

குறுகிய காலத்தில் அதிக வட்டியை வசூலிக்கும் கடனை, 'கெட்ட கடன்' என்கிறார்கள். இதன் பட்டியலில் முதலில் இருப்பது தனிநபர் கடன் (Personal Loan). மிக எளிதாக கிடைக்கும் இந்த கடனை அடைப்பது மிகவும் சிரமம். எளிதாக கிடைப்பதாலே அதிக வட்டியும், அதிக கட்டணமும் விதிக்கப்படுகிறது.
கடன் வாங்குபவரின் வருமானம், கடன் மதிப்பீடு ஆகியவற்றை பொறுத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தனிநபர் கடனை வாரி வழங்குகின்றன. மற்ற கடன்களைக் காட்டிலும் இதற்கு ஆவணங்களை குறைவாகவே கேட்கின்றன. கடனுக்கு ஈடாக எதையும் அடமானமாக கேட்பதில்லை. இதனாலே பெரும்பாலும் தனிநபர் கடனை நாடி செல்கின்றனர்.
ரூ.50 ஆயிரம் முதல் ரூ.50 லட்சம் வரை இதன் மூலம் பெறலாம். 18 வயது முதல் 75 வயது வரையிலான நபர்களுக்கு கிடைக்கிறது. ஓராண்டு முதல் ஏழாண்டு வரை கடனை திருப்பி செலுத்த கால வரம்பு அளிக்கப்படுகிறது. இதற்கு 10.5 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை வட்டி விகிதம் விதிக்கப்படுகிறது.
தவிர்க்க வேண்டிய கடன்: தனிநபர் கடன்கள் பெரும்பாலும் திருமணம், குடும்ப வைபவங்கள், திடீர்மருத்துவ தேவை, விருப்பமான பொருட்களை வாங்குவதற்கு, சுற்றுலா செல்வதற்கு, சிறு கடன்களை அடைப்பதற்குவாங்கப்படுகிறது. இவற்றை முறையாக திட்டமிட்டால் இந்த கடனை முற்றிலுமாக தவிர்க்க முடியும்.
அதேபோல வீட்டை மாற்றி கட்டுவதற்கு வீட்டு கடன் கிடைக்காத போதும், வாகன கடன் கிடைக்காத போது வாகனம் வாங்குவதற்கும் கூட தனிநபர் கடன் வாங்குகிறார்கள். முடிந்தவரை அந்தந்த கடன்களை வங்கிகளுடன் போராடி வாங்கினால், தனிநபர் கடன் வலையில் இருந்து தப்பிக்கலாம். இன்னும் சிலர் இந்த கடன் வாங்கி முதலீடு செய்கின்றனர். அதில் வரும் வருமானம் இந்த கடனின் வட்டியைவிட அதிகமாக இருந்தால் பிரச்சினை இல்லை. இல்லாவிடில் பெரும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும்.
வங்கிகளின் மூலதனம்: தனிநபர் கடனை எளிதில் அடைக்கும் வகையில் வங்கிகள் வடிவமைப்பதில்லை. திருப்பி செலுத்தும் கால அளவை நீண்ட காலத்துக்கு நீட்டிக்கவே வங்கிகள் விரும்புகின்றன. கடன் வரம்பு காலம் முடிவதற்கு முன்னரே கடனைத் திருப்பிச் செலுத்தவும் விரும்புவதில்லை.
இந்த கடன் செலுத்தும் முறை, மொத்த வட்டி மற்றும் அசல் என இரண்டாக பிரிக்கப்படுகிறது. அதில் மாதந்தோறும் செலுத்தும் இ.எம்.ஐ. பணம் ஆரம்ப கால ஆண்டுகள் வட்டியை அடைக்க மட்டுமே பயன்படுத்தப்படும். வட்டியை முழுமையாக வசூலித்த பின்னரே அசலுக்கு பணம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். தனிநபர் கடன் வடிவமைப்பே வங்கிகளுக்கு லாபம் கொட்டும் அம்சமாக விளங்குகிறது.
பேரம் பேசி வாங்கலாம்: தனிநபர் கடனை வாங்குவதற்கு முன் வட்டி விகிதம், கட்டண தொகை, மாதாந்திர தொகை (EMI) செலுத்தும் முறை ஆகியவற்றை அலசி ஆராய வேண்டும். ஒன்றுக்கு 10 வங்கிகளின் கடன் விபரத்தை பெற்று, தீர விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் பேரம் பேசி வட்டி விகிதம், கட்டணம், கால அளவு ஆகியவற்றை குறைக்க முடியும்.
இ.எம்.ஐ. செலுத்தும் காலவரையறையை நீண்டதாக தேர்வு செய்தால் அதிக வட்டி செலுத்த வேண்டிவரும். எனவே குறுகிய காலத்தையே தேர்வு செய்ய வேண்டும். குறுகிய காலத்தில் இ.எம்.ஐ. தொகை அதிகமாக செலுத்த வேண்டிவரும். அதேநேரத்தில் வட்டி சற்று குறைவாக இருக்கும்.
இ.எம்.ஐ. செலுத்தாதபோது விதிக்கப்படும் அபராதத்தை முன்கூட்டியே பேசி தவிர்க்க வேண்டும். கடன் வரம்பு காலம் முடிவதற்கு முன்னரே கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதியையும் பெற வேண்டும். இவ்வாறு செய்தால் தனிநபர் கடன் பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியும்.
(தொடரும்)
- கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in