிய வீதிகளின் சாலைகள் எல்லாம் உலகத்தரத்தில் போடப்பட்டு இருந்தது. சண்டிகரில் வெளியே செல்லும் திட்டம் எதுவும் இல்லை. அதனால் அறையிலேயே உணவை வரவழைத்துச் சாப்பிட்டோம். மறுநாள் காலை அமிர்தசரஸ் செல்ல வேண்டும், பயணக்களைப்பு அதிகமாக இருந்ததால் சீக்கிரமே தூங்கிவிட்டோம்.
மறுநாள் அதிகாலை எழுந்து தயாராகிக் கொண்டிருந்தோம். தமிழ்நாட்டை விட்டுதொலைவிலிருந்தாலும், நம் ஊர் செய்திகளைத் தொடர்ந்து தெரிந்து கொண்டிருப்போம். தயாராகிக்கொண்டே செய்திகளைப் படித்து வந்தோம். அப்போதுதான் ‘அனாஸ் அஜாஸ்’ என்ற ஸ்கேட்போர்ட் பயணி சண்டிகர் அருகே பயணித்துக் கொண்டிருக்கும்போது லாரி மோதி உயிரிழந்தார், என்ற செய்தியைப் படித்ததும் பதறிவிட்டோம்.
அனாஸ் அஜாஸ் கேரளாவைச் சேர்ந்தவர். ஸ்கேட்போர்டில் பல சாதனைகளைப் புரிந்தவர். நிறைய பேருக்கு ஸ்கேட்டிங் சொல்லிக் கொடுத்தவர். நாம் இந்திய பயணம் கிளம்பும் முன்னரே, அவர்தன்னுடைய ஸ்கேட்போர்டிலேயே காஷ்மீர்வரை செல்லும் பயணத்தைத் தொடங்கிஇருந்தார். பல மாதங்கள் பயணித்து, இப்போது சண்டிகர் வரை ஸ்கேட்போர்டிலேயே வந்தவரின் மரணம் நம்மை ஏதோ செய்தது.
தொடர்ந்து அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருவதால், இந்த மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாமும் அதே சண்டிகரில் தான் இருக்கிறோம். செய்திகளில் சண்டிகர் அருகே என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது. எந்த இடம், எந்த மருத்துவமனை என வேறு எதுவும் தெரியவில்லை. அதற்குமேல் அமிர்தசரஸ் கிளம்பும் மனநிலை இல்லை. அன்று சண்டிகரிலேயே தங்கிவிட்டோம். அனாஸ் அஜாஸின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
- கட்டுரையாளர்: இதழியலாளர், பயணப் பிரியை. தொடர்புக்கு: bharaniilango@gmail.com