

ஆடித் தள்ளுபடி என்ற விளம்பரத்தைப் பார்த்துவிட்டுப் புதிய ஆடை வாங்கலாம் என்று நீங்கள் நினைக்கும் நொடியில் இருந்தே சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குத் துணைபோக ஆரம்பித்து விடுகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் ஆன்லைனில் ஒரு ஆடையை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இணையத்தைப் பயன்படுத்துவதற்கு வேண்டிய மின்சாரம் புதைபடிம எரிபொருளில் இருந்துதான் கிடைக்கிறது. நீங்கள் வாங்கப்போகும் ஆடையைத் தயாரிப்பதற்கான பருத்தி விவசாயத்திலும் கார்பன் வெளியாகிறது.
பருத்தியில் இருந்து ஆடையை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்குவதற்கும், அந்தத் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களைத் தயாரிப்பதற்கும் புதைபடிம எரிபொருள் தேவை. பிறகு அந்த ஆடையைத் தொழிற்சாலையில் இருந்து கடைக்கும், அங்கிருந்து உங்கள் வீட்டுக்கும் எடுத்துச் செல்வதற்கு போக்குவரத்து தேவைப்படுகிறது அல்லவா? அதிலும் கார்பன் உமிழப்படுகிறது.
ஆடையை வாங்கிப் பார்த்துவிட்டு உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று திரும்பி அனுப்புகிறீர்கள். அதுக்கும் போக்குவரத்து ஆகிறது. ஒருவேளை அந்த ஆடையைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் கிழிந்தவுடன் தூக்கி எறிந்துவிடுகிறீர்கள். அது மக்கும்போதும் பசுமைக்குடில் வாயு வெளியாகிறது. இப்படி ஒரு ஆடைக்காக மட்டுமே நாம் எவ்வளவு கார்பன் உமிழ்வு வெளியாவதற்குக் காரணமாகிறோம்? இப்படித்தான் ஆடை உற்பத்தியில் மட்டும் பில்லியன் மெட்ரிக் டன் அளவிலான கரியமில வாயு வெளியிடப்படுவதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
மேற்சொன்ன எடுத்துக்காட்டை நாம்பார்த்ததற்குக் காரணம், நாம் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு நேரடியாகத்தான் துணைபோகிறோம் என்பது அல்ல. மறைமுகமாகவும் காரணமாகிறோம்.
(ஆடை குறித்து மேலும் பேசுவோம்)
- கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர்; தொடர்புக்கு: tnmaran25@gmail.com