நானும் கதாசிரியரே! - 21: ரசனை எனும் மந்திரகோல்!

நானும் கதாசிரியரே! - 21: ரசனை எனும் மந்திரகோல்!
Updated on
2 min read

ஒரு கதை எழுத காட்சியை அப்படியே விவரிக்க வேண்டும். அதை அழகான மொழிநடையில் எழுத தெரிந்துகொள்ள வேண்டும். இந்த இரண்டுக்கும் அடிப்படையான ஒன்று இருக்கிறது. அதுதான் ரசனை.

ரசனை என்ற வார்த்தையை நாம் அடிக்கடிக் கேட்டிருக்க மாட்டோம். ஆனால், இது இல்லை என்றால் வாழ்க்கை ரொம்பவே ’போர்’ அடிக்கும். யாரையும் பார்க்க பிடிக்காது; யாருடனும் பழக பிடிக்காது. ரொம்ப பீடிகை வேண்டாம். நேரடியாக ரசனை என்பது குறித்துப் பார்த்துவிடலாம்.

அதென்ன ரசனை? - வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் உங்களுக்குப் பிடித்த ஒரு பாடல் ஒளிபரப்பாகிறது. அதை கண் கொட்டாமல் பார்க்கிறீர்கள். அந்தப் பாடலின் இசையைக் கேட்டு உங்களின் கால்கள் மெல்ல நடனம் ஆடுகின்றன. தலையை இப்படியும் அப்படியுமாக மெதுவாக அசைத்து பாடலை அனுபவித்துக் கேட்கிறீர்கள். அப்போது தீடீரென்று உங்கள் தம்பி அல்லது தங்கை வந்து சத்தமாக கத்துகிறார். இல்லையென்றால் ரிமோட்டை எடுத்து சேனலை மாற்றிவிடுகிறார். அப்போது என்ன சொல்வீர்கள்? ’எவ்வளவு சூப்பரான பாட்டு ஓடிக்கிட்டு இருந்துச்சு. அதை ரசிக்க விடாம இப்படிப் பண்ணிட்டியே?’ என்பீர்கள் அல்லவா?

இன்னொரு காட்சியைப் பார்க்கலாம். உங்கள் ஊரில் உள்ள பெரிய குளத்தில் நீர் நிறைந்துள்ளது. குளக்கரையில் உள்ள மரத்தில் இருந்த கிளை முறிந்து, குளத்தில் விழுந்துவிடுகிறது. விழுந்த கிளை மெல்ல மெல்ல சென்று குளத்தின் நடுப்பகுதிக்கு மிதந்து சென்று விடுகிறது. கிளையில் பாதி வெளியே நீட்டிக்கொண்டிருக்கிறது. அதன்மீது இருபதுக்கும் மேற்பட்ட பச்சைக் கிளிகள் அழகாக அமர்ந்திருக்கின்றன. அவற்றின் பிம்பம் தண்ணீர் தெரிவதைப் பார்க்க இன்னும் அழகாக இருக்கிறது. தண்ணீர் இப்போது கண்ணாடி போல பச்சை கிளிகளின் பிம்பங்களைக் காட்டுகிறது.

குளக்கரையில் அமர்ந்து இந்தக் காட்சியை வியந்து பார்க்கிறீர்கள். பச்சைக் கிளிகள் இடையே ஒன்றை ஒன்று கொஞ்சிக்கொண்டும் சீண்டிக்கொண்டும் உள்ளன. எவ்வளவு நேரம்வேண்டுமானாலும் இந்தக் காட்சியைப் பார்க்கலாம் என்று கண் கொட்டாமல் பார்க்கிறீர்கள்.

அந்த நேரத்தில் உங்கள் நண்பன் அல்லது தோழிவந்து பெரிய கல் ஒன்றை எடுத்து குளத்தின் நடுப்பகுதியை நோக்கி வீச, பறவைகள் பறந்து விடுகின்றன. தண்ணீரில் தெரியும் காட்சியும் கலைந்துவிடுகிறது. அப்போது என்ன சொல்வீர்கள். ’எவ்வளவு சூப்பரான காட்சி இருந்துச்சு. அதை ரசிக்க விடாம இப்படிப் பண்ணிட்டியே?’ என்பீர்கள் அல்லவா?

ஆப்பிள்… கொய்யா… மாதுளை: நாம் காணும் காட்சியில் மனம் ஒன்றிப்போய் பார்ப்பதும் அதை அனுபவிப்பதுமே ரசனை என்று சொல்லலாம். இதற்கு இன்னும் விரிவான அர்த்தம் இருக்கிறது என்றாலும் கதை எழுதுதல் எனும் அளவுக்கு இப்படிப் புரிந்துகொள்வோம். ரசிக்கும் மனநிலை இல்லை என்றால், எந்த ஒரு காட்சியையும் முழுமையாக நம்மால் பார்க்க முடியாது. முழுமையாகப் பார்க்க முடியாவிட்டால் அதை எழுத்தில் சிறப்பாகக் கொண்டுவர முடியாது.

நீங்கள் எழுதும் கதை பேருந்து நிலையத்தில் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது, உங்கள் கண்களை மூடினால், பேருந்து நிலையத்தில் நீங்கள் நிற்க வேண்டும். அங்கு என்னென்ன நடக்குமோ அவை எல்லாம் உங்கள் கண்களுக்குள் காட்சிகளாக ஓட வேண்டும்.

‘நிறைய பேருந்துகள் நிற்க, பின்னால் ஒரு பேருந்து வந்து ஹாரன் அடித்து வழி கேட்கிறது. நடத்துநர் விசில் ஊதிக் கொண்டிருக்கிறார். பேருந்து அருகே வெள்ளரி பிஞ்சு விற்பவர் சத்தம் போட்டுக்கொண்டே செல்கிறார். ஒரு இளைஞர் பேருந்துக்குள் தாவி தன் கைகளில் உள்ள பொம்மைகளை விற்கிறார். இன்னொரு பக்கம் பிச்சை கேட்கும் முதியவருக்கு ஒருவர் பையில் இருந்து நாணயத்தை எடுத்துக்கொடுக்கிறார். ‘ஆப்பிள்… கொய்யா… மாதுளை’ என்று பழ விற்பவரின் சத்தம் கேட்கிறது’.

இப்படி உங்கள் கண்களுக்குள் அனைத்தும் வந்து செல்ல வேண்டும். அவற்றில் கதைக்கு தேவையானவற்றை சரியாக எழுதிவிட்டால், படிப்பவர் அந்தப் பேருந்து நிலையத்தின் நடுவே இருப்பதைப் போல உணர்வார். இதுக்கு அடிப்படையான தேவை, ரசனை. ரசித்துப் பார்ப்பதும் அனுபவிப்பதுமே எழுத்தை இன்னும் வலுப்படுத்தும். ரசனையிலும் நாம் இன்னும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. அவை குறித்து அடுத்த பகுதியில் பார்ப்போம்.

- கட்டுரையாளர் : எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in