

பத்திரிகையாளர், இலக்கியவாதி, விடுதலைப் போராட்ட வீரரான கணேஷ் ஷங்கர் வித்யார்த்தி (Ganesh Shankar Vidyarthi) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் அடுத்த ஹத்காம் கிராமத்தில் (1890) பிறந்தார். தந்தை பள்ளி ஆசிரியர். உருது, பாரசீக மொழிகள் கற்றார். வறுமை காரணமாக உயர்கல்வி கற்க முடியவில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் தானாகவே கல்வி கற்று வந்தார்.
# பத்திரிகை துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களைப் படித்தார். ஏராளமான பத்திரிகைகளையும் படிப்பார். ‘ஹமாரி ஆத்மோசர்கதா’ என்ற தனது முதல் நூலை எழுதியபோது அவருக்கு வயது 16.
# பல இடங்களில் வேலை கிடைத்தது. ஆனால், ஆங்கிலேய அதிகாரிகளுடன் இணக்கமாகச் செல்லமுடியாததால் வேலைகளை இழந்தார். இவரது திறமையை உணர்ந்த பிரபல இந்தி இலக்கியவாதி மஹாவீர் பிரசாத் திவேதி, தனது ‘சரஸ்வதி’ பத்திரிகையில் இவரை சேர்த்துக்கொண்டார். ஓராண்டு அங்கு வேலை பார்த்த பிறகு, மதன்மோகன் மாளவியாவின் ‘அப்யுதயா’ பத்திரிகையில் சேர்ந்தார்.
# பிரதாப்’ என்ற வார இதழை 1913-ல்தொடங்கினார். அரசியலிலும் ஆர்வம் கொண்டார். புரட்சிக் கருத்துகளில் ஈடுபாடு கொண்டவர் என்பதால், காந்தியடிகளின் அகிம்சைக் கொள்கைகளை இவரால் ஏற்க முடியவில்லை. காந்தியடிகளை முதன்முறையாக 1916-ல் சந்தித்ததும், தேசிய இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
# விடுதலைப் போராட்டம், சமூகப் பொருளாதார புரட்சி, விவசாயிகள், சாதி, மதப் பிரச்சினைகள் குறித்து தனது இதழில் எழுதினார். ஆரம்பத்தில் உருது மொழியில் எழுதி வந்தவர், பிறகு இந்தியில் எழுதினார். சரளமான, எளிய நடையிலான இவரது எழுத்துக்கள் உணர்ச்சிபூர்வமாக, உத்வேகம் அளிப்பவையாக இருந்தன.
# காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டாலும் புரட்சி வீரர்களின் தோழனாகவும் இருந்தார். ‘அரசு நிர்வாகம், சாதி, உழைப்பு என எதில் அடக்குமுறை, மனிதத்தன்மையற்ற செயல் நிலவினாலும், அதற்கு எதிராக இறுதி மூச்சு வரை போரிடுவேன்’ என்று முழங்கினார். பல நூல்களை எழுதியுள்ளார். இவர் சிறந்த பேச்சாளரும்கூட.
# சுயாட்சி இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். ராம் பிரசாத் பிஸ்மில்லின் சுயசரிதம் மற்றும் புரட்சி வீரர்களின் கட்டுரைகளை தனது இதழில் வெளியிட்டார். புரட்சிகரமான கருத்துகளை வெளியிட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவரது இதழுக்கு தடை விதிக்கப்பட்டது.
# வறுமையில் வாடினார். தடை விலக்கப்பட்ட பிறகு, பலரது நிதியுதவியுடன் நாளிதழாக வரத்தொடங்கியது ‘பிரதாப்’. ஆங்கில அரசுக்கு எதிரான செய்திகள் வெளிவந்ததால், அரசின் எதிரியாகவே கருதப்பட்டார். மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் மாகன்லால் சதுர்வேதி, பாலகிருஷ்ண சர்மா நவீன் உள்ளிட்ட பல இலக்கியவாதிகளை சந்தித்தார்.
# உத்தரப் பிரதேச சட்டசபையின் மேலவை உறுப்பினராக 1926 முதல் 1929 வரை பணியாற்றினார். சிறந்த இலக்கியவாதி, பத்திரிகையாளர், தேசியவாதியாகவும் திகழ்ந்தார்.
# தனது எழுத்தையே ஆயுதமாக்கி பத்திரிகை மூலம் எழுச்சிப் போராட்டம் நடத்திவந்த கணேஷ் ஷங்கர் வித்யார்த்தி 1931-ல் கான்பூர் கலவரத்தின்போது அப்பாவிகளைக் காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்தார். அப்போது இவருக்கு வயது 41.