

இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற டச்சு அறிஞர் சர். ஆந்த்ரே கான்ஸ்டன்டைன் கெய்ம் (Sir Andre Konstantin Geim) பிறந்தநாள் அக்டோபர் 21. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# ரஷ்யாவின் சோச்சி என்ற இடத்தில் (1958) பிறந்தவர். ஜெர்மனியைப் பூர்வீகமாகக் கொண்ட பெற்றோர் இருவருமே பொறியாளர்கள். இவருக்கு 7 வயதாகும்போது குடும்பம் நல்சிக் நகரில் குடியேறியது. அங்கு பள்ளிக்கல்வி பயின்றார்.
# அறிவியல், கணிதத்தில் சிறந்து விளங்கினார். மாஸ்கோ இயற்பியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். ரஷ்ய அறிவியல் அகாடமியில் பயின்று, உலோக இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
# மைக்ரோ எலெக்ட்ரானிக் டெக்னாலஜியில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக 1990 முதல் பணியாற்றினார். பின்னர் நெதர்லாந்து சென்று, பல கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். டச்சு, பிரிட்டன் குடியுரிமைகள் பெற்றவர்.
# நெதர்லாந்தின் ரேட்போட் பல்கலைக்கழகத்தில் 1994 முதல் 2000 வரை இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றினார். 2001-ல் மான் செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு, மான்செஸ்டர் சென்டர் ஃபார் மீசோசயின்ஸ் அண்ட் நானோ டெக்னாலஜி அமைப்பின் இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
# ராயல் சொசைட்டியின் ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அப்போது பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து பல்வேறு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார். கிராஃபைட்டில் இருந்து ஒற்றை அணு அடுக்குகளைப் பிரித்தெடுக்கும் எளிய முறையைக் கண்டறிந்தார்.
# இதன்மூலம் கிராபீன் எனப்படும் ஓரணு தடிமன் கொண்ட மிக மெல்லிய கரிமப் படலத்தாள்களை உருவாக்கினார். இந்தக்கண்டுபிடிப்புக்காக, இவருக்கும் கான்ஸ்டன்டைன் நோவோசெலோவ் என்பவருக்கும் கூட்டாக 2010-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
# இவரது கண்டுபிடிப்பு மெல்லிய ஆனால்,மிகவும் வலுவான, கடினமான பொருட்களில் ஒன்று. மேலும் சிறந்த மின் கடத்தியும்கூட. சிலிக்கானுக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடிய திறனும் பெற்றது, அபார ஒளிபுகும் தன்மையால், இது டச் ஸ்கிரீன், சோலார் செல்களுக்கு ஏற்றது என்றும் இவர் கூறுகிறார்.
# பயோமிமெடிக் (biomimetic) (உயிரி வேதியியல் செயல்முறைகளை நகலெடுக்கும் செயற்கை முறை) பிசின் தயாரிப்பில் ஈடுபட்டார். இது ‘கெக்கோ டேப்’ எனப்பட்டது. மரப்பல்லி (gecko) காலின் இறுகப்பற்றும் தன்மை போன்ற ஒருவகை ஒட்டுநாடாவை (கெக்கோ டேப்) உருவாக்கும் ஆய்வுகளை மேற்கொண்டு சோதனை செய்துள்ளார். தண்ணீரின் நேரடி டயாமேக்னடிக் இலகுத் தன்மையைக் கண்டறிந்தார். இதற்காக ‘இக் நோபல்’ (Ig Nobel) பரிசு பெற்றார்.
# மீசோஸ்கோபிக் இயற்பியல், மீக்கடத்தும் திறன் பற்றி ஆராய்ந்தார். ‘முனைவர் பட்டம் பெறுவதற்காக தேர்ந்தெடுக்கும் விஷயத்தைப் பற்றிதான் பலரும் தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள். அது எனக்கு பிடிக்காது’ என்று கூறும் கெய்ம், விதவிதமான 5 விஷயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளார். மாட் மெடல் மற்றும் பரிசு, இபிஎஸ் யூரோஃபிஸிக்ஸ் பரிசு, காப்ளே பதக்கம், கார்பர் பதக்கம் உட்பட பல விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார்.
# பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன. இயற்பியல் களத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் ஆந்த்ரே கெய்ம் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் இயற்பியல், வானியல் கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.