

உலகப் புகழ்பெற்ற நகைச்சுவையாளரும், சிறந்த பத்திரிகையாளருமான ஆர்தர் புச்வால்டு (Arthur Buchwald) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் 10:
# அமெரிக்காவின் நியூயார்க் நகரில் (1925) பிறந்தார். இவர் பிறந்த சில நாட்களில் மனநலம் பாதிக்கப்பட்ட அம்மா, காப்பகத்திலேயே வெகு காலம் இருந்தார். அதனால், இவரது குழந்தைப் பருவம் ஆதரவற்றோர் விடுதிகளிலும், குழந்தைகள் இல்லா தம்பதிகளின் வீடுகளிலும் கழிந்தது.
# தந்தை திரைச் சீலைகள் தயாரிப்பவர். அப்போது நிலவிய கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, இவரால் தன் குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க முடியவில்லை. கஷ்டமான சூழலிலேயே வளர்ந்தார் புச்வால்டு.
# ஆரம்பக் கல்வியை முடித்தவர், மேல்நிலைக் கல்வியில் சேர்வதற்கு பதிலாக, அமெரிக்க கடற்படையில் சேர்ந்தார். 2-ம் உலகப் போரில் பங்கெடுத்தார். போர் முடிந்த பிறகு, தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
# ‘ஆர்ட்’ புச்வால்டு என்ற பெயரில் செய்தித்தாளில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதிவந்தார். கல்லூரி இதழின் நிர்வாக ஆசிரியராகவும் பணியாற்றினார். பிறகுபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் குடியேறினார். அங்கு ஹெரால்டு ட்ரிப்யூன் பத்திரிகையில் நாளிதழ் கட்டுரையாளராக வாழ்க்கையைத் தொடங்கினார்.
# மீண்டும் அமெரிக்கா திரும்பியவர் 1960-களின் தொடக்கத்தில் வாஷிங்டனில் குடியேறினார். அங்கும் எழுத்துப் பணி தொடர்ந்தது. வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பணிபுரிந்தார். அதில் இவர் எழுதிய கட்டுரைகள் ‘தி இந்து’ ஆங்கில இதழ் உட்பட உலகெங்கும் உள்ள பல பத்திரிகைகளில் மறுபிரசுரம் செய்யப்பட்டன. ஒருமுறை இவரது கட்டுரை 550-க்கும் மேற்பட்ட பத்திரிகைகளில் வெளியானது.
# இவரது அரசியல் கட்டுரைகளில் நகைச்சுவை, நையாண்டி அதிகம் இருக்கும். ஆனால் அதில் சொந்த விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தமாட்டார். நாளாவட்டத்தில் பேரும் புகழும் அதிகரித்தது. செல்வாக்கு மிகுந்தவர்களின் நட்பும் கிடைத்தது.
# ‘பாரீஸ் ஆஃப்டர் டார்க்’, ‘ஐ சூஸ் கேவியர்’, ‘தி பிரேவ் கோவர்டு’, ‘டோன்ட்ஃபர்கெட் டு ரைட்’ உள்ளிட்ட கதைகள், ‘எ கிஃப்ட் ஃபிரம் தி பாய்ஸ்’, ‘தி போலோ கேப்பர்’ ஆகிய நாவல்கள், ‘ஷீப் ஆன் தி ரன்வே’ என்ற நாடகம் என மொத்தம் 45 நூல்கள் எழுதியுள்ளார். இவை பெரும்பாலும் அமெரிக்க அரசியல்வாதிகள் பற்றியே இருந்தன. 1994-ல் தனது சொந்த அனுபவங்களைத் தொகுத்து ‘ஐ வில் ஆல்வேஸ் ஹாவ் பாரீஸ்’ என்ற நூலாக எழுதினார்.
# 2006-ல் உடல்நலம் சரியில்லாமல் ஓய்வில் இருந்தபோது ‘டூ ஸூன் டு ஸே குட்பை’ என்ற புத்தகத்தை எழுதி முடித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 5 மாத கால அனுபவங்களும் அதில் இடம்பெற்றிருந்தன.
# நகைச்சுவை கலந்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் தனித்துவமான பாணியால் 1982-ல் புலிட்சர் விருது பெற்றார். ‘எர்னிபைல்’ வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார். பல அமைப்புகள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின.
# வாழ்நாள் இறுதிவரை எழுதியவரும், நகைச்சுவையால் உலகம் முழுவதும்ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தியவருமான ஆர்தர் புச்வால்டு சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக 82-வது வயதில் (2007) மறைந்தார்.