கதை கேளு கதை கேளு - 46: தன்வியின் பிறந்தநாள்

கதை கேளு கதை கேளு - 46: தன்வியின் பிறந்தநாள்
Updated on
2 min read

கதையின் கதாநாயகி தன்வியின் பிறந்தநாளில் தன்விக்கு வாழ்த்துச் சொல்ல, அவள் கண்விழித்துப் பார்க்கும் நேரத்திற்காக காத்திருக்கின்றனர் பெற்றோர். தன்வி தூக்கத்தில் புரண்டு படுக்கிறாள். சில பெருமூச்சுகளை விடுகிறாள் ஆழ்ந்த உறக்கத்திலேயே. ஒவ்வொரு பெருமூச்சிலும் அவள் ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்கள் உருவம் பெறுகின்றன.

தன்வி நீராடிக் களித்த அருவி, காலில் பட்ட அடியினால் வலியில் இருந்த சிங்கத்திற்கு தன்வி செய்த பிரார்த்தனை, அழகான குருவி, ஆடும் மயில், ரசித்த வானம், ஓடிய வயல், சூரியன், நிலவு, வனத்தின் செழுமை என எல்லாமும் தன்வியின் பிறந்தநாளில் தன்விக்கு முத்தமிட்டு வாழ்த்துக்கூற விரும்புகின்றன. இறுதியாக எல்லோரின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள, தன்வி தொட்டு முகர்ந்து பார்க்கும் ரோஜா பூவாக தாங்கள் மாறுவதெனவும், தன்வி ரோஜாவை முத்தமிட வரும்போது, அனைவருமாக அவளுக்கு முத்தமிட்டு வாழ்த்து சொல்லவும் திட்டமிடுகின்றன. அவ்வாறே தன்வி தன் பிறந்தநாளில் வாழ்த்தும் பெறுகிறாள் தன்வி.

அன்புள்ள அண்ணன்

தன்விக்கு ஒரு அண்ணன் இருக் கிறான். அவன் பெயர் ஜெய். அவனை அவசரத்திற்கு டீ வாங்க, அவன் அம்மா கடைக்கு அனுப்பினால், கடைக்காரர் சொல்லும் வேலையெல்லாம் செய்துமுடித்து தாமதமாக வீடு திரும்பும் நல்லவன். தன்விக்கு உடல்நிலை சரியில்லாததற்கு மருந்து வாங்கச் சைக்கிளில் செல்லும் அவசரத்திலும், தெருமுனையில் உள்ள அறிவியல் ஆசிரியரின் வீட்டு வாசலில் நகர்ந்து செல்லும் தேளைப் பார்த்துவிட்டு, ஆசிரியரின் குடும்ப உறுப்பினர்களுக்கு தீங்கு விளைவித்துவிடுமோ என்ற அச்சத்தில், ஆசிரியருக்கு தேள் இருக் கும் இடத்தைக் சுட்டிக்காட்டிச் செல்லும் குணவான்.

சமூக அக்கறை

இந்த இரண்டு குழந்தைகளின் அன்றாடங்களை விவரிக்கும் விதமாக யூமாவாசுகியின் சிறுவர் கதை செல்கிறது. நாவலாக அல்ல. சிறுவர் சிறுகதைகளாக இருந்தாலும் தன்வி, ஜெய் ஆகியோரின் குணங்களை, அன்றாடச் செயல்பாடுகளை, இருவரின் சமூக அக்கறையை கதையில் வெளிப்படுத்துகிறார். கதையில் வரும் குட்டி நாயின் ஆசை வித்தியாசமாய் இருக்கிறது. அம்மா நாய் இறந்துபோன பின்பு, உணவுக்காகப் போராடும் வாழ்க்கையைப் பெறுகிறது குட்டிநாய். ஆனாலும் மற்ற நாய்களை பெயரிட்டு அழைப்பதை பார்க்கும் குட்டி நாய், தனக்கும் ஒரு பெயர் வேண்டும் என ஆசைப்படுகிறது. ஜெய் பார்வையில் படும் குட்டி நாய்க்கு பெயரும் கிடைக்கிறது. நாள்தோறும் உணவும் கிடைக்கிறது.

பிரச்சினைக்கு தீர்வு

ஒரு விஷயத்தை மனம்விரும்பி செய்யவிரும்புவோம், அதில் ஏற்படும் கவனக்குறைவை நினைத்து சலிப்பும் கொள்வோம். எண்ணல் கதையில் தன்வி, தன் தோட்டத்துப் பூக்களை எண்ணிவிட தொடங்குகிறாள். இடையிடையே மடைமாறி அவள் எண்ணம் சிதறுகிறது. பூக்களின் எண்ணல் தடையாகி நின்றுபோகிறது. வாசிக்கும் வாசிப்பாளர்களுக்கு எண்ணல் கதை, சிறந்த கற்றலைத் தரும். கூடவே எண்ணத்தை சிதறடிக்காத வலிமையையும் தரும். தோட்டத்து ஈரத்திற்காக வீடு தேடிவரும் நாய், செடிகளை பாழாக்குவதால் ஆரம்பத்தில் விரட்டுகிறாள் தன்வி. ஆனால் நாய் குளிர்ச்சியை நாடி வருவதை உணர்ந்து, தோட்டத்தின் மரநிழலில் நீரூற்றி, குளிர்ச்சியாக்கி நாய் படுத்துக்கொள்ள இடம் தருகிறாள். பிரச்சினையை உள்வாங்குதல், சிந்தித்தல், தீர்வு காணுதல் என்பதை நம் மனதிற்குள்ளும் கடத்து கிறது இச்சிறுகதை.

வெளிநாடுகளில் சிறுவர் கதைகள்

வெளிநாடுகளில் வயது மற்றும் வகுப் புக்கு ஏற்ப சிறார்களுக்கான கதைகள் வெளிவருகின்றன. நம் நாட்டில் சிறார்களுக்கான பிரிவில் கதைகள் வெளிவருவதே தற்போதுதான் அதிகரித்துள்ளது. எழுத்தாளர் யூமாவாசகி மலையாள சிறார் கதைகளை நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். அடிப்படையில் அவர் ஒரு ஓவியர்.

சிறார்களுக்காக அவர் எழுதியுள்ள சிறுகதைகள், நடைமுறையிலிருந்து புதியவற்றை அறிந்துகொள்ளும் பாதையை நோக்கி அழைத்துச் செல்கின்றன. இக்கதைகளை சிறுவர்கள் ஆர்வமாக வாசிக்கலாம். அறிதல்களையும் அனுபவங்களையும் பெறலாம். ஆனந்தமான மனநிலையை அடையலாம்.

- கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in