திறன் 365 - 17: கதை கேளு; விளையாடு, கணக்கு கற்றுக் கொள்

திறன் 365 - 17: கதை கேளு; விளையாடு, கணக்கு கற்றுக் கொள்
Updated on
2 min read

கணக்குப் பாடத்தைக் கற்பதுஎளிமையானது. கற்றுக் கொடுப்பதும் அதைவிட எளிமையானது. அதுவும் கதை வடிவத்தில் கற்பது ஆர்வத்தைத் தூண்டும். கதைகள் மொழித் திறனை வளர்ப்பவை தானே! கணிதத்திறனையும் வளர்க்குமா? ஆம்!

விளையாட்டாய் கதை சொல்லு வோம். கணக்குகளை ரொம்ப ஜாலியாகக் கற்றுக் கொள்வோம். மேலும், குழந்தைகளைக் கற்பனை உலகில் மூழ்கடிப்போம். படைப்பாற்றலைத் தூண்டுவோம். குழந்தைகளின் புதுமையான சிந்தனைத் திறன்களின் வளர்ச்சிக்கு உதவுவோம். வழக்கத்திற்கு அப்பால் சிந்திக்கச் செய் வோம்.

கணக்கில் எண்கள் என்ற தலைப்பை எடுத்துக் கொண்டால் ஒற்றை எண்கள், இரட்டை எண்கள், பகு எண்கள், பகா எண்கள், சிறிய எண்கள், பெரிய எண்கள், சதுர எண்கள், முக்கோண எண்கள் என இப்படி இருவகைகள் இருக்கும். இந்த எண்களைக் கற்றுக் கொடுக் கவும், கற்றுக் கொடுத்தபின் வலுவூட்டவும், மதிப்பீடு செய்யவும், இச்செயல்பாட்டைப் பயன்படுத்தலாம். இந்தச் செயல்பாடு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கானது ஆகும்.

எண்கள் எழுதிய அட்டைகள் (வகுப்புக்கு- திறனுக்கு உரிய எண்கள்) தயாரித்து வைத்துக் கொள்ள வும். அவற்றைக் குழந்தைகளிடம் கொடுத்து, நன்றாக கலக்கச் செய்யவும். பின்பு, அவற்றை ஆசிரியர் கையில் வைத்துக் கொள்ளவும். குழந்தைகளை இரண்டு குழுவாகப் பிரிக்கவும். இருவரையும் ஆசிரியரைப் பார்த்து, நேர் வரிசையில் ஒருவருக்கு பின் ஒருவர் தொடாமல் நிற்கச் செய்யவும். விளையாட்டின் விதியைத் தெளிவாகக் கூறவும். அதாவது, ஒற்றை எண் அட்டையைக் காண்பிக்கும் போது அல்லது கூறும் போது அவர்களது இடது பக்கம் பக்கவாட்டில் குதிக்க வேண்டும்.

இரட்டை எண் அட்டையை காண்பிக்கும் போது வலது பக்கம் பக்கவாட்டில் குதிக்க வேண்டும். இரு குழுக்களிலும் தவறாகக் குதிப் பவர்கள் விளையாட்டில் இருந்து நீக்கப்படுவார்கள். விளையாட்டு முடிவில் எந்தக்குழுவில் அதிக குழந்தைகள் உள்ளனரோ அந்தக்குழுவே வெற்றி பெற்ற குழுவாகும்.

இப்படி குதிக்கக் கற்றுக் கொண்டபின்பு, ஆசிரியர் கதைகூற ஆரம்பிக்கலாம். உதாரணத்திற்கு, “ஒருஊரில் இரண்டு குழந்தைகள் வசித்து வந்தனர். அவர்களது தந்தைஇருவருக்கும் முறையே ஐந்து பென்சில்கள் வாங்கித் தந்தார். இருவரும் காலை ஒன்பது மணிக்கு பள்ளிக்கு கிளம்புவார்கள். அமுதன் மூத்த பையன். அவன் தனது நண்பனுக்கு இரண்டு பென்சில்கள் தந்தான். மீதம் உள்ள மூன்று பென்சில்களைப் பையில் பத்திரமாக வைத்துக் கொண்டான். நிலவன் கடைக்குட்டி.

அவன் நான்கு பென் சில்களை வீட்டில் வைத்துவிட்டு, ஒரு பென்சிலை மட்டும் பள்ளிக்குக் கொண்டு வந்தான். வரும் வழியில் சாலையை கடக்கும் வண்டிகளை அழுதன் எண்ணினான். 5, 7, 10, 13,14,17,18,23, 45… ஆனால், நிலவன் போலி ரூபாய் தாள்களை எண்ணிக் கொண்டு வந்தான். நூறு, ஆயிரம், ஆயிரத்து நூற்று ஐந்து, ஆயிரத்து எழுநூற்று இருபத்து ஏழு… அதற்குள் பள்ளி வந்தது. இருவரும் தங்கள் வகுப்பிற்குச் சென்றனர். இப்படி நீங்கள் கதைகளைத் தொடரலாம்.

விளையாட்டு விதிகள்படி சரியாககுதிக்கிறார்களா என கவனிக்கவேண்டும். தவறாக குதிப்பவர்களுக்கு எண்கள் குறித்து புரிதல் இல்லை என்பதை அறிந்து, மீண்டும் எண்கள் பாடத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதுபோல எண்கள் குறித்த பிற பாடத்திற்குக் கதைவிளையாட்டுகளைப் பயன்படுத்தலாம்.

கதைகளைக் கேட்டுக் கொண்டே விளையாடுவதால் குழந்தைகளின் கேட்கும் திறன் வளர்க்கிறது. அதாவது, ஆசிரியர் எந்த எண்ணைக் கூறுகிறார் என்று புரிந்துக் கொள்ள கவனம் செலுத்துகின்றனர். அவர்கள் இதுபோன்று கதைகள் சொல்லிவிளையாடுவதன் மூலம் எண்கள் குறித்த புரிதல் இன்னும் மேம்படுகிறது. படைப்பாற்றல் திறன் மேம்படுகிறது. முயன்று பாருங்கள். கணக்கு கற்பிப்பதில் வித்தியாசப்படுவீர்கள்.

- எழுத்தாளர், தலைமையாசிரியர்,டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in