

தன்னைப் பற்றித் தானே தாழ்வாக எண்ணாமல் இருப்பதைப் போலவே, மற்றவர்களைப் பற்றியும் தாழ்வாக எண்ணக் கூடாது அல்லவா? என்று வினவினான் அருளினியன். ஆம். யாரேனும் ஒருவர் நம்மை இழிவுபடுத்தும் பொழுது நமக்குத் தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டு, தன்னம்பிக்கை குறைந்து, செயல்திறம் முடங்கி, முயற்சிகள் தளர்ந்து, நமது முன்னேற்றம் தடைப்படுவதைப்போலவே, நாம் பிறரை இழிவுபடுத்தினால் அவருக்கும் நிகழும். எனவே, இழிவுபடுதலும் கூடாது; இழிவுபடுத்தலும் கூடாது என்றார் எழில்.
ஆக, தனது பலங்களைப் புரிந்துகொள்ளாமையும் அவற்றை வெளிப்படுத்த இயலாமையும் ஒருவரின் இழிவிற்குக் காரணங்கள் எனலாமா? என்று வினவினாள் நன்மொழி. அப்படியே சொல்லலாம் என்றார் எழில்.
கதிரின் மனநிலை என்ன?
கவலைக்கும் இயலாமையும் புரிந்துகொள்ளாமையும்தான் காரணமா? என்று வினவினான் காதர். கதிரும் இளங்கோவும் ஒன்றாகப் படிப்பவர்கள். நண்பர்கள். அடுத்தடுத்த தெருவில் வாழ்பவர்கள். நாள்தோறும் பள்ளிக்கு ஒன்றாக வந்து செல்வர். மாலை பூங்காவில் இருவரும் சேர்ந்து விளையாடுவர். திடீரென்று ஒருநாள் சாலையில் எதிரே வந்த கதிரைப் பார்த்துவிட்டு, பார்க்காததுபோல் தலையைத் திருப்பிக்கொண்டு இளங்கோ சென்றார். கதிர் அவரைப் பெயர்சொல்லி அழைத்தும் அவர் திரும்பிப் பார்க்கவில்லை. அடுத்தடுத்த நாள்களில் கதிரைச் சந்திப்பதையும் அவரோடு பேசுவதையும் இளங்கோ தவிர்த்தார். இந்நிலையில் கதிரின் மனநிலை என்னவாக இருக்கும்? என்று வினவினார் எழில்.
குழப்பமாக இருக்கும் என்றாள் மணிமேகலை. ஏன் குழப்பமாக இருக்கும்? என்று வினவினான் சாமுவேல். இளங்கோ ஏன் அவ்வாறு நடந்துகொள்கிறார் என்று புரியாததாலும் அதற்கான காரணத்தை அறிய இயலாததாலும் என்றாள் இளவேனில். அந்தக் குழப்பம் நீடித்தால் என்ன ஆகும்? என்று வினவினார் எழில். கவலை வரும் என்றான் சுடர்.
ஏன் கவலை வருகிறது? என்று வினவினான் அழகன் குறுக்கே புகுந்து. சொல்லாலும் செயலாலும் பிறரால் இழிவுபடுத்தப்ப்படும் பொழுது கவலை வரும் என்றான் அருளினியன். உறவுகளை இழக்கும்பொழுதோ, அதில் சிக்கல் ஏற்படும்பொழுதோ என்றாள் பாத்திமா. நம்முடைய உடமைகளை இழக்கும்பொழுதும்… என்றான் தேவநேயன். தனிப்பட்ட எல்லா இழப்புகளாலும் கவலை வரும் என்றாள் மதி கம்மிய குரலில்.
கவலை வந்தால்…? என்றாள் தங்கம். சோர்வாய் உணர்வோம். செயல்திறன் முடங்கும். பிறவற்றைச் சிந்திக்க இயலாது. எந்தவொரு வேலையையும் முழுமையாகச் செய்ய முடியாது என்றார் எழில்.
கவலையை பகிரலாமா?
கவலை எப்படி வெளிப்படுகிறது? என்று வினவினான் முகில். நான் அழுவேன் என்றாள் பாத்திமா. நான் புலம்பித் தீர்த்துவிடுவேன் என்றாள் அருட்செல்வி. நான் எனது மனத்திற்குள்ளேயே புதைத்துக்கொள்வேன் என்றான் தேவநேயன். நான் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் எனது கவலைகளைப் பகிர்ந்துகொள்வேன் என்றான் சுடர். இவற்றுள் எது நல்லது? என்று வினவினான் அழகன். கவலையை அழுதும் புலம்பியும் வெளிப்படுத்தினால், மனம் ஆறுதல் அடையும். மனத்திற்குள்ளேயே புதைத்துக்கொள்வது மனத்திற்கும் உடலுக்கும் ஊறு விளைவிக்கும். பிறரிடம் பகிர்ந்துகொண்டால் அவர்களது வழிகாட்டல் கிடைக்கக் கூடும் என்றார் எழில்.
எங்கள் பாட்டி, உலகில் அவருக்கு மட்டுமே அடுக்கடுக்காய்ச் சோதனைகள் வருவதாய்ப் பார்ப்பவர்களிடம் எல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார். அதுவும் கவலையை வெளிப்படுத்தும் முறையா? என்று வினவினான் தேவநேயன். ஆம். அதற்குத் தன்னிரக்கம் என்று பெயர். அஃது அவரின் கவலையைப் பெருக்கவே செய்யும் என்றார் எழில்.
இவை தவிர கவலையைக் கையாள வேறு வழிகள் இல்லையா? என்று வினவினாள் கயல்விழி. இருக்கின்றன என்றார் எழில்.
(தொடரும்)
கட்டுரையாளர்: வாழ்க்கைத்திறன் கல்வித் திட்ட
வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்
தொடர்புக்கு: ariaravelan@gmail.com