

நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு. இவர் நியூசிலாந்தின் பிரைட்வாட்டர் பகுதியில் 1871-ல் பிறந்தார். ஆசிரியரான இவரின் தாய் “அறிவுதான் ஆற்றல்” என்பதை அழுத்தமாக சொல்லி வளர்த்தார்.
தொடக்கக் கல்வியை அரசு பள்ளியில் பயின்றார். 10 வயதில் அறிவியல் புத்தகம் ஒன்றை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து ஆராய்ச்சி பக்கம் ஈர்க்கப்பட்டார். அதில் உள்ள ஆய்வுகளை உடனுக்குடன் செய்துகாட்டி குடும்பத்தினரை ஆச்சரியப்படுத்தினார். 23 வயதுக்குள் பிஏ, எம்ஏ, பிஎஸ்சி என 3 பட்டங்களைப் பெற்றார். ட்ரினிட்டி கல்லூரியில் ஆய்வு மாணவராக சேர்ந்து 1897-ல் முனைவர் பட்டம் பெற்றார்.
கனடாவில் உள்ள மெக்கில் பல்கலையில் இயற்பியல் துறைப் பேராசிரியராக 27 வயதில் நியமிக்கப்பட்டார். மான்செஸ்டர் பல்கலையில் இயற்பியல் துறைத் தலைவரானார். யுரேனிய கதிர்வீச்சில் ஆல்பா, பீட்டா, காமா கதிர்களை கண்டறிந்தார். இதன்மூலம் அணு ஆற்றல் என்ற முக்கியக் கோட்பாட்டை உருவாக்கினார்.
கதிரியக்கத் தனிமங்கள் குறித்த ஆய்வுகள் மற்றும் தனிமங்களில் ஏற்படும் கதிரியக்கச் சிதைவு குறித்த கண்டுபிடிப்புகளுக்காக 1908-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார். ‘அணுக்கரு இயற்பியலின் தந்தை’ என போற்றப்படும் எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு 1937 அக்டோபர் 19-ம் தேதி காலமானார்.