

தனது மகளின் பல் வலி குறித்து கவலையுடன் சந்தேகங்கள் பல கடந்த வாரம் கேட்டிருந்தார் லீனாவின் தாயார். இது தொடர்பாக முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, பல் கூச்சம் அல்லது பல் வலியை நாம் உணர்கிறோம் என்றால், பற்சிதைவு நமது பல்லின் முதல் இரண்டு அடுக்களைத் தாண்டி வேர் வரை பரவியுள்ளது என்பதைத்தான்.
இந்தப் புரிதலோடு நாம் உணவு உண்ணும்போது நமது உடலில் ஏற்படும்மாற்றங்களை இப்போது பார்ப்போம். பொதுவாக நாம் உணவை உட்கொள்ளும்போது முன் பற்களால் கடித்து இழுத்து, பின் பற்களால் மென்று விழுங்குகிறோம். அப்படி பல்லின் மேற்பகுதியான எனாமல் உணவை மெல்வதற்கு உதவுகிறது என்றால், மெல்லும்போது உணவை மென்மையாக்கி, அதை ஜீரண மண்டலத்திற்கு கொண்டு செல்ல உமிழ்நீர் உதவுகிறது.
பற்களில் படியும் உணவு: ஆனால், அப்படி நாம் மெல்லும் முழு உணவும் வயிற்றுக்குள் சென்றாலும், நமது பல்லின் இடுக்களிலும், எனாமல் மீதும் சிறு உணவுத்துகள்கள் படிகின்றன. இந்த உணவுத்துகள்கள் பற்களை என்ன செய்யும் என்பதை நாம் தெரிந்துகொண்டால் அதன் பாதிப்பால் நமக்கு நிகழும் பற்சிதைவையும் தடுக்க முடியும் என்கிறது அறிவியல்.
உண்மையில் நமது வாய் ஆரோக்கியத்தைக் காப்பதில் பெரும்பங்கு வகிப்பவை நமது வாயில் உள்ள ‘மைக்ரோ-பயோம்' என அழைக்கப்படும் நுண்ணுயிரிகள். அதிலும் குறிப்பாக பாக்டீரியாக்கள் தான். நமது எனாமலின் கால்சியம் மற்றும் அத்தியாவசிய கனிமங்கள் அழியாமல் இருக்க உதவுபவையும் இந்த மைக்ரோ-பயோம்கள் தான். நமது வாயில் மட்டுமே ஏறத்தாழ 2 கோடி பாக்டீரியாக்கள் வரை உள்ளன. அத்துடன் இந்த நல்ல பாக்டீரியாக்களுக்கு இடையே ‘cariogenic bacteria' எனும் பற்சிதைவை உண்டாக்கும் சில கெட்ட பாக்டீரியாக்களும் சேர்ந்தே காணப்படுகின்றன.
இதில் நாம் உணவை உண்டு முடித்த பிறகு, நமது பற்களின் இடுக்குகளிலும் பற்களின் மீதும் படிந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத உணவுத்துகள்கள் இந்தபாக்டீரியாக்களுடன் சேர்ந்து ஓர் உயிர்ப்படலமாகப் (biofilm) மாறுகிறது. உண்மையில் இந்த உயிர்ப்படலத்தின் இதே மைக்ரோ-பயோமிலிருந்து வெளிவரும் ஃப்ளூரைடுகள் மற்றும் சில நோயெதிர்ப்பு நொதிகள் பற்சிதைவைத் தடுக்கின்றன என்றாலும் நமது உணவில் உள்ள அதிகஇனிப்பு, சாக்லேட், பிஸ்கட் உள்ளிட்ட அதிசுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்கள் (refined carbs), பழரசங்கள் ஆகியனஓர் அமில விளைவை ஏற்படுத்துகின்றன. அப்படி ஏற்படும் இந்த அமில விளைவால் plaque எனும் பற்படலம் உருவாகி அது நமது எனாமலைப் பதம் பார்க்கத் தொடங்கிவிடுகிறது. அதாவது ஸ்டீல் கம்பி மெதுவாகத் துருப்பிடிக்கத் தொடங்குகிறது.
(பல் ஆலோசனை தொடரும்)
- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com