நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 46: நல்ல கடனை கையாள்வது எப்படி?

நீங்க ‘பாஸ்' ஆக வேண்டுமா? - 46: நல்ல கடனை கையாள்வது எப்படி?
Updated on
2 min read

கடந்த அத்தியாயத்தில் நல்ல கடன், கெட்ட கடன் குறித்து பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் நல்ல கடனை புத்திசாலித்தனமாக அணுகுவது குறித்து பார்ப்போம். நல்ல கடன் நமக்கு நன்மை பயப்பவை என்றாலும் அளவுக்கு மீறினால் கெடுதலை உருவாக்கி விடும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அல்லவா?

நமது மாத வருமானத்தில் அனைத்து வகையான செலவுகள் 60 சதவீதம் போய்விடும். மீதமிருக்கும் தொகையை கடனை அடைப்பதற்கும் சேமிப்புக்கும் பயன்படுத்த வேண்டும். மொத்த கடனுக்கும் நாம் கட்ட வேண்டிய இ.எம்.ஐ. தொகை மொத்த வருமானத்தில் 30% க்கு குறைவாக இருக்க வேண்டும். அந்த தொகையின் அடிப்படையிலே எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என தீர்மானிக்க வேண்டும்.

திருப்பிக் கட்ட முடிந்த அளவு மட்டுமே வாங்குவது மிகவும் நல்லது. ஒட்டுமொத்த கடனும் நம் சொத்துக்களின் மதிப்பை மீறவே கூடாது. இதனை தக்க வைத்துக் கொள்வது மிக மிக அவசியம். அப்போதுதான் நமது பொருளாதார அடிப்படை கட்டமைப்பு ஆட்டம் காணாமல் இருக்கும்.

சொத்து வழங்கும் வீட்டுக்கடன்: நல்ல கடன்கள் பட்டியலில் முதலில் இருப்பது வீட்டுக்கடன் தான். நம் ஊரில் சொந்த வீடு என்பது அனைவரின் கனவாக இருக்கிறது. அது நாளுக்கு நாள் விலை ஏறும் நிரந்தர சொத்தாகவும் மாறி விடுகிறது. வீட்டின் விலை ஏறும்போது நம் சேமிப்பின் மதிப்பும் பல மடங்கு உயர்கிறது.

எனவே வாடகை கட்டுகிற பணத்தில் கடன் கட்டினால் வீடு சொந்தமாகி விடும் என பலர் வீட்டுக்கடன் வாங்குகிறார்கள். இந்த கடனை வாங்கும்போது எந்த வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்கிறார்கள் என ஆராய வேண்டும். கடன் செலுத்தும் முறை, கட்டணம், அபராதம் உள்ளிட்டவற்றை அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

நாம் வீட்டுக் கடனுக்கு கட்டும் வட்டிக்கு வருமான வரி பிரிவு 24-ன் கீழ் இரண்டு லட்சம் ரூபாய் வரையும், அசலுக்கு பிரிவு 80சியின் கீழ் ஒன்றரை லட்சம் ரூபாய் வரையும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

உயர்வை தரும் கல்விக்கடன்: கல்வியை விட உலகில் சிறந்தது எதுவும் இல்லை. கீழ் நிலையில் இருக்கும் ஒருவர் வாழ்வில் மேல் நிலைக்கு செல்ல கல்வியே சிறந்த வழி. அதனை பெற கடன் வாங்கியேனும் கற்பதில் தவறில்லை. கல்லூரி படிப்பை முடித்து வேலைக்குச் சென்றபின் கடனைக் செலுத்தலாம். இதற்கு வட்டி விகிதமும் குறைவு. வருமான வரி பிரிவு 80-ன்கீழ் இதற்கு வரி விலக்கும் கிடைக்கிறது.

கைக்கொடுக்கும் தொழில் கடன்: தொழில் முனைவோருக்கும் கிராமப்புற மக்களுக்கும் தொழில் தொடங்குவதற்கு முதல் சிக்கலே முதலீடு தான். அதிலும் ஆரம்ப காலத்தில் நிதி பற்றாக்குறை மட்டுமே நிறைந்திருக்கும். எல்லா நிலைகளிலும் பணத்தேவை இருந்து கொண்டே இருக்கும். இதை உணர்ந்து அரசும் எம்.எஸ்.எம்.இ. (Micro, Small Medium Enterprises) நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் நீண்டகாலக் கடன் கிடைக்க செய்கிறது.

கடனைக் கட்டும் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்துக்கு வரிவிலக்கும் கிடைக்கிறது. தற்போது பெரும் விருட்சமாக ஆலமரமாக வளர்ந்திருக்கும் பல நிறுவனங்களும் ஒரு கட்டத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்டவையே. இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி தன் மனைவியிடமும் வங்கியிலும் கடன் வாங்கியே அந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். இன்று அந்த நிறுவனம் உலகமெங்கும் பெரும் ஆலமரமாக பரந்து விரிந்திருக்கிறது.

மானிய விலையில் கிடைக்கும் விவசாய கடனும் விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றுகிறது. அதனை நல்ல முறையில் பயன்படுத்தினால் கிராமப்புற இந்தியாவும் செழிப்படையும்!

(தொடரும்)

- கட்டுரையாளர் தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in