

80 நாட்களில் உலகப் பயணம்’ என்றபுத்தகத்தைப் படித்தேன். அப்படி ஒரு பயணத்தை யாராவது நிஜமாகவே மேற் கொண்டிருக்கிறார்களா?
- சு. குருபிரசாத், 6-ம் வகுப்பு, கே.வி.எஸ். பள்ளி, விருதுநகர்.
பிரெஞ்சு எழுத்தாளர் ஜுல்ஸ் வெர்ன் எழுதிய ‘80 நாட்களில் உலகப் பயணம்’ என்கிற நூல் 1873-ம் ஆண்டு வெளிவந்தது. அமெரிக்காவில் ‘நியூயார்க் வேர்ல்ட்’ என் கிற பத்திரிகையில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்து வந்த நெல்லி ப்ளையிடம், நாவலைப்போல் நிஜத்திலும் 80 நாட்களில் உலகைச் சுற்றி வரும்படி கேட்டுக் கொண்டார் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர்.
1889ஆம் ஆண்டு தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தார் நெல்லி ப்ளை. பயணத்தின் நடுவில் நாவலாசிரியர் ஜுல்ஸ் வெர்னையும் சந்தித்து, வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார். மொத்தம் 24,899 மைல் தூரத்தைக் கடந்து, 72 நாட்களிலேயே உலகை வலம்வந்துவிட்டார்! விமானம் இல்லாத அந்தக் காலக்கட்டத்தில் நெல்லி ப்ளை மேற்கொண்ட இந்த உலகப் பயணம் மிகப் பெரிய சாதனை. ஒரு பெண் தனியாக மேற்கொண்ட உலகப் பயணம் வரலாற்றில் நிலைத்துவிட்டது, குருபிரசாத்.