

ஆக்ராவில் தாஜ்மஹாலை ரசித்துவிட்டு, மறுநாள் காலை தலைநகர் டெல்லி நோக்கி புறப்பட வேண்டும். எப்போதும் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்துக்கு செல்ல அதிகாலையிலேயே கிளம்புவோம். ஆனால், ஆக்ராவில் இருந்து டெல்லி செல்ல யமுனா விரைவு சாலை இருப்பதால், மெதுவாகவே கிளம்பினோம். ஆக்ராவிலிருந்து கிளம்புவதற்கு முன், டெல்லியில் உள்ள நண்பர்களுக்குக் கொடுக்க ஆக்ரா பேடா கொஞ்சம் வாங்கி வந்தோம்.
அவசர பயணங்கள் இல்லாமல் பொறுமையான பயணம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. யமுனா விரைவு சாலை ஆக்ராவில் ஆரம்பித்து நொய்டா வரை சீராக செல்லும் எட்டு வழிச்சாலை. சென்னையிலிருந்து பெங்களூருக்கு 2 மணி நேரத்தில் செல்லக்கூடிய விரைவுச் சாலையும் இதுபோலத்தான் இருக்கும்.
சாலையில்லா நகரம்: பொறுமையாக வந்துமே, மதியத்துக்குள் டெல்லி வந்தடைந்துவிட்டோம். அந்த அளவுக்கு சாலை நன்றாக இருந்தது. இந்த முறை எந்த ஹோட்டலிலும் அறை எடுத்து தங்கவில்லை. தமிழ் செய்தி சேனலில் டெல்லி சிறப்பு செய்தியாளராக இருக்கும் தோழி ஒருவரின் வீட்டில்தான் டெல்லி பயணம் முழுவதும் தங்கி இருந்தோம். இந்திய பயணம் தொடங்கும் போதே, டெல்லி வந்தால் அவர் வீட்டில் தான் தங்க வேண்டும் என்று தோழி முன்பே அன்பு கட்டளை இட்டிருந்தார்.
டெல்லிக்கு இரண்டு முகம் இருக்கிறது. ஒன்று நம் எல்லோருக்கும் தெரிந்த புது டெல்லி, மற்றொன்று பழைய டெல்லி. உதய்பூரில் சந்தித்த நண்பரின் வீடு பழைய டெல்லியில் இருந்தது. இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் வியாபாரம் செய்யும் நண்பர் இருந்த மொத்த ஏரியாவிலும் எந்த வளர்ச்சியும் இல்லாமல் இருந்தது.
பெயருக்கு கூட சாலையே இல்லை. எல்லா இடத்திலும் பள்ளமும் குழியுமாக சாலைகள் காட்சியளித்தன. வெட்டவெளி சாக்கடைகள், அதன் அருகிலேயே மழை நீரில் விளையாடும் குழந்தைகள் என பழைய டெல்லி கொஞ்சமும் வளர்ச்சியடையாமல் இருந்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தோழி வீட்டில் சமைத்துச் சாப்பிட்டோம். இட்லிப் பொடி, நல்லெண்ணெய் சகிதமாக சாப்பிட்ட இட்டிலி அம்மாவை ஞாபகப்படுத்தியது. அன்று முழுவதும் ஆரம்பகால நாட்கள் குறித்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். மறுநாள் காலை குதுப்மினார் செல்லத் தயாரானோம்.
அசத்தும் குதுப்மினார்: மத்திய டெல்லியில் உலக பாரம்பரிய சின்னமான குதுப்மினார் பிரம்மாண்டமாக நின்று கொண்டிருந்தது. இந்திய தொல் பொருள் துறை சிறப்பாக இதை பராமரித்து வருகிறது. குதுப்த்தீன் ஐபக் ஆணையின்படி முழுக்க முழுக்க செங்கற்களால் கட்டப்பட்ட உயர்ந்த ஸ்தூபி இந்த குதுப்மினார். ஆப்கானிஸ்தானில் உள்ள 'ஜாம்மினார்' கட்டிடத்தை விட உயரமாக கட்ட நினைத்தார் குதுப்த்தீன் ஐபக். ஆனால், அடித்தளத்தை மட்டுமே அவரால் கட்ட முடிந்தது. அதன்பிறகு இல்ட்டுட்மிஷ் அதற்கு மேல் மூன்று தளங்களைக் கட்டினார். அதன்பிறகு மன்னர் அலாவுதீன் கடைசி தளம் வரை கட்டி முடித்தார்.
இந்த வளாகத்திலேயே ஒரு மசூதி இருக்கிறது. இதே வளாகத்தின் மற்றொரு பகுதியில், இல்ட்டுட்மிஷ், அலாவுதீன் கில்ஜி மற்றும் இமாம் ஜமீன் மன்னர்களின் கல்லறைகளும் உள்ளன. குதுப்மினாரின் உச்சி வரை சென்றடைய 378 படிகள் ஏற வேண்டுமாம். ஆனால், தற்போது மேலே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. பழைய கட்டிடக்கலையின் அழகை ரசித்து கொஞ்சம் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்.
- கட்டுரையாளர்: இதழியலாளர், பயணப் பிரியை; தொடர்புக்கு: bharaniilango@gmail.com