

தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருந்ததால், களைத்து விட்டது. இருந்தாலும் சுற்றித்திரிய வேண்டும் என்று மனம் கட்டளையிட்டது. அதனால் இரண்டு நாட்கள் ஜெய்ப்பூரில் தங்கி இருந்த அறையில் ஓய்வெடுத்துவிட்டு, மேற்கு உத்தரப்பிரதேசத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கினோம்.
ஜெய்ப்பூரில் இருந்த நாட்கள் மழை, வெய்யில் என வானிலை மாறிக்கொண்டே இருந்தது. அதே வானிலைதான் ஆக்ரா வரை தொடர்ந்தது. வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்ததால், ஒரு கட்டத்துக்கு மேல் பயணம் செய்ய முடியவில்லை. சாலையோரம் இருந்த தாபாவில் ஒய்வெடுத்து, மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம்.
ஆக்ராவில் தமிழ் மணம்: தீபாவளி, பொங்கல் வாழ்த்து அட்டைகள், திரைப்படங்களில் மட்டுமே பார்த்துவந்த தாஜ்மஹாலை முதன் முதலில் நேரில் தரிசிக்க இருக்கிறோம் என்ற பிரமிப்போடு ஆக்ரா சாலைகளின் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மெதுவாக ஹோட்டல் அறையை சென்றடைந்தோம். நாம் தங்கி இருந்த விடுதியின் மேலாளர் தமிழகத்தை சேர்ந்தவர். தமிழக வண்டி ரிஜிஸ்ட்ரெஷன் எண்ணை பார்த்ததும் ஓடிவந்து பேசினார். கிட்டத்தட்ட நாற்பது நாட்களுக்குப் பிறகு நம்ம ஊர் தமிழை கேட்டதும் இனம்புரியாத மகிழ்ச்சி எட்டிப்பார்த்தது.
பிழைப்புக்காக வடக்கே வந்தவர், பயணங்கள் மீதான காதலால் இன்று பயண ஒருங்கிணைப்பாளராகவும், விடுதிமேலாளராகவும் இருக்கிறார். விடுதி மொட்டை மாடிக்கு வந்து இரவு உணவருந்த சொன்னார். அதற்கான காரணம் அப்போது புரியவில்லை. நாமும் சரி என்று சொல்லிவிட்டு, இரவு எட்டு மணிக்குமேல் மொட்டைமாடிக்குச் சென்றோம்.
கண்ணுக்கெட்டும் தூரத்தில், பிரகாசமாய் ஜொலித்துக் கொண்டிருந்தது தாஜ்மஹால். இவ்வளவு அருகில் தாஜ்மஹாலை பார்த்ததும் வாயடைத்துப் போனோம். நாங்கள் தங்கி இருந்த விடுதியில் இருந்து பத்து கட்டிடங்கள் தாண்டினாலே தாஜ்மஹாலை அடைந்துவிடலாம், அந்தளவு பக்கத்தில் அறையெடுத்து தங்கி இருந்தோம்.
இரவு உணவு, காலை டீ, உணவு எல்லாமே விடுதி மொட்டை மாடியிலேயே அமர்ந்து, தாஜ்மஹாலை ரசித்துக் கொண்டே சாப்பிட்டோம். மறுநாள் முழுவதும் மொட்டை மாடியிலேயே சென்றது. அதற்கு அடுத்த நாள் அதிகாலை நான்கரை மணிக்கெல்லாம் எழுந்து தாஜ்மஹாலை காண சென்றுவிட்டோம்.
நாம் தான் இத்தனை சீக்கிரம் வந்துவிட்டோம், வேறு யார் இந்த அதிகாலை வந்திருப்பார்கள் என்ற நினைப்போடு சென்ற எங்களுக்கு ஏமாற்றம் தான். எங்களுக்கு முன்னரே நூறுபேருக்கு மேல் டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருந்தார்கள். தாஜ்மஹாலில் பாதுகாப்பு மிக அதிகமாக இருந்தது. உள்ளூர் போலீஸ் முதல் மத்திய ராணுவம் வரை எங்கு பார்த்தாலும் காக்கி உடை அணிந்த வீரர்கள் தான் தெரிந்தார்கள். பல அடுக்கு சோதனைக்கு பிறகு தாஜ்மஹாலுக்குள் செல்ல முடிந்தது. கேமரா எடுத்து செல்லலாம், ஆனால் செல்பி ஸ்டிக் எடுத்து செல்ல அனுமதி இல்லை.
வேறு எது உலக அதிசயம்! - நம் ஊர் ரங்கநாதன் தெருவுக்குள் சென்றால், எப்படி பொருட்களை வாங்கச் சொல்லி பின்னாடியே வருவார்களோ, அந்த அளவுக்கு தாஜ்மஹாலுக்கு வழிகாட்டியாக (கைட்) வருகிறேன் என நூற்றுக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருவார்கள்.தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆனால், தாஜ்மஹாலுக்குள் இருக்கும்ஷாஜகான் மற்றும் மும்தாஜ் நினைவிடத்துக்குள் வந்து அதுகுறித்து விவரிக்க மாட்டார்கள். அதைத் தவிர அங்குள்ள கட்டடங்கள், கட்டட அமைப்புகள் குறித்துவிரிவாக எடுத்து சொல்வார்கள். நமக்குகைட் தேவையில்லை என்பதால் முதலிலேயே வேண்டாம் என்று சொல்லிவிட்டோம்.
பிரம்மாண்ட நுழைவு வாயில் வழியாக தாஜ்மஹாலைப் பார்த்ததும் தோன்றியது ஒன்று தான், இது உலக அதிசயம் இல்லை என்றால் வேறு எது உலக அதிசயம். அந்த பளிங்கு கற்களின் அதிசயங்களை ஒவ்வொன்றாய் ரசித்துவந்தோம். அழகழகாய் புகைப்படம் எடுத்தோம். தாஜ்மஹாலுக்குப் பின்னால் யமுனை நதியில் அவ்வளவாகத் தண்ணீர் இல்லை.
அதனால் யமுனையில் நாம் படகு சவாரி செய்ய நினைத்ததும் முடியாமல் போனது. மணிக்கணக்காக தாஜ்மஹாலை ரசித்துக் கொண்டிருந்தோம். நேரம் போனதே தெரியவில்லை, பசிக்க ஆரம்பித்ததும் தான் அங்கிருந்து வெளியே வந்தோம். ஆக்ராவின் ’ஸ்பெஷல் பேட்டா’ என்ற இனிப்பை ருசித்து மகிழ்ந்தோம். ஆக்ராவில் மட்டுமே தயாராகும் அந்த இனிப்பு ரொம்பவே பிடித்துப் போனது. அங்கிருந்து வீட்டுக்கும் அந்த இனிப்பை பார்சல் அனுப்பிவிட்டு, தலைநகர் செல்வதற்குத் தயாரானோம்.
- கட்டுரையாளர்: இதழியலாளர், பயணப் பிரியை; தொடர்புக்கு: bharaniilango@gmail.com