

குழலி: சுடர்... சுடர்...
சுடர் அம்மா: என்ன குழலி... இவ்வளவு காலையில. உள்ள வா ...
குழலி: சேர்ந்து படிக்கலாம்னு சில பாடங்களைப் பேசி வச்சிருந்தோம் அத்தை. காலையிலேயே வர்றேன்னு சொன்னான். வரக் காணோம். அதான் நானே வந்துட்டேன்.
அம்மா: சீக்கிரம் தூங்குன்னா எங்க கேக்குறான்... சொல்றதெல்லாம் 'செவிடங் காதுலஊதுன சங்காப் போச்சு'. சுடர் எழுந்திருப்பதாகத் தெரியவில்லை.
சுடர்: அத்தை, ஆண்டாள் தோழிகள எழுப்பின மாதிரி திருப்பாவை பாடி எழுப்பிருவோமா...
அம்மா: 'ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ? ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?' ன்னு ஆண்டாள் பாடினதச் சொல்றியா...
குழலி: ஆமா அத்தை. கூப்பிடுறது கூடத் தெரியாம, என்ன ஒரு தூக்கம் இவனுக்கு...
சுடர் தூக்கக் கலக்கத்தோடு வெளியில் வர...
சுடர்: என்ன கலாட்டா பண்றீங்களா...
குழலி: இல்ல சுடர்... பாட்டுப் பாடி உன்ன எழுப்பலாம்னு பார்த்தோம்.
சுடர்: செவிடன் காதுல ஊதுன சங்குன்னு கேட்டுச்சே.. அதுதான் செவிடன் காதாச்சே... தெரிஞ்சும் ஏன் கேட்காத காதுல ஊதணும்...
சுடர் அம்மா: பழமொழிகளுக்கெல்லாம் அப்படியே நேரடியாப் பொருள் எடுத்துக்கக் கூடாது சுடர். கேட்கலேன்னாலும் தப்புன்னு தெரிஞ்சா சொல்லித்தான ஆகணும்.
குழலி: நேத்துதான் செவியறிவுறூஉ-ன்னு ஒரு துறை பத்திப் பேசிக்கிட்டிருந்தோம் அத்தை.
சுடர் அம்மா: நம்ம ஔவையார் மாதிரி...சரி, நீங்க பேசிக்கிட்டிருங்க. நானும் என் வேலைகள முடிச்சிட்டு வந்திடுறேன்.
குழலி: நேத்து செவியறிவுறூஉ துறையில அமைஞ்ச பாடல்களைத் தேடினப்ப இந்தப்பாட்டு கிடைச்சது. புறநானூற்றுல 184 ஆவதுபாட்டு. காய்நெல்லறுத்துக் கவளங்கொளினேன்னு தொடங்குற பாட்டு.
சுடர்: யார் பாடின பாட்டு...
குழலி: பாடினவர் பிசிராந்தையார். பாண்டியன் அறிவுடைநம்பிங்கிற மன்னனுக்குப் பாடிய பாட்டு.
சுடர்: கோப்பெருஞ்சோழனோட நண்பர்தானே... சோழன் வடக்கிருந்து உயிர்விட்டார்னு கேள்விப்பட்டு, தன் உயிரையும் விட்டதாகச் சொல்வாங்களே. அந்தப் பிசிராந்தையார் தானே...
குழலி: அவரே தான் சுடர். இந்தப் பாட்டு பாடாண்திணையில அமைஞ்ச பாட்டு. துறை செவியறிவுறூஉ. அரசன் தன் கடமைகளை முறை தவறாமல் செய்யனும்னு அறிவுறுத்திய பாட்டு.
சுடர்: பாட்டோட பொருளைச் சொல்லு குழலி...
குழலி: பாண்டியன் அறிவுடை நம்பி, தன் குடிமக்களத் துன்புறுத்தி அதிகமா வரிவாங்கினானாம். அவன் தவறுகளைச் சுட்டிக்காட்ட மக்கள் யாருக்கும் துணிச்சலில்ல. அறிவுடை நம்பிகிட்டப் போய் அறிவுரை சொல்லி,எங்களைத் துன்பத்தில இருந்து காப்பாத்துங்கன்னு மக்கள் பிசிராந்தையார் கிட்ட வேண்டுனாங்களாம். அவர் குடிமக்களோட நன்மையநினைச்சு, ஒரு அரசன் எப்படி வரி விதிக்கணும்னு அரசனுக்கு அறிவுரை சொன்னாராம்.
சுடர்: அந்தக் காலத்துலயே வரி அதிகமா விதிச்சாங்களா... நம்ம ஜிஎஸ்டி மாதிரி இருக்குமோ...
குழலி: பிசிராந்தையார் அதை ஒருஅழகான உவமை மூலமாச் சொல்லியிருக்காரு. நெல் விளைஞ்சதும் அறுவடை செஞ்சு,அதை உணவாக்கி யானைக்குக் கவளங்களாகக் கொடுத்தா, சின்ன இடத்துல விளைஞ்ச நெல் கூடப் பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும். ஆனா, நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே வயல்ல இறங்கிச் சாப்பிட ஆரம்பிச்சிட்டா, யானை தின்கிறதைவிட யானையோட கால்கள்ல மிதிபட்டு நாசமாகிற நெல்லோட அளவு அதிகம்.
அப்படி, அறிவுடைய அரசன் மக்கள் கிட்ட எப்படி வரி திரட்டனும்னு முறைஅறிஞ்சு, மக்கள்ட்ட வரி வாங்கினா, நாட்டுமக்கள் செழிப்பா இருப்பாங்க. நாடும் செழிக்கும். அரசன் சிந்திக்காமச் செயல்பட்டா,தன் சொந்தங்களோட நின்னு பெரிய அளவில வரி திரட்ட நினைச்சா, மக்கள்கிட்ட இருக்கிற அன்பு குறைஞ்சு போற மாதிரி நடந்துக்கிட்டா, யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாம இந்த நாட்டையும் சீர்கெடச் செய்வான்னு சொன்னாராம்.
சுடர்: ரொம்ப நல்ல உவமை... அரசன் கேட்டிருப்பானா.. இல்ல செவிடன் காதுல ஊதின சங்கா... சரி குழலி... தேர்வுக்குப் படிப்போம்.
- கட்டுரையாளர்: தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com