

ஆப்பிரிக்கா கண்டத்துல, கடற்கரை நாடுகள் 38 இருக்கு. இதுல நாம் பார்க்கப் போற நாடு எது? யாராவது சொல்லுங்க…
‘எகிப்து.. எகிப்து..’
நல்ல யோசனை. ஆனா... நாம் பார்க்கப் போற நாடு, கிரிக்கெட்டுல வலிமையான அணி. ‘தென் ஆப்பிரிக்கா!’
ஆஹா… பிரமாதம்! நீங்க எல்லாரும் கிரிக்கெட்ல ரொம்ப ஸ்டிராங்கா இருக்கீங்கன்னு தெரியுது. தென் ஆப்பிரிக்கா பத்தி கொஞ்சம் பார்ப்போமா.
இந்தியாவுக்கு கன்னியாகுமரிபோல, ஆப்பிரிக்க கண்டத்துக்கு தென் ஆப்பிரிக்கா நாடு. என்ன அர்த்தம்?
‘தென் கோடியில இருக்கு’
அபாரம். தெற்கு முனையில இருக்கு. அப்படின்னா நிச்சயம் கடல் இருக்கதானே செய்யும்.
தென் அட்லாண்டிக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய இரண்டிலுமாக சுமார் 2800 கி.மீ. நீள கடற்கரை உள்ளது. பல்லுயிருக்கு மிக முக்கிய நாடாக விளங்கும் தென் ஆப்பிரிக்காவின் மக்கள் தொகை 6 கோடி. தலைநகரம் ப்ரிடோரியா. அரசியல் தலைநகரம் (நாடாளுமன்றம் உள்ள) கேப் டவுன். உச்ச நீதிமன்ற நகரம் ஜொஹன்னஸ்பர்க்.
தென் ஆப்பிரிக்காவில் காந்தி
ஒரு காலத்தில் நிறவெறி தலை விரித்தாடிய நாடு. மக்கள் தொகையில் 80 சதவீதம் உள்ள கருப்பின மக்களை 20 சதவீதத்துக்கும் குறைவான வெள்ளையர் அடக்கி ஆண்டனர். மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோரின் அகிம்சை வழிப் போராட்டத்தால் சுதந்திரம் மலர்ந்தது. எல்லாருக்கும் சம உரிமை கிடைத்தது.
உலகின் தொன்மையான மொழிகளான ஜூலு, ஜோஸா ஆகியன இந்த மண்ணின் பூர்வகுடிகளின் பேசு மொழி ஆகும். எண்ணற்ற மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாடுகள் கொண்ட தென் ஆப்பிரிக்கா, பல வகைகளில் இந்தியாவைப் போன்றே உள்ள நாடாகும். அதனாலேயே நமக்கு மிகவும் விருப்பமான நட்பு நாடாகும்.
பொதுவாகவே ஆப்பிரிக்க நாடுகளில் இயற்கை வளங்கள், சுரங்கங்கள் அதிகம். அதிலும் உலகில் மிக அதிக அளவில் தங்கம்உற்பத்தி ஆகும் நாடு தென் ஆப்பிரிக்கா.
கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தி குறைந்து வந்தாலும் உலகின் தங்க ‘சப்ளை’யில் சுமார் 80 சதவீதம் இங்கிருந்தே வருகிறது. தற்போது இந்த நாடு, 6000 மெ. டன் அளவுக்குத் தங்கம் இருப்பு (ரிசர்வ்) வைத்துள்ளது. இதேபோன்று இரும்புத் தாது உற்பத்தியிலும் முக்கிய இடம் வகிக்கிறது.
(பயணிப்போம்)
கட்டுரையாளர், கல்வி, வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுக்கான வழிகாட்டி
தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com