

கைபேசி டிங் என்ற ஒலிக்கிறது. உங்களை அறியாமலே கை கைபேசியை எடுக்கிறது. திரையில் வந்துள்ள குறுஞ்செய்தியைப் பார்க்கிறீர்கள். ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதுவும் அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து. நீங்கள் கடிதத்தைத் திறக்கிறீர்கள். அது வேலைக்கான உத்தரவு. அவ்வளவுதான் உங்கள் மனதில் பலப்பல எண்ணங்கள் அலைபோல் எழுந்து விழுகின்றன.
அருகே யாரும் இல்லையென்றாலும் நாம் நமக்குள்ளேயே பேசிக் கொண்டிருப்போம். நடந்து முடிந்தவை பற்றி, நடக்கப்போவதைப் பற்றி, அப்படி நடந்தால் என்னாகும், இப்படி நடந்தால் என்னாகும் என்று பல விஷயங்களைப் பற்றி யோசிப்போம். திட்டமிடுவோம், கற்பனை செய்வோம். அப்படி பேசியிருக்கக் கூடாதே என்று பரிதவிப்போம். இருந்தாலும் அவர் அப்படி நடப்பார் என்று எதிர்பார்க்கவில்லையே என்று வருத்தப்படுவோம்.
பல ரூபங்களில் மொழி: ஒரு பாடல், ஒரு சொல், ஒரு காட்சி மனதுக்குள் புதைந்திருக்கும் பல நினைவுகளைக் கிளறிவிடும். காட்சிகள் கண்முன் விரியும். இங்கெல்லாம் நாம் மொழியைத்தான் பயன்படுத்துகிறோம். இதைத்தான் உள்ளுரையாடல் என்கிறோம். இந்த உரையாடல் பல்வேறு உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும்.
இதனாலேயே மொழியையும் உணர்வையும் பிரிக்க முடியாது என்கிறார்கள். இப்படி உணர்வோடு கலந்தவற்றைத்தான் நாம் பிறரிடம் பகிர்ந்துகொள்ள விழைகிறோம். அல்லது கவிதையாக, கதையாக, ஏதேனும் ஒரு வடிவில் படைப்பாக வெளிக்கொண்டு வருகிறோம். அல்லது மனத்தின் ஆழத்திலிருந்து அவற்றை அடிக்கடி மேலேகொண்டு வந்து நினைவுத்திரையில் ஓட்டிப் பார்த்து உணவர்வலைகளில் தள்ளாடுகிறோம்.
எது கருத்துப் பரிமாற்றம்? - ‘பேப்பூர் சுல்தான்’ என்றழைக்கப்படும் மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் தம் கதையொன்றில் ஒன்றும் ஒன்றும் இரண்டல்ல என்று கூறிச்செல்கிறார். அவரைப் பேட்டிக்காணச் செல்லும் பத்திரிகை நிருபர் “ஒன்றும் ஒன்றும் இரண்டல்ல என்கிறீர்களே. பிறகு எத்தனை?” என்று கேட்கிறார். அதற்கு பஷீர், ஒரு புன்சிரப்பை மட்டும் பரிசளித்துவிட்டு நினைவுகளில் மூழ்கிப்போகிறார்.
“ஒன்றையும் ஒன்றையும் அருகருகே எழுதினால் பதினொன்று கிடைக்கும். அதை மனதில் வைத்துத்தான் எழுதினீர்களா?” என்று கேட்க அவர் புன்சிரிப்போடு இல்லையென்று தலையை ஆட்டுகிறார்.
ஒரு நிமிடம் அமைதியாக இருந்த நிருபர். “ஒ.. புரிந்துவிட்டது. ஒன்றும் ஒன்றும் மூன்று. கணவன், மனைவி, குழந்தை” என்று கூறிவிட்டு நிருபர் ஆவலோடு பஷீர் அவர்களின் முகத்தைப் பார்க்கிறார். இம்முறை அவர் சற்று உரக்கவே சிரித்துவிட்டு “இல்லை” என்கிறார்.
இப்போது வாசகரான உங்கள் மனதில் ஆர்வம் பிறந்திருக்குமே. ஒன்றும்ஒன்றும் இரண்டல்ல, பதினொன்றல்ல, மூன்றும் அல்ல. பிறகு எத்தனை என்றறியாமல் தலையே வெடித்துவிடும்போல இருக்கிறதல்லவா.
வைக்கம் முகம்மது பஷீர் சிரித்து விட்டு “ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் கொஞ்சம் பெரிய ஒன்று” என்றார். நிருபர் ஓ... வென வாயைப் பிளக்கிறார்.
ஒருவருக்கு ஏதோவொன்று தெரிந்திருக்கிறது. அது அடுத்தவருக்குத் தெரியாது என்றும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை அடுத்தவருக்கு ஊட்டுவது எப்படியென்றும் தெரிந்திருக்கிறது. அவருக்குப் புரியும் மொழியில், விரும்பும் வகையில் சொல்லவும் தெரிந்திருக்கிறது. இத்தனை காரணிகளும் நிறைவேற்றப்படும்போது அங்கு கருத்துப் பரிமாற்றம் நடக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
உள்ளுரையாடலைத் தூண்டுதல்: ஒன்றும் ஒன்றும் கொஞ்சம் பெரிய ஒன்று என்று பஷீர் கூறியதை ஒருவர் அடுத்தவரிடம் கூறுகிறார். அடுத்தவரோ பஷீரின் வாசகர் என்று வைத்துக்கொள்வோம். அங்கே மலர்வதுதான் உணர்வுப்பூர்வமான கருத்துப் பரிமாற்றம். இந்தக் கருத்துப் பரிமாற்றத்தில் கையாளப்படும் மொழி, நண்பர் பயன்படுத்தும் சொற்கள், வாக்கிய அமைப்பு என்பவையெல்லாம் அப்படியே கேட்பவர் மனதில் பதியும்.
இப்போது குழந்தைகளுக்கு மொழிப்பாடத்தைக் கற்பிக்கும் நம் வகுப்பறைகளை நினைத்துப் பாருங்கள். பெரும்பாலான பாடங்கள் தகவல்களைப் பரிமாறுகின்றனவே தவிர குழந்தைகளின் உணர்வுகளைத் தொடுவதேயில்லை.
பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளியில் பயின்றோம். ஆயிரக்கணக்கான மணிநேரம் உங்கள் பேச்சைக் கேட்டோம். ஆயிரக்கணக்கான பாடப்புத்தகப் பக்கங்களைப் படித்தோம். ஆயிரக்கணக்கான குறிப்பேட்டுப் பக்கங்களை எழுதி நிரப்பினோம். இருந்தும் ஏன் எங்கள் மொழித்திறன் வளரவில்லை என்றொரு மாணவர் கேட்டதற்கான காரணத்தை இப்போது உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா. ஆம். தகவல்களுக்கு உணர்வில்லை.
- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை. தொடர்புக்கு: rajendran@qrius.in