

தொழிற் புரட்சிக்கு முன்பாகவே, வேலை பகுப்புமுறை மூலம் திறமாக வேலை வாங்கும் சூட்சுமத்தை முன்மொழிந்தவர் ஆடம் ஸ்மித். இதையொரு குண்டூசி கதை மூலம் அவர் நூலில் காணலாம். ஒரு குண்டூசி தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகள் அனைவரும் முழுமுதல் குண்டூசி தயாரிப்பில் ஈடபடக்கூடாது. ஒருவர் கம்பி உருவாக்கினால்; மற்றொருவர் அதன் தலைப்பகுதியை உருவாக்கலாம்; மிதமிருப்பவர்கள் அதை இணைக்கும் வேலையில் ஈடுபடலாம்.
ஒரு குறிப்பிட்ட வேலையை திரும்பத் திரும்பச் செய்வதால் அதில் நுட்பமும் திறனும் கூடுவதோடு, உற்பத்தி பெருகும் என்றார். இது இன்றைக்குச் சாதாரண யோசனையாகப் பட்டாலும், அவர் காலத்தில் பலர் இதற்குப் பித்துப் பிடித்து அலைந்தனர்.
மாயக் கரம் மாயாவி: தன்னிச்சையாக, அரசு தலையீடு இல்லாத சந்தைமுறையால் சமச்சீர் சமூகத்திற்கான நன்மை ஏற்படும் என்பதை எளிமையாக விளக்கினார் ஆடம் ஸ்மித். சந்தையில் இப்போது தக்காளிக்கான தேவை அதிகரிக்கிறது என்றால், அதன் விலை பன்மடங்கு கூடும். தக்காளியின் விலை அதிகம் உள்ளதே என்று, பல முதலாளிகள் தக்காளி விதையை பயிரிடுவார்கள். ஆனால், அவை சந்தையில் குவிந்த வண்ணம் இருந்தால், இயல்பாகவே தக்காளியின் விலை இறங்கிவிடும்.
இதில் அரசு தலையிடாமல் இருப்பதே பெரும் உதவி என்று, தன்னிச்சையாக இயங்கும் சந்தைப் பொருளாதாரத்தை எளிமையாக மக்களுக்கு உணர்த்தினார். எவர் கண்ணுக்கும் புலப்படாத ‘மாயக் கரம்’ ஒன்று இம்மாதிரியான சமூகத்தில் நடுநிலைத் தன்மையை உருவாக்கும் என்பது அவர் கணிப்பு.
பொது கட்டுமானங்களை நிர்மாணிக்க வசதி படைத்தவர்களிடம் இருந்து வரிவசூல் செய்யலாம் என்றும் அவரவர் வருமானத்திற்கு ஏற்ப அவை அமையவேண்டும் என்றும் ஆடம் ஸ்மித் முன்மொழிந்த கொள்கையே பின்னாளில் வருமான வரி திட்டத்துக்கு முன்மொழிவாக அமைந்தது.
கசாப்புக்காரர், மது விற்பவர், ரொட்டி வியாபாரி என்று யாராக இருந்தாலும் சமூக அக்கறைக் கொண்டு மக்கள் நல சேவைக்காக வியாபாரம் செய்வதில்லை. தன் வியாபார மேம்பாட்டுச் சிந்தனையும், தன் வாழ்வியல் தேவைக்குமாகவே அவர் இயங்குகிறார். ஆனால், அது சமூகத் தேவையை இயல்பாகப் பூர்த்தி செய்கிறது என்பது போன்ற பல இயல்பான உண்மைகளை எடுத்துச் சொன்னார்.
கார்ல் மார்க்ஸை வென்றவர்: மக்கள் தொகை அதிகரிக்கும் போது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அடிப்படை அளவைத் தாண்டி அதிகரிக்கும் என்று ஆடம் ஸ்மித் கருதினார். ஆனால், பின்னர் வந்த கார்ல் மார்க்ஸும் ரிக்கார்டோவும் பின்தங்கிவிடும் என்று அறுதியிட்டார்கள். காலம் ஆடம் ஸ்மிதை வெற்றியாளர் என அறிவித்தது.
இதுபோன்ற ஆடம் ஸ்மித்தின் பலநூறு சிந்தனைகள் இன்றைக்கும் நம்மை சரியான பொருளாதார பாதையில் வழிநடத்திக் கொண்டிருக்கின்றன. அவை பெரும்பாலும் முதலாளித்துவ கொள்கை சார்ந்து விளங்கினாலும் ஸ்மித்தின் வெளிச்சமே பல ஆய்வுகளுக்கு முன்னோடி.
ஆடம் ஸ்மித் மரபு: நாடுகளின் செல்வம் பற்றி எடுத்துரைத்த ஆடம் ஸ்மித், தனக்கென்று குழந்தைச் செல்வம் இல்லாதவர். இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் தனியனாக வாழ்ந்து மறைந்தார். ஆனால், இன்றைக்கு ஸ்காட்லாந்தின் பல ஊர்களில் இவருக்குச் சிலை உண்டு. இவர் உருவப்படம் பொறித்த பணத்தாள்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. ஆடமின் பெயர் தாங்கிய கல்லூரிகளும் அரசு நிறுவனங்களும் ஏராளம் உண்டு.
ஸ்மித்தின் கொள்கைகள் காலத்தால் சாரமற்றுப் போனாலும் பொருளாதாரம் பற்றிப் பேசும்போதெல்லாம் தவிர்க்க முடியாத நபர், ஆடம் ஸ்மித்.
- கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வு மாணவர். தொடர்புக்கு: iskrathewriter@gmail.com