

குழந்தைகள் எளிமையானவர்கள். எளிமையை விரும்புவர்கள். எளிய பொருட்களை வைத்து விளையாட விரும்புவார்கள். அவர்களில் ஒருவராகப் பழகிப் பாருங்கள். எதையும் விளையாட்டுப் பொருளாக்கி விளையாட முடியும் என்ற உண்மையை உணர்வீர்கள்.
வண்டி நிறுத்தத்தில் கொடுக்கப் படும் வில்லைகள் (token) கொண்டு விளையாட்டாய் கற்பிக்கலாம். வில்லைகளைத் தரையில் பரப்பி விளையாடுவதை விரும்புகிறார்கள்.
வில்லைகளில் எண்கள் எழுதிக் குழந்தைகளிடம் கொடுக்கவும். அவர்கள் வரிசையாக அடுக்கி விளையாடத் தொடங்குவார்கள். அவர்களுடன் அமர்ந்து கொள்ளுங்கள். அவர்களில் ஒருவராக!
ஆசிரியராக எப்போதும் அதிகாரத் துடன் பழகாதீர்கள். குழந்தைகள் எந்த விளையாட்டிலும் இணைத்துக் கொள்ள மாட்டார்கள்.
குழந்தைகளை வெற்றுக் காலிக்குடங்களாகக் கருதினால், ஆசிரியர்கள் தோற்றுப் போவார்கள். நீங் களே காலிக்குடங்கள். அப்படியே செல்லுங்கள். ஏராளமான விளையாட்டுகளால் நிரப்புவார்கள். நாமும் இணைந்து விளையாடலாம். கற்றுக் கொடுக்கலாம். கற்றுக் கொள்ளலாம்.
குழந்தைகள் வில்லைகளைத் தரையில் பரப்பி வரிசையாக அடுக்குவார்கள். ஒன்று, இரண்டு, மூன்று என வரிசையாக அடுக்க கற்றுத்தரவும். இப்போது, விளையாட்டைத் தொடங்கலாம். இதனைக் குழு விளையாட்டாய் விளையாடலாம். குழந்தைகளை வெளியில் சென்று திரும்பச்செய்யவும். அந்தநேரம், வில்லைகளில் இருந்து ஒரு எண்ணை உருவி எடுத்துவிடவும். பின்பு, வரிசையாக அடுக்கி வைக்கவும்.
இப்போது அவர்களிடம் பாடல் பாடவும். “வில்லையில் ஒண்ணு காணலை. விரைந்து தேடிச் சொல்லு, அது எந்த எண்ணு கண்ணு?” அவர்கள் விரைவாக அடுக்கி வைப்பார்கள். எட்டு என்ற எண்ணைக் காணவில்லை எனக் கண்டுபிடித்தால், “வில்லையில் ஒண்ணு காணலை. விரைந்தே தேடினோம். அது எட்டு (8) கண்ணு. எட்டு கண்ணு.” என கூட்டமாகப் பாடிக் காட்டுவார்கள்.
வகுப்புகளுக்கு தகுந்து எண்கள் எழுதிய வில்லைகளை அடுக்கி வைத்து எண்கள் கற்றுத்தரலாம். 1001, 1002, 1003, 1004, 1005,… என எண்களின் பெயர்களைக் கூறியபடி அடுக்கச் செய்யலாம். இதனால், குழந்தைகள் எண் உருக்களை அறிந்து கொள்வார்கள். எண்களின் பெயர்களைக் கூறவும் செய்வார்கள்.
நூறு நூறாக அடுக்கச் செய்யலாம். ஒரு எண்ணின் பெயரைக் கூறி, அந்த எண் எழுதியுள்ள வில்லையை எடுக்கச் செய்யலாம். ஒரு மாணவர் எண் பெயரைக் கூறும் போது, மற்றொரு மாணவர் அதற்குரிய எண் உருவை எடுக்கச் செய்து இணை விளையாட்டகவும் விளையாடலாம்.
வில்லைகளை மொழிப்பாடங்களுக்கும் பயன்படுத்தலாம். வில்லைகளில் உயிரெழுத்துகள், மெய்யெழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள் எழுதிக் கொள்ளவும். ஒரு உயிர்மெய் எழுத்து எழுதிய வில்லையை எடுக்கச் செய்யவும். எந்த உயிரும், மெய்யும் இணைவதால் இந்த உயிர்மெய் எழுத்துக் கிடைக்கும் என கேட்க வேண்டும்.
ஆங்கில மொழிப்பாடத்திற்கு ஆங்கில எழுத்துக்கள் எழுதிய வில்லையை கொடுக்க வேண்டும். ஆங்கில உயிர் எழுத்துகள் ( a, e, i, o, u) எழுதிய வில்லைகள் அதிகம் தேவை. மாணவர்களின் எண்ணிக் கைக்கு தகுந்த குழுவாகப் பிரிக்க வேண்டும். அதற்கு தகுந்த எண்ணிக்கையில் வில்லைகளைக் கொடுக்கவேண்டும்.
இப்போது இரெழுத்து சொற்களை உருவாக்க வேண்டும்எனக் கூறவேண்டும். ஒவ்வொருவரும் போட்டிப்போட்டு அடுக்குவார்கள். IT, HE, WE, BE, … எனத் தொடர்வார்கள். அதிக எண்ணிக்கையில் சொற்களை உருவாக்கிய குழுவின் வெற்றியை கைதட்டிப் பாராட்டவும். மூன்று எழுத்து, நான்கெழுத்து சொற்கள் என குழுக்களுக்குத் தனித்தனியான செயல்பாடுகள் வழங்கி மொழித்திறனை வளர்க்க லாம்.