

பல்லுக்கு எது பாதுகாப்பு என்பது குறித்து கடந்த வாரம் பேசிக் கொண்டிருந்தோம். நமது பற்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய பயோ-ஃபிலிம் நமது மோசமான உணவு முறைகளாலும், பற்களை சரியாகச் சுத்தப்படுத்தத் தவறுவதாலும் பற்களுக்கு எதிராக செயல்படத் தொடங்கிவிடுகிறது.
ஆனால், எனாமலில் வலி உணர்வு இருக்காது என்பதால் நாம் ஆரம்பத்திலேயே நமது பல பிரச்சினையை உணராமல் போவதோடு, தொடர்ந்து அதை ஊக்குவிப்பது போலவே சாக்லெட் மற்றும் மிட்டாய்களை உண்டு களிக்கிறோம். அதனால் தொடர்ந்து நிகழும் அமில விளைவானது பற்களின் எனாமலைக் கடந்து அடுத்து டென்டைன் பகுதியை பாதிக்க ஆரம்பிக்கும்போது உறுதியான கால்சியம் அரிக்கப்பட்டு, பல் கூச்சத்தை உணர ஆரம்பிக்கிறோம்.
இப்போதும் நாம் உதாசீனம் செய்யும்போது தான், இந்த சிதைவு, பல்ப் எனும் வேர் வரைப் பரவி, cavities எனும் பற்சிதைவு உருவாக்குவதுடன், தீராத பல் வலியையும் உண்டாக்குகிறது. மேலும் ஆழமாகப் பரவும் இந்தச் சிதைவின் கிருமித்தொற்று, சமயங்களில் மூளை, இதயம் மற்றும் சிறுநீரகங்கள் வரைப் பரவி, பெரும் பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடும்.
அதேசமயம், இந்த சிதைவு நடக்க குறைந்தது ஆறு முதல் பத்து மாதங்கள்வரை ஆகிறது என்பதால் ஆரம்பநிலையில் கண்டறிந்து சிகிச்சைப் பெற்றால் முழுமையான பற்சிதைவிலிருந்து மீள முடியும். நாம் கவனமாய் இருந்தால் இது வராமலே தடுக்கவும் முடியும்.
வலி தடுக்க வழி:
# ஒவ்வொரு முறை உணவை உட்கொண்ட பின்னர் வெந்நீர், உப்பு நீர் அல்லது மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது.
# காலை, இரவு என இரு வேளைகளிலும் முறையாகப் பல் துலக்குவது.
# ரீஃபைன்ட் கார்ப்ஸ் எனப்படும் இனிப்பு வகைகள் மற்றும் மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளைத் தவிர்ப்பது.
# மிகவும் சூடான அல்லது குளிர்ந்த உணவுகளை உட்கொள்வதைத் தவிர்ப்பது.
# இயன்றவரை கடினம் குறைந்த நார்ச்சத்து மற்றும் நீர்த்தன்மை நிறைந்த உணவு வகைகளை உட்கொள்வது.
# ஃப்ளூரைட் உள்ள மவுத் வாஷ் மற்றும் டூத் பேஸ்ட்களைப் பயன்படுத்துவது.
# குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆண்டுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொள்வது,
# மருத்துவர் பரிந்துரைப்படி ஃப்ளூரைட் ஜெல் பயன்படுத்துவது, இடுக்குகளில் உள்ள துகள்களை டென்டல் ப்ளாஸ் கொண்டு சுத்திகரிப்பது.
போன்ற எளிய வழிமுறைகள் ஒவ்வொன்றும் பற்சிதைவு வராமல் தடுக்கும் முறைகளாகும். அப்படி பரிசோதனையின் போது, பற்சிதைவு ஏற்பட்டிருந்தால் அதன் தீவிரத்தன்மையைப் பொருத்து, பயோஃபிலிமை சுத்தப்படுத்துவது, பிளேக் எனும் பற்படலத்தை நீக்குவது, பற்களை sealant கொண்டு அடைப்பது, இன்னும் ஆழமாக லீனாவுக்கு வந்தது போல பரவிய பற்சிதைவுக்கு 'ரூட் கேனால்' எனப்படும் வேர் சிகிச்சையை அளிப்பது என்பது போன்ற முறைகளை பல் மருத்துவ நிபுணர் தீர்மானித்து வழங்குவார்.
லீனாவின் தாயார் கேட்டது போல, இந்த வேர் சிகிச்சைக்குத் தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை முறைகள் சிறிது காலம் அவசியமே. அதற்குப் பின்னான முறையான பராமரிப்பு, மற்ற பற்களைப் பாதுகாக்க உதவும். பல் ஆரோக்கியம் காப்போம். உடல் ஆரோக்கியத்தையும் சேர்ந்தே காப்போம்.
(ஆலோசனைகள் தொடரும்).
- கட்டுரையாளர்: மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com