

இன்று நாம் பயன்படுத்தும் எரிபொருள்களைப் படிம எரிபொருள்கள் (Fossil Fuels) என்கிறோம். இந்த எரிபொருள்கள் புதைப் படிமங்களில் இருந்து கிடைக்கின்றன. பல கோடி ஆண்டுகளுக்கு முன் இறந்த தாவரங்கள், நுண்ணுயிர்கள், விலங்குகள் சதுப்பு நிலங்களிலோ, கடலுக்கு அடியிலோ தங்கும்போது அவை வெப்பத்துக்கும் அழுத்தத்துக்கும் உள்ளாகி கார்பன் அதிகமுள்ள படிம எரிபொருளாக மாறிவிடுகின்றன. இதை நாம் நிலக்கரி, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என பல்வேறு வகையில் எடுத்துப் பயன்படுத்துகிறோம். இந்தப் படிமங்கள் அனைத்தும் டைனோசர்கள் காலத்துக்கும் முந்தியவை.
பிரஷ்ஷிலிருந்து ஸ்மார்ட்போன்வரை: படிம எரிபொருட்களை நாம் அதிகம் சார்ந்து இருப்பதற்குக் காரணம், இதில் இருந்து கிடைக்கும் ஆற்றல் மரக்கட்டைகளை எரிப்பதன் மூலமோ, கரித்துண்டுகளை எரிப்பதன் மூலமோ கிடைக்கும் ஆற்றலை விட பல மடங்கு அதிகம். அதை உருவாக்க தேவையான செலவும் குறைவு. இன்றைய சூழலில் மின்சாரத் தயாரிப்பு, வாகன எரிபொருள், சமையல் எரிவாயு என்று அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு தேவையும் இந்த எரிபொருள்களைச் சார்ந்தே கட்டமைக்கப்பட்டுள்ளன.
காலையில் எழுந்து பல் துலக்கப் பயன்படுத்தும் பிரெஷ்ஷில் இருந்து, இரவு தூங்குவதற்குப் பயன்படுத்தும் ஏசி வரையிலான பொருட்களைத் தயாரிப்பதற்கு வேண்டிய பிளாஸ்டிக்குகள் படிம எரிபொருள்களில் ஒன்றான கச்சா எண்ணெயின் துணைப் பொருளாகக் கிடைப்பவை. இவ்வளவு ஏன், நாள் முழுவதும் நீங்கள்பயன்படுத்தும் ஸ்மார்ட்போன், அதில் உள்ள இணைய வசதிஎன நம்மைச் சுற்றியுள்ள சகல வசதிகளும் படிம எரிபொருள்களின்விளைவாகவே கிடைக்கப்பெற்றுள்ளதால், இதற்கு விலை கொடுக்கும் வகையில் அதிகப்படியான கார்பனைக் காற்றில் உமிழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்த வாயுக்கள்தான் வளிமண்டலத்தில் கலந்து நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல சூரியனின் வெப்பத்தை பூமியிலேயே அடைத்து வைக்கிறது. அதனால் காலநிலை மாற்றமும் ஏற்படுத்துகிறது. காலநிலை மாற்றத்தின் பாதிப்பை நாம் குறைக்க வேண்டும் என்றால் நாம் படிம எரிபொருள்களுடனான உறவை முடித்துக்கொண்டாலே போதும். ஆனால், அதற்குச் சாத்தியம் இருக்கிறதா? அடுத்த வாரம் பார்க்கலாம்.
கட்டுரையாளர்: அறிவியல், சூழலியல், தொழில்நுட்பம் குறித்து எழுதி வரும் இளம் எழுத்தாளர். ‘மிரட்டும் மர்மங்கள்’ நூலாசிரியர்; தொடர்புக்கு: tnmaran25@gmail.com