

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுள் மிகக்குறைந்த வயதில் நாட்டிற்காக தன் இன்னுயிரை ஈந்த, என்றென்றும் மக்களால் மறக்க இயலாத இடத்தை பிடித்தவர் பகத்சிங். அவர் பிறந்தது தற்போதைய பாகிஸ்தானில் உள்ள பங்கா என்ற ஊர். அவருடைய "நான் ஏன் நாத்திகன் ஆனேன்? " என்ற நூல் மிகவும் பேசப்படும் நூல்.
விடுதலைப் போராட்டத்தில் பகத்சிங்குடும்பத்தினர் அனைவருமே பங்குபெற்றவர்கள். காந்தியின் அகிம்சை வழியைபின்பற்றியவர்கள். சிறிய வயதில் பகத் சிங்கும் காந்தியின் கொள்கையால் கவரப்பட்டு, பின்பற்றுகிறார். ஆனால் காந்தியால் ஒத்துழையாமை இயக்கம் திரும்பப் பெறப்பட்டபோது பகத்சிங் மனதில் சில கேள்விகள் எழுகின்றன, விடை கிடைக்காத காரணத்தால் புரட்சி வழியில் தன் விடுதலைப் போராட்டப் பாதையை அமைக்க வேண்டி, காந்தியை விட்டு விலகுகிறார்.
நாட்டு விடுதலையில் உறுதியாய் இருந்த பகத்சிங், தன்னுடைய பங்கைசெலுத்துவதில் தீவிரம் கொண்டிருந்தார். ஆங்கிலேயர்களால் தண்டனைக்கு உள்ளான பகத்சிங் சிறையில் அடைக்கப்பட்டு, தூக்குத் தண்டனைக்கு ஆளாகிறார். தூக்குத்தண்டனை கிடைத்தபோதும் சிறைச்சாலையில் உற்சாகமாகவே இருந்தவர்.
விடுதலைப் போராட்ட வீரர் லாலா லஜபதி ராயின் மரணத்திற்கு காரணமான ஆங்கிலேய அதிகாரியின் மீது குண்டு வீசிய குற்றத்திற்காகவும், நீதிமன்றம் மீது குண்டு எறிந்த குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்ட பகத்சிங், சிறையில் தன் தண்டனைக்கு வருந்தாமல், மற்ற விடுதலைப் போராட்ட சிறைக்கைதிகளோடு சுதந்திரப் போராட்டம் பற்றியும், தன்னுடைய நாத்திகக் கொள்கைப் பற்றிய விவாதத்திலும் ஈடுபடுகிறார். ரந்தீர் சிங் என்ற நபர் சிறையில் பகத்சிங்குடன் கலந்துரையாடலில் ஈடுபடும்போது, பகத்சிங் தீவிரமாக கடவுள் மறுப்புக் கொள்கையை பேசுகிறார்.
தன்னைவிட மூத்தவர்கள், விடுதலைப்போராட்ட வீரர்கள் என தன்னைச் சுற்றியிருப்பவர்கள் தன்னுடைய கவலையற்ற நிலையை, மனஉறுதியை அகந்தை எனத் தவறாக புரிந்து வைத்துள்ளமை குறித்து சரியான விளக்கம் சொல்ல வேண்டியது தன்னுடைய கடமை என்று கருதுகிறார்.
தன்னுடைய கடவுள் மறுப்புக் கொள்கையின் விளக்கத்தை அளிக்க விரும்புகிறார். எந்தச் சூழ்நிலையில் தனக்கு கடவுள் மறுப்புச் சிந்தனையில் தெளிவு ஏற்பட்டது, சிறைச்சாலையில் இருந்துகொண்டு தன்னுடைய நண்பருக்கு எழுதிய கடிதமே, பகத்சிங் தூக்கிலிடப்பட்ட பின்பும் நம்மோடு உரையாடிக் கொண்டே இருக்கும் நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற இக்கட்டுரை.
கடவுள் பக்தி உள்ள குடும்பத்தில் பிறந்து, சிறுவயதில் தானும் கடவுளை வழிபட்டு வந்ததை நினைவுகூர்கிறார். கல்லூரி படிப்பில் அடியெடுத்து வைக்கும்போதுதான், விடுதலைப் போராட்டங்களில் அதிகமாக பங்குபெறும்போது ஆங்கிலேயர்களின் கொடுமைகளால் அவதியுறும் மக்களின் துன்பங்களைப் பார்த்து, கடவுள் என ஒருவர் இருந்தால், நியாயமற்ற ஆங்கிலேயருக்கு தண்டனை அல்லவா தர வேண்டும்.
துன்பமில்லாத இன்பமான வாழ்க்கையை வாழ்பவர் என ஒருவரைக் கூட காணமுடியாத இச்சமூகத்தில் கடவுள் நம்பிக்கை எப்படி ஆழமாக வேர்விட்டுள்ளது. கடவுள் பற்றிய ஆழ்ந்த நம்பிக்கையில் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் உள்ளனர் என்றாலும், கடவுளின் இருப்பு குறித்த ஆழமான விசாரணையில் பகத்சிங் நுழைகிறார். ஏராளமான நூல்களை படிக்கிறார். தன்னுடைய கொள்கையில் தெளிவு பெறுகிறார்.
இறுதிக் காலத்தில் யாவருமே இறையடியை நாடுவர் என்ற தன் நண்பனின் கூற்றுக்கு, எக்காலத்திலும் எனக்கு நேரும் விளைவுகளுக்கு நானே காரணம் என்ற தெளிவில் இருப்பதால் ஒருகாலமும் இறைவனை நாடவே மாட்டேன் என்கிறார். அப்படியே இறக்கும்போது இருந்தார்.
தூக்குத் தண்டனை பெற்றபோதும், தன் இறப்பு, தான் செய்யும் தியாகம் இன்னும் ஏராளமான ஆண்களை, பெண்களை தேசத்திற்காக உயிர்விடும் தியாக உணர்வையே ஏற்படுத்தும். தன் செயல் நாட்டிற்கானது. சொர்க்கத்திற்கு செல்லும் வழியல்ல என்கிறார். பகத்சிங்கின் கட்டுரை அனைவருமே படித்தறிய வேண்டியது.
ஓங்கில் கூட்டம் வாயிலாக வளரிளம் பருவக் குழந்தைகளுக்காக, சிந்தனையைத் தூண்டும் புத்தகங்களைக் கொடுத்து வருகிறார் பஞ்சுமிட்டாய் பிரபு லண்டனில் பணிபுரியும் சிவசுப்ரமணியம் என்பவர் பகத்சிங் மீதும், தமிழ் இலக்கியம் மீதும் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்.நான் ஏன் நாத்திகன் ஆனேன் புத்தகம் சிவசுப்ரமணியத்தின் முதல்புத்தகம். குழந்தைகள் ஆர்வமுடன் வாசிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது.
- கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசுப்பள்ளி, திருப்புட்குழி, காஞ்சிபுரம் தொடர்புக்கு: udhayalakshmir@gmail.com