

வீட்டிற்குள் நுழையும்போதே 'அத்தை' என்று அழைத்தவாறே வந்தான் சுடர்.
குழலி: வரும்போதே அத்தையைத் தேடுற... என்ன செய்தி சுடர்...
சுடர்: ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு ஏன் ரெட்டைத் தாழ்ப்பாள்னு தெரிஞ்சுக்க வேணாமா...
இருவரின் பேச்சுக் குரல் கேட்டதும் அம்மா வெளியில் வந்தார்.
சுடர்: அத்தை, ஒட்டக்கூத்தர் சோழ நாட்டப் புகழ்ந்து பாட, அதுக்குப் போட்டிப் பாட்டா புகழேந்திப் புலவர் பாண்டிய நாட்டோட சிறப்பப் பாடினார்னு பேசிட்டிருந்தோம். நீங்க சொன்னதுக்குப் பொருள் சொல்லுங்களேன்.
அம்மா: ரெண்டு பேருக்கும் புகழேந்திப் புலவர் பதில் பாட்டா என்ன பாடினார்னு தெரியுமா...
குழலி: அம்மா எனக்குத் தெரியும். இருங்க புத்தகத்தை எடுத்துட்டு வந்து பாட்டைச் சொல்றேன்...
ஒருமுனிவன் நேரி யிலோ உரை தெளித்தது அம்மானே
ஒப்பரிய திருவிளையாட்டு உறந்ததையிலோ அம்மானே
எனத் தொடங்கும் புகழேந்திப் புலவர் பாடலை வாசிக்கத் தொடங்கினாள் குழலி.
சுடர்: பாட்டோட பொருளைச் சொல்லு குழலி...
குழலி: அகத்திய முனிவர் தமிழைப் படைத்தார்னு சொல்றமே... அவர் இருந்து தமிழைப் படைச்சதாகச் சொல்ற மலை எது? பாண்டிய நாட்டில இருக்கிற பொதிகை மலையா? இல்ல சோழ நாட்டுல இருக்கிற நேரி மலையா?
இறைவனாகிய சிவபெருமான் திருவிளையாடல்கள் நடத்தினார்னு புராணங்கள் சொல்லுதே. அந்தத் திருவிளையாடல்கள் எங்க நடந்தது... பாண்டிய நாட்டுத் தலைநகரான உறந்தையிலா இல்ல, சோழ நாட்டுத் தலைநகரான கொற்கையிலா?
திருமால் மீனாகத்தான் அவதாரம் எடுத்தாரே தவிரப் புலியாக இல்லயே...
சிவபெருமான் தன்னோட தலைமுடியில் சந்திரனாகிய நிலாவைத் தான் சூடியிருக்காரே தவிர சூரியனை இல்லையே?
புலவர்கள் இயற்றிய நூல்களோட பெருமையை சங்கப்பலகை அறியும்படி நீரை எதிர்த்துக் கரைசேர்ந்து சுவடிகளின் பெருமையை உலகுக்குச் சொன்ன நிகழ்ச்சி வையை ஆற்றில்தானே நடந்தது. சோழ நாட்டுக் காவிரி ஆற்றில் இல்லையே...
பேய் பிடித்தால், பாதித்தவர்களை அதிலிருந்து காப்பாற்ற, வேப்ப இலைதான் பயன்படுகிறதே தவிர ஆலிலை இல்லையே...
ஒரு முறை கடலே வந்து பாண்டிய மன்னரைப் பணிந்ததாம், அந்தக் கடல் சோழ மன்னரைப் பணியவில்லையே. பாண்டிய மன்னர்களின் வீரதீரச் செயல்கள் சொல்லுக்கும் அடங்காதவை. அதனால பாண்டிய நாடே சோழ நாட்டை விடச் சிறந்ததுன்னு பொருள் வரும்படிப் பாடினாராம் புகழேந்திப் புலவர்.
சுடர்: இப்பப் புரிஞ்சிருச்சு. ஆதித்தனுக்கு நிகர் அம்புலியான்னு ஒட்டக்கூத்தர் பாடினதுக்கு, புகழேந்திப் புலவர் கொடுத்த பதில். எவ்வளவு அழகாச் சொல்லியிருக்காரு...
குழலி: சூரியன்தான் உயர்ந்ததுன்னு ஒட்டக்கூத்தர் சொல்ல, சிவபெருமானே சூடியது நிலாதான்னு பதில் சொன்னதும், ஒட்டக்கூத்தர் கோபம் உச்சிக்கு ஏறிடுச்சாம்.
அம்மா: சோழ மன்னனுக்கும் பாண்டிய இளவரசிக்கும் திருமணம் நடந்திருச்சு. பாண்டிய மன்னன் தன் மகளுக்குச் சீதனம் கொடுத்து அனுப்புற போது கூடவே புகழேந்திப் புலவரையும் அனுப்பிட்டாராம்.
சுடர்: புகழேந்திப் புலவர் மேல ஏற்கெனவே கோபத்துல இருந்தாரே ஒட்டக்கூத்தர்.
குழலி: ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, புகழேந்திப் புலவரச் சிறையில போட வச்சிட்டாராம் ஒட்டக்கூத்தர்.
அம்மா: நம்ம நாட்டுப் புலவரச் சிறையில அடைக்க வச்சிட்டாரே ஒட்டக்கூத்தர். அவருக்கு மன்னன் கிட்ட இவ்வளவு அதிகாரமான்னு கோபம் வந்திடுச்சாம் மகாராணிக்கு. மன்னன் ஏன் ஒட்டக்கூத்தரைத் தடுக்கலேன்னு நினைச்சு, அந்தப்புரத்துக்குள்ள மன்னன் நுழையுறபோது தன் அறைக் கதைவைத் தாழ் போட்டு விட்டாராம். தனக்காக மகாராணியிடம் சமாதானம் பேசும்படி ஒட்டக்கூத்தரைத் தூது அனுப்பினாராம் மன்னன்.
சுடர்: ஏற்கெனவே மகாராணிதான் ஒட்டக்கூத்தர் மேல கோபமா இருந்தாங்களே.
அம்மா: ஆமா... ஒட்டக்கூத்தர் வந்து ராணியோட கதவுக்கிட்ட இருந்து பாட்டுப்பாடத் தொடங்கினாராம். மன்னன் நினைச்சிருக்கார் தமிழ் மேல ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட மகாராணி, இவர் பாட்டில மெய்மறந்து தன் மேலஇருக்கிற கோபத்தை விட்டுருவாங்கன்னு. ஆனா நடந்ததோ தலைகீழா. ஒரே ஒரு தாழ்ப்பாளை மட்டும் போட்டுக் கதவ மூடியிருந்த மகாராணி, ஒட்டக்கூத்தர் பாட்டக் கேட்டதும் இரண்டாவது தாழ்ப்பாளையும் போட்டுக் கதவ இன்னும் கிச்சுன்னு மூடிட்டாங்களாம்.
சுடர்: புலமைக் காய்ச்சல்னு சொல்வாங்களாமே. அது இதுதான் போலிருக்கு. அத்தை புறப்படுறேன். பிறகு தொடருவோம்.
- கட்டுரையாளர்: தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்; தொடர்புக்கு: janagapriya84@gmail.com