கனியும் கணிதம் 39: சாவி விளையாட்டு

கனியும் கணிதம் 39: சாவி விளையாட்டு
Updated on
2 min read

ஒரு தகவலை ரகசியமாக ஒருவருக்கு அனுப்ப வேண்டும். தகவல் செல்லும்போது அதை யார் படித்தாலும் புரியக்கூடாது. அதற்கு அந்தத் தகவலை மறையீடு (Encrypt) செய்து அனுப்பினால் யாராலும் அதை புரிந்துகொள்ள இயலாது. வாட்ஸ்அப்பில் இத்தகவலை நீங்கள் பார்த்து இருக்கலாம் “This message is encrypted” என ஒருவருக்குத் தகவல் அனுப்பிய பின்னர் வரும். அது சொல்ல வருவது உங்கள் தகவலை பாதுகாப்பாக அனுப்பியுள்ளோம் என்பதே.

அந்த வகையில், க-மொழியில் அனுப்புவதும் ஒருவகை மறையீட்டு முறைதான். ஆனால் இதை எளிதாக கண்டுபிடித்துவிடுவதால் கடினமான முறைகளை பின்பற்ற நிர்பந்தம் வந்தது. ஒரு கடிதம் அனுப்புகிறோம். அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பினால் எல்லோருமே படித்துவிடும் அபாயம் இருக்கிறது. ஆகவே அதைப் பாதுகாப்பாக அனுப்ப நினைக்கிறோம். ஒரு கவரில் ஒட்டி அனுப்பினாலும் அதைக் கிழித்து படிக்கும் அபாயம் உள்ளது.

ஒரு பெட்டியை அனுப்புவோம். அந்த பெட்டிக்கு ஒரு பூட்டுப் போட்டு அனுப்புவோம். அந்த பூட்டிற்கான சாவி அனுப்பும் நபரிடம் ஒன்றும் பெறும் நபரிடம் ஒரு சாவியும் இருக்க வேண்டும். அதே சாவி (அதே போலவும் இருக்கலாம்). க- ஒரு சாவி, ஒரு எழுத்து மாற்றம் ஒரு சாவி என ஏற்கனவே பார்த்துள்ளோம். அதைத் திறக்க அதை மறைநீக்கம் (decrypt) செய்ய வேண்டும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த மறையீட்டு முறையும் மறைநீக்க முறையும் முன்னேறிக்கொண்டே வந்தது. இதற்கு எல்லாம் அடிப்படையாக அமைவது கணிதமே. கணிதத்திலும் குறிப்பாக பகா எண்கள் மிகப்பெரிய பங்காற்றுகின்றன. கடினமான படிமுறைகள் (Algorithm) புதிது புதிதாக வந்துகொண்டே இருக்கின்றன. இதை உடைப்பதற்கும் வேலைகள் நடக்கின்றன. உதாரணமாக, உங்கள் சாவி இரண்டு இலக்க எண் என வைத்துக்கொள்வோம். அப்படி எனில் எத்தனை முயற்சியில் உங்கள் சாவியைக் கண்டுபிடித்துவிடலாம்? 00,01,02,03..98,99 – மொத்தமாக 100 முயற்சிகளில் கண்டுபிடித்துவிடலாம். இதுவே மூன்றுஇலக்கம் எனில் - XXX - > 1000 முயற்சிகளில்

நான்கு இலக்க எண் எனில் XXXX -> 10,000 முயற்சிகளில் இதை எல்லாம் நேனோ நொடியில் கணினிகள் முயன்றுவிடும்.

இலக்கங்களை அதிகரித்தால் மட்டுமே போதாது. அப்படியெனில் நாம் உருவாக்கும் சாவி இன்னும் வலுவானதாக, அந்த பூட்டை எளிதாக உடைக்க முடியாததாக இருக்க வேண்டும். எண்களோடு எழுத்தையும் சேர்த்தால்? A90CD என்றால் இன்னும் கடினமாகிவிடும் அல்லவா? ஒரு இலக்கத்தில் அப்போது 0-9, A-Z வரையில் மொத்தம் 36 வேறுவேறு குறியீடுகள் வரலாம். 10-ல் இருந்து 36-க்கு நகர்ந்துள்ளது. ஆங்கிலத்தில் Captial/ small letters உண்டு அல்லவா ? அப்படி எனில் அதையும் சேர்ப்போம். 0-9, a-z, A-Z. இப்போது 62 வெவ்வேறு குறியீடுகள் வரலாம். நம்முடைய சாவி வலுவானதாக மாறிக்கொண்டு வருகிறது.

ரகசிய சாவி: இந்த சாவி முறைகளிலும் இரண்டு வகை உண்டு. Private Key – Private Key. முதல் முறையில் இருவருக்குமே அந்தச் சாவி கைவசம் வேண்டும். அது தெரிந்தால் மட்டுமே பூட்ட முடியும், பின்னர் சரியாகத் திறக்க முடியும். வீடுகளில் இரண்டு சாவிகள் இருக்கும், அப்பா பூட்டிவிட்டு செல்வார், அம்மா வந்து தன்னிடம் இருக்கும் சாவியைக் கொண்டு திறப்பார். இரண்டு சாவிகளும் பிரதிகள். Public Key – Private Key. இது இரண்டாம் முறை. இதில், தகவலை பெறும் நபர் எல்லோருக்குமே ஒரு சாவியை பகிர்ந்திருப்பார் (Public Key), அதைப் பயன்படுத்தி செய்தியை மறையீட்டு செய்து உரிய நபருக்கு அனுப்ப வேண்டும்.

உரிய நபரிடம் இருக்கும் Private Key கொண்டு தகவலை படிப்பார். வேறு யாராலும் இந்த சாவி (Private Key) இல்லாமல் படிக்க இயலாது. இங்கே இரண்டு சாவிகளும் ஒன்றல்ல. Private Key-யை யாருக்கும் பகிரமாட்டார்கள். அது மிக ரகசியமாக வைத்திருப்பார்கள். நாம் வாழும் நவீன தொழில்நுட்ப யுகத்தில் இணையம் மூலம்அனுப்பப்படும் எல்லா தகவலுமே ரகசியம் காப்பதற்காக மறையீடு செய்யப்பட்டே அனுப்பப்படுகிறது. இதன் அடிப் படை எல்லாமே கணிதம்.

- கட்டுரையாளர்: சிறார் எழுத்தாளர், ‘மலைப்பூ’, ‘1650 முன்ன ஒரு காலத்திலே’ உள்ளிட்டவை இவரது நூல்கள். தொடர்பு: umanaths@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in