

நாட்பட நாட்பட தனது சிகிச்சையால் நலம் பெற்ற நோயாளிகளின் மகிழ்வைக் கண்டார் டாக்டர் மேரி. இதன் மூலம் அவரது பணி மேலும் துல்லியமாக, நேர்த்தியான கைதேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணராக புகழ்பெற ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் மருத்துவ வரலாற்றின் முதல் வீல்சேர் டாக்டர் என்று மேரி வர்கீஸை உலகம் கொண்டாட ஆரம்பித்தது.
என்னதான், தான் செய்யும் பணியை உலகமே பாராட்டினாலும், தனிப்பட்ட முறையில் குளிப்பது, கழிப்பறை உபயோகப்படுத்துவது, ஆடை உடுத்துவது என எந்தவொரு செயலுக்கும் பிறரை சார்ந்திருப்பது அவருக்கு வருத்தமளிப்பதாகவே செய்தது.
அதேசமயம் ஆஸ்திரேலியாவிலிருந்து சிஎம்சிக்கு வருகை தந்திருந்த லூயிஸ் எனும் மாற்றுத் திறனாளி மருத்துவர், போலியோவால் பாதிக்கப்பட்டபோதும் பிறர்உதவியின்றி நடமாடுவதைக் கண்டார். அவரிடம் மேரி ஆலோசனை கேட்க, அவர் சொன்னதின் பேரில் 1957-ல்ஆஸ்திரேலியாவிற்குப் பயணம் மேற்கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் இருந்த, தி ராயல் பெர்த் மருத்துவமனையின் புனர்வாழ்வு மையத்தில் இயன்முறை சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டார். அங்கே அவர்கள் அளித்த பயிற்சிகளின் உதவியால் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள கற்றுக்கொண்ட மேரிக்கு, நீண்ட நாட்கள் கழித்து பிறரது உதவியின்றி வாழ்வது பெரும் சுதந்திரத்தைத் தந்தது. அதேசமயம் அவர் மனதில் வேறு ஒரு திட்டமும் இருந்தது.
எதுவும் கடினமல்ல... சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய மேரி, அதேபோல ஒரு புனர்வாழ்வு மையத்தை தொடங்கி இந்தியாவில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவ நினைத்தார். அவரது முயற்சிகளுக்கு, உலக புனர்வாழ்வு அமைப்பும் உதவிக்கரம் நீட்ட, அதன் நிதியுதவியுடன் அமெரிக்காவிற்குப் புறப்பட்டார் மேரி.
"எதுவும் கடினமல்ல.. முயற்சியும் நம்பிக்கையும் இருப்பவர்களுக்கு.." எனும் வரிகளுடன் தொடங்கிய இயன்முறைப் புத்தகத்தை தனது பைபிள் போலவே கருதிய மேரி, அடுத்த இரண்டு ஆண்டுகளும் அமெரிக்காவின் நியூயார்க்கில் இயன்முறை கல்வியை தீவிரமாக கற்றுத் தேர்ந்ததோடு, அந்த இடத்தின் புதிய சூழலிலும் உணவு, உறைவிடம் போன்ற தனது தேவைகள் அனைத்தையும் தானே சமாளித்து, ஒருகட்டத்தில் தானே வாகனம் ஓட்டவும் கற்றுக் கொண்டார்.
1962-ல் அமெரிக்காவின் இயன்முறை சிறப்புப் பட்டத்தைப் பெற்றவர், தொடர்ந்து இங்கிலாந்தின் ஸ்டோக் மாண்டவில் மருத்துவமனைக்குச் சென்று, அங்கும் உடல் உறுப்புகளின் பயன்பாட்டு உறுதியை மேம்படுத்தும் சிறப்பு பயிற்சிகளையும் கற்றுத் தேர்ந்தார்.
முழுமையானதொரு இயன்முறை மருத்துவராக நாடு திரும்பிய டாக்டர் மேரி,முதல் வேலையாக செய்ததே இந்தியாவின் முதல் இயன்முறை மற்றும் புனர்வாழ்வு மையத்தைத் தொடங்கியது தான். 1963 ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் தலைமையில் சிஎம்சி வேலூரில் தொடங்கப்பட்ட அந்த புனர்வாழ்வு மையம், டாக்டர் மேரியின் வழிகாட்டல்களுடன் அடுத்த மூன்றாண்டுகளில், 'மேரி வர்கீஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரீஹேபிலிட்டேஷன்' என, நாடெங்கும் இருந்த போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோயாளர்கள், விபத்து அல்லதுசிகிச்சை காரணமாக கை கால்களை இழந்தவர்கள், செரிப்ரல் பேல்சியால் பாதிக்கப்பட்டவர்கள், பக்கவாதம் மற்றும் தண்டுவட பாதிப்பு உள்ளவர்கள் என அனைவருக்கும் உதவும் இயன்முறை சிகிச்சை மையமாக, முழுமையாக செயல்படத் தொடங்கியது.
மனிதநேயம் மிகுந்த மருத்துவம்: அந்த மையத்தில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகளை கவனிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வீல் சேரில் அமர்ந்தவண்ணம் அளித்த டாக்டர் மேரி, அதற்கான பயிற்சிக் கல்வியையும் சிஎம்சி வேலூரில் தொடங்க ஏற்பாடுகள் செய்தார்.
மேலும் வெளிநாட்டு நிறுவனங்கள் வாயிலாக பல்வேறு நிதியுதவியுடன், இயன்முறை சிறப்பு உபகரணங்கள் பலவற்றை இந்தியாவிற்கு வர வைத்தார். இருந்தாலும் அது பெரும்பாலும் நமது மக்களின் உடல்வாகுக்கு ஏற்றதாக இல்லாமலும் விலை அதிகமாகவும் இருப்பதைப் பார்த்த அவர், தானே சுதேசி உபகரணங்கள் செய்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்கத் தொடங்கினார்.
மரத்தால் செய்யப்பட்ட செயற்கை கால்கள்,வாக்கர், பிக்கர், மாற்றுத் திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் இருக்கைகள், மேஜைகள், கட்டில்கள் போன்றவற்றை வடிவமைக்க டாக்டர் மேரி பெரிதும் உதவினார். அவற்றுடன் நிற்காமல், பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு தையல் உள்ளிட்ட தொழிற்பயிற்சிகளையும் உருவாக்கித் தந்தார் டாக்டர் மேரி.
கைதேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணராக மட்டுமல்லாமல், கைதேர்ந்த நிர்வாகியாகவும் செயல்பட்ட டாக்டர் மேரியின் நேர மேலாண்மையை பாராட்டுபவர்கள் இன்றும் இருக்கிறார்கள். வீல் சேரில் அமர்ந்திருந்த அந்த மெல்லிய உருவத்திற்குள் அவ்வளவு வலிமையும் நேர்மையும் நிறைந்திருந்தது என்று சிலாகிக்கும் அவரது உதவியாளர்கள், அதேசமயம் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் பல்வேறு உதவிகளை செய்தார் என்று அவரது உதவிகளை இப்போதும் நினைவு கூர்கின்றனர்.
(மகிமை தொடரும்)
- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com