

இஸ்ரேல் பாலஸ்தீனப் போர் குறித்த செய்திகள் தொலைக்காட்சித் திரையில் நகர, 'மருத்துவமனைகள் இருக்கும் இடத்தில் கூடத் தாக்குதல் நடத்தியிருக்காங்களே. ஏன் இப்படி, எந்த விதிகளையும் மதிக்காம இருக்காங்க...' என்று அப்பாவும் அம்மாவும் வருந்திப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆமாம் நாங்களும் சில காட்சிகள யூடியூப்ல பார்த்தோம். ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு என்றபடி குழலியும் சுடரும் அவர்களின் உரையாடலில் கலந்துகொண்டனர்.
குழலி: போர் விதிமுறைகள் இருந்தும்கூட இப்படி நடந்துக்கறாங்களே.
சுடர்: காயம்பட்ட ஒரு குழந்தை வீடியோவப் பார்த்தியா குழலி...
குழலி: பார்த்தேன் சுடர். அந்தக் குழந்தை முகத்தைப் பார்த்தப்ப, புறநானூற்றுப் பாட்டு ஒன்னு நினைவுக்கு வந்துச்சு.
சுடர்: இந்த நிகழ்வோட தொடர்புடைய பாட்டா...
குழலி: ஆமா சுடர். எது மாறிச்சோ இல்லையோ, சண்டைகள் மட்டும் மாறவே இல்ல. மத்தவங்கள ஜெயிக்கணும், தங்கள பலசாலிகளாக் காட்டிக்கணும்ங்கிற எண்ணமும் மாறவே இல்லை. அந்தக் காலத்துலயும் எதிரி நாட்டைக் கைப்பத்துறது, அவங்களோட வயல்வெளிகளத் தீயிட்டு எரிக்கறது, நிலங்களப் பயிரிட முடியாதபடிச் சீரழிக்கிறது, பெண்கள அடிமைகளப் போலக் கூட்டிப் போறதுன்னு பல விதமான கஷ்டங்களத் தோற்ற நாட்டு மக்கள் அனுபவிச்சிருக்காங்க.
இதைக்கூட வஞ்சித் திணையில துணைத் துறையாகச் சொல்றாங்க. வஞ்சிப் போர்ல ஈடுபடுற வீரர்கள் பகை நாட்டைத் தீயிட்டுக் கொளுத்தறத உழபுல வஞ்சின்னும் செல்வங்களக் கொள்ளையிட்டுப் போறத மழபுல வஞ்சின்னும் துறை வகுத்திருக்காங்க.
சுடர்: இதையெல்லாம்கூடத் துறையா வகுத்திருக்காங்களா?
அம்மா: புறநானூற்றுப் பாட்டச் சொல் றேன்னியே...
குழலி: சொல்றேன் மா. புலவர்கள்கூட மக்களத் துன்புறுத்துற போர்ச் செயல்பாடுகள மன்னனோட பெருமையாத் தான் பாத்திருக்காங்க.
சுடர்: ஒருத்தர்கூட இதெல்லாம் தப்புன்னு சொல்லலியா... மன்னன் வீரத்தைப் புகழ்றத மட்டுமே வேலையா வச்சிருந்தாங்களா. இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தைத் தான் நினைக்கத் தோணுது. நகைச்சுவைப் படம்னாக் கூட அந்தக் காலச் சூழல விமர்சிக்கிற படம்.
குழலி: நான் சொல்ற பாட்டு கோவூர்க் கிழார்னு ஒரு புலவர் எழுதினது. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்னு ஒரு மன்னன். அவன் மலையமான் திருமுடிக்காரிங்கிற மன்னனப் போர்ல தோற்கடிச்சிட்டான். தன்கிட்டத் தோற்ற திருமுடிக்காரியோட பிள்ளைகள யானையோட கால்ல போட்டுத் துன்புறுத்திக் கொல்ல நினைச்சான்.
அந்த நேரத்துல, இந்தக் குழந்தைங்க தந்தை இல்லேன்னு அழுகிற அழுகையை மறந்து, யானை மிதிக்க வர்றதைப் பார்த்து பயந்து, சுற்றி நிற்கிற புதிய மனிதர்களைப் பார்த்து என்ன நடக்கப் போகுதுன்னுகூடத் தெரியாம மிரட்சியில் அரண்டு போயிருக்காங்க. இப்படி ஏதும் அறியாத இந்தக் குழந்தைகளை வதைக்கிறது உன்னோட வீரத்துக்கு அழகான்னு கேட்டாராம்.
சுடர்: கோவூர்க்கிழார் சொன்னதை கிள்ளிவளவன் கேட்டாரா, இல்லையா...
குழலி: கேட்டாருதான். திருமுடிக்காரி எவ்வளவு நல்ல பண்புகள் உள்ள மன்னன், உழவர்கள் கஷ்டப்படுறதைப் பார்த்து மனம் சகிக்காமத் தன்கிட்ட இருக்கிறதையெல்லாம் அவங்களுக்கும் கொடுத்து, உழவர்களப் பாதுகாக்கிற பெருமைக்கு உரியவன்னு எடுத்துச் சொன்னாராம். அப்படிப்பட்ட மன்னன் பிள்ளைகளக் கொல்ல நினைக்கறது தப்புன்னு அறிவுரை சொல்லி, தவறு நடந்திடாமப் பார்த்துக்கிட்டாருன்னு புறநானூற்றுப் பாட்டு (46) சொல்லுது. மன்னனின் செயல்பாடுகள் தவறா
இருந்தா அதைச் சுட்டிக்காட்டுற புலவர்கள் இருந்தாங்க. அப்படிச் சுட்டிக்காட்டுறதும் கூட ஒரு துறையாகச் சொல்லப்பட்டிருக்கு...
சுடர்: ஓ... அது என்ன துறை?
குழலி: செவியறிவுறுத்தல் துறை.
சுடர்: நம்ம இலக்கியங்கள் எவ்வளவு நுட்பமா எழுதப்பட்டிருக்கு... இந்தப் பாட்டு எந்தத் திணையில அமைஞ்சது...
குழலி: நீ சொல்றது சரிதான் சுடர். இந்தப் பாட்டு வஞ்சித் திணையில அமைஞ்சிருக்கு. துறை துணை வஞ்சின்னு சொல்றாங்க.
சுடர்: சரி குழலி... நேரமாகுது. செவியறிவுறுத்தல் அடுத்த வாரம் நாளைக்குப் பேசுவோமா...
- கட்டுரையாளர்: தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com