நானும் கதாசிரியரே! - 22: ரசனையை மாற்றும் மூன்று காரணங்கள்!

நானும் கதாசிரியரே! - 22: ரசனையை மாற்றும் மூன்று காரணங்கள்!
Updated on
2 min read

கதை எழுதும் ஒருவருக்கு ரசனை மிகவும் முக்கியம் என்று சென்ற பகுதியில் பார்த்தோம் இல்லையா? அதை ஒட்டி சில விஷயங்களைப் பார்ப்போம். ரசனை என்பது மூன்று காரணங்களுக்காக வேறுபடும். ஒன்று, நம் வயது. மற்றொன்று நம் சிந்தனை, அடுத்து நாம் வாழும் வாழ்க்கை சூழல். அதெப்படி? ஓர் இடத்தில் மழை பெய்கிறது. அதை எல்லோரும் ரசித்துதானே பார்ப்பார்கள். வயது, சிந்தனையும் மழையை ரசிப்பதை எப்படி வேறுபடுத்தும் என்ற கேள்வி எழும். சரியான கேள்விதான்.

நீங்கள் ஒரு கடைத் தெருவுக்குச் செல்கிறீர்கள். திடீரென்று மழை வந்துவிடுகிறது. ’ஆஹா, மழை பெய்கிறது… நனைஞ்சிட்டுகிடே வீட்டுக்குப் போலாம்’ என்று மழையை வரவேற்பீர்கள். ஆனால், தெரு ஓரங்களில் காய்கறி வியாபாரம் செய்பவர்கள் உங்கள் அளவுக்கு மழையை ரசிப்பார்களா? அவர்களின் வியாபாரம் கெடுவதையும் பொருட்கள் நனைவதையும் பற்றி கவலையல்லவா படுவார்கள்.

யார் பக்கம் நீங்கள்? - கதை எழுதும் நீங்கள் எந்தப் பக்கத்தில் இருந்து மழையைப் பற்றி எழுதப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியம். அந்த வியாபாரியின் பார்வையில் கதை நடக்கிறது என்றால் மழை என்பது ரசிக்கக்கூடியது அல்ல. ஆனால், அங்கு வரும் ஒரு சிறுமி அல்லது சிறுவனைப் பற்றிய கதை என்றால் மழை நிச்சயம் மகிழ்ச்சிக்கு உரிய ஒன்றுதான்.

ரசனை மாறுபடுவதில் வயது, வாழும் சூழல் என்பது புரிந்துகொள்ள முடிகிறது. சிந்தனை என்பது எப்படி ரசனையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அடுத்த கேள்வி எழுகிறதா?

நிச்சயம் ஏற்படுத்தும்: சினிமாக்களில் ஒருவரின் உருவத்தைக் கேலி செய்து அவரை எட்டி உதைப்பது போன்ற காட்சிகள் இடம்பெறும். முன்பெல்லாம் அதைப் பார்த்து சிரிக்க மட்டுமே செய்தோம். இப்போது, ஒருவர் குண்டா இருப்பதையும், கறுப்பாக இருப்பதையும் கேலி செய்தால், சிரிப்பை விட கோபம்தான் வருகிறது. கறுப்பும் ஒரு நிறம்தானே… இதை ஏன் கிண்டல் செய்ய வேண்டும் என்று யோசிக்கிறோம்.

அதேபோல, பெண்களை அலுவலக வேலைக்கு அனுப்பாமல் வீட்டுக்குள் அடிமைப்போல நடத்துவது போன்ற காட்சிகளைப் பார்த்து நம் மரபை அழகான காட்சியாக எடுத்துள்ளார் இயக்குநர் என்று ரசித்தோம். இன்றோ, அந்தப் பெண் அலுவலக வேலை செல்லக் கூடாதா… அவர்கள் சம்பாதிக்கக் கூடாதா என்ற கேள்விகளை எழுப்புகிறோம். ஆக, நாம் சினிமாவை ரசிக்கும் விதம் மாறியிருக்கிறது.

ரசனை மாற்றம் முக்கியம்: முன்பு எல்லாம் திருநங்கைகளை ஒரு எண் வைத்து அநாகரிகமாகக் குறிப்பிடுவார்கள். அவர்களின் குரல் மாற்றத்தை வைத்து நக்கல் செய்வார்கள். இன்று அப்படிச் செய்வதற்கு பலருக்குத் துணிச்சல் இல்லை. அதை மீறியும் செய்யும் சிலருக்கு பல இடங்களில் இருந்து கண்டனங்கள் வருகின்றன.

உடல் உறுப்புகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பவர்களை நொண்டி, ஊமை என சொற்களாலும் ஒதுக்கி வைத்தோம். இப்போது, அப்படி இல்லை மாற்றுத் திறனாளிகள் வார்த்தைகளாலும் மரியாதை கொடுக்கிறோம். சமமாக நடத்த முயல்கிறோம்.

இது எப்படி ரசனைக்குள் வரும். நிச்சயம் வரும். நாம் எழுதும் கதையில், ஒருவர் நல்ல குணங்களைக் கொண்டவர் என்பதைச் சொல்ல வேண்டும். அதற்காக, அவர் சிவப்பு நிறம் கொண்டவர் என்றும், தீய எண்ணம் கொண்ட ஒருவரை கறுப்பு நிறத்தவர் என்றும் நம்மை அறியாமல் குறிப்பிடக் கூடாது.

அப்படி எழுதாமல் இருக்க வேண்டும் என்றால், கறுப்பு நிறத்தின் மீது நம்மிடம் திணிக்கப்பட்டிருக்கும் எண்ணங்களை உதற வேண்டும். அப்படி உதறிவிட்டு கறுப்பு நிறத்தவர்களைப் பார்க்கும்போது நம் பார்வை நிச்சயம் மாறுபடும். அதைத்தான் ரசனை மாற்றம் என்கிறோம்.

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் நாம் இதுவரை படித்துவந்தவற்றைப் பயன்படுத்தி சிந்தித்து ரசனையை மேம்படுத்திக்கொள்வது கதாசிரியருக்கு மிகவும் அவசியமான பண்பு.இன்னும் சில விஷயங்களை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

- கட்டுரையாளர் : எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in