

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மகள் செல்சியா கிளின்டன் எழுதி, 'தி நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்ட 'உலக வரலாற்றை மாற்றிய 13 பெண்கள்' என்ற பிரபலமான புத்தகத்தில், மேடம் க்யூரி, யூசுஃப் மலாலா, வாங்காரி மாத்தாய் ஆகியோருடன் சேர்த்து குறிப்பிடப்பட்ட ஒருவராக நமது நாட்டின் வீல்சேர் வர்கீஸ் என அழைக்கப்படும் டாக்டர் மேரி வர்கீஸ் என்பவரும் இருக்கிறார். அத்தகையவரைப் பற்றி நாமும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் அல்லவா.
யார் இந்த வீல்சேர் வர்கீஸ்? அப்படி அவர் என்ன தான் செய்தார்? அவரை ஏன் உலகளவில் அனைவரும் வியந்து பார்க்கிறார்கள்? என்பதைத் தெரிந்து கொள்ள, அவரைப் பற்றியும் அவருக்கு நேர்ந்த விபத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
மருத்துவம் கற்பித்த தமிழகம்: மேரி புத்திசெரில் வர்கீஸ் எனும் மேரி வர்கீஸ், 1925 மே 21 அன்று, கேரளாவின் கொச்சி அருகே உள்ள செராய் கிராமத்தில் பிறந்தார். வர்கீஸ் மற்றும் அச்சா தம்பதியினருக்கு பிறந்த எட்டு குழந்தைகளில் ஏழாவது குழந்தை இவர்.
வசதியான கிறிஸ்தவ நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மேரிக்கு, சிறுவயதிலேயே படிப்பிலும் பக்தியிலும் நாட்டம் இருந்தது. கேரளாவில் நல்ல மதிப்பெண்களுடன் பள்ளி மற்றும் இளநிலைப் படிப்பை முடித்து, மருத்துவம் பயில தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிஎம்சி வேலூர் எனும் கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜுக்கு வந்தார்.
தான் மருத்துவக் கல்லூரியில் 1946-ம்ஆண்டு கால் வைத்த அன்று தன்னை நேர்காணல் செய்தவர்தான் அந்த வேலூர் மருத்துவக் கல்லூரியை தோற்றுவித்த டாக்டர் ஐடா ஸ்கட்டர் என்று தெரிந்தபோது, அவரைச் சந்திக்க வைத்ததே கடவுளின் சித்தம் என்று முழுமையாக நம்பினார் மேரி வர்கீஸ்.
அன்றிலிருந்து தானும் ஐடா ஸ்கட்டர் போலவே ஒரு சிறந்த மகப்பேறு மருத்துவர் ஆகவேண்டும் என்று முடிவுசெய்தார். அதேபோல முனைப்புடனும் ஆர்வத்துடனும் மருத்துவம் பயின்ற மேரி வர்கீஸ், 1952 ஆம் ஆண்டு இளநிலைப் பட்டம் பெற்ற கையோடு, தான் பெரிதும் விரும்பிய மகப்பேறு மருத்துவத்தைத் தேர்ந்தெடுத்தார். அதில் இரண்டு ஆண்டுகள் சிறப்புப் பயிற்சியும் பெற்றார்.
பயிற்சி காலம்முடிந்து சொந்த ஊருக்குத் திரும்பி தனது மருத்துவப் பணிகளைத் தொடங்கும் உற்சாகத்தில் இருந்த மேரி, அதற்கு முன்னால் தனது சிநேகிதிகளுடன் சென்ற அந்த சுற்றுலாப் பயணம் தான் அவரது வாழ்க்கையின் திசையை முற்றிலும் மாற்றியது எனலாம்.
திசை மாற்றிய பயணம்: மகப்பேறு பயிற்சி மருத்துவர்கள் 13 பேர் 1954 ஜனவரி 30 அன்று பயணித்த அந்த வாகனம் விபத்துக்குள்ளாகி அவர் படித்த அதே சிஎம்சி வேலூர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். விபத்தில் டாக்டர் மேரி வர்கீஸுக்கு முதுகு தண்டுவட எலும்புகள் நொறுங்கி, நரம்புகள் பாதித்து, அவரது இரு கால்களும் முற்றிலும் செயலிழந்து போயிருக்க, அதன்பிறகு செய்யப்பட்ட அத்தனை அறுவை சிகிச்சைகளும் பயனற்றுப் போயின. மாதக்கணக்கில் அத்தனை வலிகளையும் தாங்கி படுக்கையில் கிடந்தது வீணாகப் போய், ‘பாராபிலீஜியா' எனும் இடுப்புக்குக் கீழே நிரந்தர செயலிழப்புடன், இனி வீல்சேர் தான் வாழ்க்கை என்று முடங்கிப் போனார் டாக்டர் மேரி.
"உடைந்தது எனது முதுகு மட்டுமல்ல.. எனது கனவுகளும் தான்.. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆனது..?" என்று கடவுளிடம் உடைந்து அழுத மேரி வர்கீஸைப் பார்த்த வர்கீஸின் மருத்துவப் பேராசிரியரும் பிரபல கை அறுவை சிகிச்சை (Hand Surgeon) நிபுணருமான டாக்டர் பால் பிராண்ட், "நின்று கொண்டு தானே உன்னால் பிரசவங்களை மேற்கொள்ள முடியாது? ஆனால் உட்கார்ந்தபடி பிற அறுவை சிகிச்சைகளைச் செய்யலாமே" என்று கேட்டதோடு, அவர் விருப்பப்பட்டால் அதற்கு தானே உதவுவதாகவும் உறுதியளித்தார்.
யோசிக்காமல் அதற்கு ஒப்புக்கொண்ட மேரி, அவரிடமே கை அறுவை சிகிச்சைக்கான பயிற்சிகளை எடுத்துக் கொண்டதோடு, தொடர்ந்து தனது ஆசானின் வழிகாட்டலோடு தொழுநோயாளர்களுக்கு ஏற்படும்நரம்பு சார்ந்த தசை மற்றும் தசைநார் பாதிப்புகளையும், குறைபாடுகளையும் நிவர்த்தி செய்யும் சிறப்பு அறுவை சிகிச்சைகளை வீல் சேரில் அமர்ந்தவண்ணம் வெற்றிகரமாக செய்யவும் ஆரம்பித்தார்.
(வர்கீஸ் மகிமை தொடரும்)
- கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com