இவரை தெரியுமா? - 16: உழைப்பே உயர்ந்தது என்று நிறுவிய ஆடம் ஸ்மித்

இவரை தெரியுமா? - 16: உழைப்பே உயர்ந்தது என்று நிறுவிய ஆடம் ஸ்மித்
Updated on
1 min read

‘எங்கெல்லாம் பெரும் சொத்து குவிக்கப்பட்டிருக்கிறதோ, அங்கெல்லாம் ஏற்றத்தாழ்வான சமூகம் உண்டென்று பொருள்’ என எளியோருக்கும் புரியும்படி பொருளாதார பேச்சுவார்த்தையைப் பொது தளத்திலிருந்து பேசத் தொடங்கியவர் ஆடம் ஸ்மித். மூடநம்பிக்கைகளை அறிவியல் எனும் விஷம் கொடுத்துதான் கொலை செய்ய வேண்டும் என்றதோடு, தன் வாழ்வின் பெரும்பான்மை நேரத்தை அறிவியல்பூர்வச் சிந்தனைக்காக செலவு செய்த நவீனத்தின் முன்னோடி.

இன்றிலிருந்து சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாந்தின் பிஃபே மாகாணத்தில், கிர்கால்டி எனும் சிறிய கிராமத்தில் ஆடம் பிறந்தார். புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பைநிறைவு செய்து, கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராக 13 ஆண்டுகள் பணி செய்தார்.

இக்காலக்கட்டத்தில் தத்துவ அறிஞர் டேவிட் யூம்-உடன் ஆடமுக்கு நல்ல தொடர்புஏற்பட்டது. சமூக அறங்களையும் பொருளாதாரச் சிந்தனைகளையும் இவ்விருவரின் உரையாடல் கட்டுக்கோப்பாக வளர்த்தெடுத்தது. 1759-ல் தன் பல்கலைக்கழகப் பணிகளுக்கிடையே ‘The Theory of Moral Sentiments’ (ஒழுக்க உணர்வுக் கோட்பாடு) எனும் புத்தகத்தை ஆடம் வெளியிட்டார். ஆனால், ஆடம் ஸ்மித்தின் அடுத்தப் பாய்ச்சலில்தான் உலகம் மாற்றுப் பார்வையில் சிந்திக்கவிருந்தது.

‘நாடுகளின் செல்வம்’ உருவாக்கிய அலை: ஸ்காட்லாந்து அரசின் சுங்கத்துறை ஆணையராக சில காலம் பணிபுரிந்தார். இங்குப் பொருளாதார இயக்கம் பற்றி அவர் அதிகம் தெரிந்துகொண்டதாய் ஸ்மித்தின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

1776-ல் ‘An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations’ (சுருக்கமாக ‘நாடுகளின் செல்வம்’) எனும் புத்தகத்தை வெளியிட்டதன் மூலம், தன் இறுதி மூச்சுவரை புகழின் உச்சியில் இருந்தார். அப்படி என்ன அதில் புதிதாகச் சொல்லி விட்டார்? பொருளாதாரத்தின் தந்தை எனக் கொண்டாடும் அளவுக்கு அப்புத்தகம் என்ன தாக்கங்களை உருவாக்கியது?

ஆடம் சொன்னவை எல்லாம் புத்தம் புது கருத்துக்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், எல்லாவற்றையும் அறிவியல் பூர்வமாக வரையறுத்து, விரிவாக விளக்கினார். அதுநாள்வரை சமூகத்தில் நிலவிய தப்பெண்ணங்களை உதாரணங்கள் மூலம் உடைத்தெறிந்தார். நிலமே பிரதான மதிப்புமிக்க பொருள் என்பதை உடைத்து, உழைப்பே உயர்ந்தது என்று நிறுவினார்.

(ஆடமின் சாதனை தொடரும்)

- கட்டுரையாளர்: சதீஸ்குமார் என்ற இயற்பெயர் கொண்டவர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்து வருகிறார் தொடர்புக்கு: iskrathewriter@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in