

ஒவ்வொரு துறையிலும் ஆய்வுகள் நடக்கின்றன. அந்தந்த துறை வல்லுநர்கள் அவரவர்களின் தேவைக்கேற்ப ஆய்வுகள் செய்கிறார்கள். பரிசோதனைகள் செய்கிறார்கள். புதுக்கருத்துகளைக் கண்டுபிடிக்கிறார்கள். இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அவர்கள் யாரும் குழந்தைகளை நினைப்பதில்லை.
இத்துறை வல்லுநர்கள் ஒருபோதும் “ஐயோ, இது குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டுமே. பாடத்திட்டம் தயாரிப்பவர்கள் இருக்கிறார்களே. அவர்களுக்கேற்ப கருத்துகளை நாம் வரிசைப்படுத்த வேண்டுமே” என்றெல்லாம் நினைத்து தாங்கள் கண்டடைந்த கருத்துகளின் வரிசையை மாற்றுவதில்லை.
கல்வியாளர்களோ, பாடத்திட்டம் உருவாக்குபவர்களோ துறைசார் வல்லுநர்கள் கண்டுபிடித்த கருத்துகளின் வரிசையைக் குழந்தைகள் கற்பதற்கேற்ப மாற்றுவதுமில்லை. அப்படியே பின்பற்றுகிறார்கள். இதனால் என்ன பிரச்சினை? ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.
மொழியியலில் கருத்துவரிசை: மொழியியல் வல்லுநர்கள் மக்கள் பேசுவதைக் கவனிக்கிறார்கள். ஒலிகளை வகைப்படுத்துகிறார்கள். ஒலிவகைகளுக்கேற்ப எழுத்துக்களை வரிசைப்படுத்துகிறார்கள். சொற்கள்மற்றும் வாக்கியங்களைக் கவனிக்கிறார்கள். வகைப்படுத்துகிறார்கள்.
ஒவ்வொரு வகைக்கும் பெயர் சூட்டுகிறார்கள். இதுபோல் மொழி வடிவங்களுக்கு (கதை, கவிதை, கட்டுரை...போன்றவை) வருகிறார்கள். வகைப்படுத்துகிறார்கள். பெயர் சூட்டுகிறார்கள். அந்த வகைக்குள் அடங்காதவற்றை விதிவிலக்கு என்று கூறிவிடுகிறார்கள். அல்லது அதற்கொரு புதுப்பெயரைச் சூட்டிவிடுகிறார்கள்.
குழந்தைகள் படும் பாடு: எழத்து, சொல், வாக்கியம், வடிவம் என்ற வரிசையில் குழந்தைகள் கற்க வேண்டும் என்று நாம் எப்படியோ புரிந்து வைத்திருக்கிறோம். பொருள் நிறைந்த சூழலில் தங்களுக்குக் கிடைக்கும் மொழியனுபவங்களிலிருந்து விதிகளை உருவாக்கி, அதைப் பல சூழல்களில் பயன்படுத்தி, கேட்பவர்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்று கவனித்து தான் உருவாக்கிய விதியைக் கொள்ளவா தள்ளவா என்று முடிவு செய்து முன்னேறுவதுதான் குழந்தைகள் கற்கும் முறை. குழந்தைகள் மட்டுமல்ல நாமும் இப்படித்தான் கற்கிறோம்.
வெளியூர்களில் சில மாதங்கள் தங்கும் நாம் மெல்ல மெல்ல அம்மொழியைப் பேசக் கற்றுக்கொள்வது இந்த இயல்பின் வெளிப்பாடு. ஆனால், தற்போது குழந்தைகள் தனிப்பட்ட எழுத்துகளைக் கண்டு அஞ்சி மிரண்டு நிற்கிறார்கள். ஆறு வயதில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து, கவனச்சிதறலுக்கு அதிக வாய்ப்பில்லாமல், எழுத்துகளை மனனம் செய்து கற்று, வாசிக்கப் பயிற்சி பெற்றிருந்த காலம் பண்டைய காலம். ஆனால், இப்போது மூன்று வயதிலேயே எழுத்துகளின் உலகத்திற்குள் நாம் குழந்தைகளைத் தள்ளிவிடுகிறோம்.
முயற்சியும் பயிற்சியும்! - மொழி கற்பது வேறு; மொழியைப் பற்றிக் கற்பது வேறு. மொழியனுபவங்கள் ஏற்படும்போதெல்லாம் குழந்தைகள் விதிகளை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். எந்த வகைச் சொற்கள் வாக்கியத்தின் எந்த இடத்தில் வருகின்றன? எவ்வகைச் சொற்களைச் சேர்த்து ஒரு தொடரை உருவாக்கலாம் என்பவற்றையெல்லாம் குழந்தைகள் கற்றுக்கொள்வதை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ஒரு குழந்தையும் “நான் நேற்று புத்தகத்திற்குச் சென்றேன்” என்று சொல்வதில்லை.
இதற்கு முயற்சியும் பயிற்சியும் தேவை. மூளையின் வளர்ச்சி இதில்முக்கிய பங்கு வகிக்கிறது. எவ்வளவு சீக்கிரம் விதிகளை உருவாக்கி, அதைப்பயன்படுத்திப் பார்த்து, அதற்கு ஆதாரங்கள் தேடி, விதியை உறுதிப்படுத்துகிறார்களோ அந்த அளவுக்கு மொழிக்கற்றல் தீவிரம் அடையும். வேகம் பெறும். மொழியனுபவங்களின் சுவையும், வகைமையும், அவை குழந்தைகளின் தேவைகளை எந்தளவுக்கு நிறைவேற்ற உதவுகின்றன என்பதையெல்லாம் பொறுத்து கற்றலின் வேகம் அமையும்.
மொழி வல்லுநர்கள் நடத்தியது மொழியைப் பற்றிய ஆய்வு. அதுமொழியை ஓரளவுவரை கற்றுத்தேர்ந்தவர்களால் நடத்தப்பட்டது. மொழியின் ஆற்றலும் அதன் அமைப்பும் அவர்களைக் கவர்ந்துள்ளது. வல்லுநர்கள் நடத்தியது மொழியைப் பற்றி கற்பது. ஆனால், குழந்தைகள் செய்வதோ மொழியைக் கற்பது. அது மொழியைப் பற்றிக் கற்பவர்கள் அடுக்கி வைத்த அதே வரிசையில் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகப்பெரிய தவறு.
முதலில் குழந்தைகளைப் பேசவிடுவோம். தங்கள் கருத்துகளைச் சொல்லட்டும். நாம் தலையை மட்டும் ஆட்டியாட்டி உச்சுக்கொட்டுவோம். “ம் அப்புறம்... ம் அப்புறம்...” என்று உண்மையான அக்கறையோடு கேட்போம். அதுவே குழந்தைகள் மொழி கற்பதின் அடிப்படை.
- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், கல்வி இயக்குநர், ‘Qrius Learning Initiatives’, கோவை. தொடர்புக்கு: rajendran@qrius.in