

செப்படி வித்தைக்காரனின் சித்து விளையாட்டுகளை வேடிக்கை பார்த்த கூட்டம் அடுத்ததாக அவன் என்ன செய்யப் போகிறானோ என்று ஆவலாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. சிறிது நேரத்துக்கு முன்பாக மக்கள் முன்னிலையில் தன்னால் கவிழ்த்துப் போடப்பட்ட ஒரு கூடையை ஒரு சிறிய குச்சியால் மூன்றுமுறை தட்டிவிட்டு அந்தக் கூட்டத்தை நோக்கி, ‘இந்தக் கூடைக்குள் என்ன இருக்கிறது?’ என்றான். கூட்டத்தினர் அனைவரும் ஒருமித்த குரலில், ‘கூடைக்குள் ஒன்றும் இல்லை. அது வெறும் கூடை’ என்று பதிலளித்தனர். அப்போது மெதுவாகக் குனிந்து அந்தக் கூடையைத் திறந்துக் காட்டினான் செப்படி வித்தைக்காரன்.
அவன் திறந்து காட்டிய அந்தக் கூடையின் உள்ளே புசுபுசுவென்று வெள்ளை நிறத்திலொரு முயல் மிரண்டு போய் அமர்ந்திருந்தது. பெரிய மிருகத்திடமிருந்து தப்பித்து ஓடி வந்தது போல அது மூச்சு விட்டுக்கொண்டிருந்தது அதன உடல் அசைவில் நன்றாகத் தெரிந்தது. அதன் காதுகளைப் பிடித்து தனது தலைக்கு மேலே தூக்கி அனைவருக்கும் தெரியும்படி காட்டினான் வித்தைக்காரன். ‘வெறும் கூடைக்குள் உயிருள்ள முயல் எப்படி வந்தது என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? எல்லாம் அந்த ஜக்கம்மாவின் அருள்தான்’ என்றான். அதைக் கேட்டதும் சுற்றி நின்ற மக்கள் கூட்டம் கரவொலியை பலமாக எழுப்பி ஆரவாரக் கூச்சல் போட்டது.
அவனது ஒவ்வொரு செய்கையையும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்த குணபாலனுக்கு எந்த விதமான வியப்பும் ஏற்படவில்லை. மாறாக, மக்களை ஏமாற்றும் அந்த செப்படி வித்தைக்காரன் மேல் கோபம்தான் வந்தது. உண்மையில் அவன் எந்த விதமான மாய, மந்திரமும் செய்துவிடவில்லைதான். அந்த வித்தைக்காரன் வரும்போதே கையோடு அந்த மாங்கன்று, முயல் போன்ற இன்ன பிற அனைத்தையும் கொண்டுவந்துவிட்டான். யாருக்கும் தெரியாமல் அவற்றை வேறொரு கூடையில் மறைத்து வைத்திருந்தான்.
மக்களிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே மறைத்து வைத்த கூடையிலிருந்து அவனால் கவிழ்த்துப்போடப்பட்ட வெறும் கூடையின் உள்ளே அவற்றை இடம் மாற்றி வைத்துவிட்டு, அதை மாய மந்திரம் என்று கதையளக்கிறான். கிராதகன், இவனை சும்மா விடக்கூடாது என்று நினைத்துக்கொண்டான் குணபாலன். வித்தைக்காரனும் குணபாலனை கவனித்துக்கொண்டுதான் இருந்தான். இந்த ஆள் மட்டும் நமது வித்தைக்கு மயங்காமல் சும்மா நின்றுகொண்டு இருக்கிறானே என்று யோசிக்கவும் ஆரம்பித்தான்.
கைவசமிருந்த அனைத்து வித்தைகளையும் நாசூக்காக செய்துகாட்டிய பிறகு வசூல் வேட்டையில் இறங்கினான் வித்தைக்காரன். அவன் கொண்டுவந்து குலுக்கிய வெண்கலக் குவளையில் மக்கள் தங்களிடமிருந்த செப்புக் காசுகளைப் போட்டனர். வித்தையை வெகுவாகப் பாராட்டிய சிலரோ வெள்ளிக் காசுகளையும் போட்டனர். அதன் பிறகு கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலையத் தொடங்கியது. ஆனால், குணபாலன் மட்டும் காசு எதுவும் போடாமலும் அந்த இடத்தை விட்டு அகலாமலும் நின்றிருந்தான். அதை கவனிக்காதது போல வித்தைக்காரனும் தனது மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு அந்த இடத்தை விட்டு நடையைக் கட்ட ஆரம்பித்தான். சற்று தொலைவு விட்டு குணபாலனும் அவனைத் தொடர்ந்து சென்றான்.
அப்படி குணபாலன் அவனைப் பின்தொடர்ந்து சென்றதை வித்தைக்காரனும் தெரிந்துகொண்டான். ஆனால், திரும்பிப்பார்க்காமல் முன்னோக்கிச் சென்றுகொண்டே இருந்தான். ஆனால், பின்னால்சற்று இடைவெளி விட்டு தொடர்ந்து வந்த குணபாலனின் காலடிச் சத்தம் கொஞ்சங்கொஞ்சமாக அருகாமையில் கேட்கஆரம்பித்தது. வித்தைக்காரனுக்கோ இதயத் துடிப்பு அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. அடுத்த சில நிமிடங்களில் வித்தைக்காரனை மிகவும் நெருங்கிய குணபாலன் அவனது கழுத்தைப் பின்னாலிருந்தே வளைத்துப் பிடித்து அவனது நடையை நிறுத்தினான். மூச்சு முட்டிய வித்தைக்காரன் அதன் பிறகு எப்படி நடையைத் தொடர முடியும்? இப்போது அவன் மூச்சு விடவே பெரும் சிரமம் ஆனது.
உடனே சுதாரித்துக்கொண்ட வித்தைக்காரன், ‘ஏய், யாரப்பா நீ? எதுவாக இருந்தாலும் நாம் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். தயவு செய்து என்னை விட்டுவிடு. நான் எங்கும்ஓடிப்போக மாட்டேன். என் கழுத்தை விடப்பா. என்னால் மூச்சு விட முடியவில்லை’ என்றான். அதற்கு பதிலளித்த குணபாலன், ‘ அடேய் ஏமாற்றுக்காரா, உனதுஏமாற்று வேலையை இந்த உலகறியச் செய்யவே நான் இங்கு வந்திருக்கிறேன். அப்பாவி மக்களை ஏமாற்றி உனது வயிற்றை வளர்க்கிறாயே. உனக்கு வெட்கமாக இல்லையா? கை, கால்கள் நன்றாகத்தானே இருக்கிறது? உழைத்துச் சாப்பிட வழி தெரியவில்லையா உனக்கு?’ என்றான்.
குணபாலன் அப்படி சொன்னதும், ‘என்ன, இவர்களா அப்பாவி மக்கள்? நான்ஏமாற்றுக்காரன்தான் என்பதை ஒப்புக்கொள்கின்றேன். ஆனால், இவர்களை அப்பாவி மக்கள் என்று சொல்லாதீர். நானா உழைத்துச் சாப்பிட விரும்பாத சோம்பேறி? நானும் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி பாடுபட்ட பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவன்தான். அப்படிப்பட்ட பாட்டாளியான நான் இன்று மக்களை ஏய்த்துப் பிழைக்கும் இழிநிலைக்குக் காரணம் தெரிவதற்கு முதலில் எனது கதையைக் கேளும். கேட்டுவிட்டு அதன் பிறகு ஒரு முடிவுக்கு வாரும்’ என்று பதிலளித்த செப்படி வித்தைக்காரன் தனது கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.
- தொடரும்.